Namvazhvu
புதிய ஆயருடன் ஒரு நேர்காணல்
Thursday, 23 Nov 2023 07:31 am
Namvazhvu

Namvazhvu

‘நம் வாழ்வு இதழின் மேனாள் முதன்மை ஆசிரியர், மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுடன், இந்நாள் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் கண்ட நேர்காணல்:

● நம் வாழ்வின் முகமும், முகவரியுமான அன்புத் தந்தை அவர்களே, தாங்கள் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராகப் பொறுப்பேற்கும் இத்தருணத்தில், தமிழக ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியின் ‘நம் வாழ்வு’ குடும்பத்தின் சார்பாக எங்கள் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேர்காணல் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்குத் தங்களின் அழைத்தல், குருத்துவம், சமூக-இலக்கிய-இதழியல் பணி மற்றும் ஆயர் பணியின் சிறப்பினை எடுத்துக்கூறும் என நம்புகிறேன்.

ஆயர் அறிவிப்பு வந்தவுடன், குறிப்பாகத் தனது சொந்த மண்ணிற்கே நீங்கள் பொறுப்பேற்பது கண்டு உங்கள் மனநிலை என்ன?

“முதலில் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் நெஞ்சிற்கு நெருக்கமான ‘நம் வாழ்வு’ வார இதழின் வாசகப் பெருமக்களை இந்த நேர்காணல் வழியாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ள நம் வாழ்வின் எனது மேனாள் துணையாசிரியரும், இந்நாள் முதன்மை ஆசிரியருமான தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

கடந்த சில ஆண்டுகளாகப் பல மறைமாவட்டங்களுக்கு ஆயர் தேர்வு நேரத்தில், எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக அறிந்தேன். இத்தகைய சூழலில், சிவகங்கை மறைமாவட்டத்திற்கு இந்த அறிவிப்பு வந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். திருத்தந்தையின் இந்தியத் தூதர் அனுப்பி வைத்த ஆயர் தேர்வு அறிவிப்புக் கடிதத்தில், ‘சிவகங்கை மறைமாவட்டத்தில் பிறந்தவர்’ என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.

இது நான் பிறந்து, வளர்ந்த சொந்த மறைமாவட்டம். இம்மண்ணையும், மக்களையும் நன்கு அறிவேன். இது விசுவாசம் நிறைந்த மண்! புனித அருளானந்தர், அந்தோணி கிரிமினாலி, வேதபோதகர், சின்ன சவேரியார், தந்தை லூயி லெவே போன்றோர் மறைவளர்த்த புண்ணிய தளம் இது. தொட்டுத் தொடரும் இந்தப் பாரம்பரியத்தை வழிநடத்திச் செல்ல எனக்கு இறைவன் தந்த பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். ஆகவே, இம்மண்ணில் கத்தோலிக்க இறைச் சமூகத்தின் நம்பிக்கைக்கு வழிகாட்டியாகத் தலைமைப் பொறுப்பேற்பது பெரும் மகிழ்ச்சியும் பேருவுவகையும் தருகிறது.”

உங்கள் இறை நம்பிக்கைக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் இந்தச் செம்மண் பூமியாம் மறவ நாடு தந்த பங்களிப்பைக் கூறுங்களேன்...

“நான் குறிப்பிட்டது போல, இது தூய அருளானந்தரின் செந்நீரால் புனிதப்படுத்தப்பட்ட செம்மண் பூமி. அவருடைய மறைசாட்சியத்தால் ஆன்மிகம் ஆழமாக வேரூன்றிய தளம். மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் போன்ற வீர ஆளுமைகள் வாழ்ந்த பகுதி. ஆன்மிகமும், தேசியமும் ஒருங்கே வளர்ந்த பூமி இது.  ஒவ்வொரு கிராமமும் அத்தகைய சிறப்போடுதான் கட்டமைக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவரங்கமும் அப்படித்தான். இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில், என்னுடைய ஒரு முழு குணபாவத்தையும் அந்தக் கிராமம் எனக்குத் தந்தது என்று சொல்லலாம். அப்படி ஒரு கிராமத்தை இன்று பார்ப்பது கடினமாகி விட்டது. காரணம், இளைஞர்கள், வயது வந்தவர்கள் என்று பல பேர்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் வந்து வாழ்கின்றனர்.

அப்பொழுது கிராமங்களில் எல்லாரும் வாழ்வார்கள். அதனால், அது  உயிர்த் துடிப்புள்ள ஒரு கிராமமாக இருந்தது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட கிராமப் பங்கு அது. அதனால், அந்த ஒரு மரபு இருந்தது. அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில், பல சமூகங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால், எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  வாழ்ந்தார்கள். எல்லாருடனும்  அண்ணன்,  தம்பி, மாமன்,  மச்சான் என்று பழகிய ஒரு கிராமம் அது. அதனாலேயே எல்லாரையும்  என்னால் எளிதாக நம்ப முடிகிறது. சில இடங்களிலிருந்து வருகிறவர்களுக்கு அது கடினமாக இருந்ததை என் கல்லூரி நாள்களில் பார்த்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் எல்லாருடனும் பழகுவது எளிதாக இருந்தது;  எல்லாரையும் நம்புவது எளிதாக இருந்தது; எல்லாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதும் எளிதாக இருக்கிறது. எனவே, அத்தகைய ஒரு குணபாவத்தைக் கொடுத்தது என்னுடைய கிராமம், இம்மண்!”

தங்களது மாணவப் பருவ நினைவலைகள்...

“என்னுடைய திரு இருதய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனக்குக் கணிதம் கற்றுக் கொடுத்த மாணிக்கம் ஆசிரியர், எனக்கு வரலாறு கற்றுக் கொடுத்த சந்தியாகு ஆசிரியர் போன்றோர் பள்ளிக் கூடத்திற்கு வெளியேயும் பல திறமைகளில் வளர வழிகாட்டினார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என எல்லாப் போட்டிகளிலும் என்னைப் பங்கெடுக்கச் செய்தார்கள். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி ஒன்று எனக்குள் என்னைச் செதுக்கத் தூண்டியது. இந்தப் பயணம், அன்று பி.யூ.சி. என்று சொல்லப்பட்ட 11-ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது. அதன் பிறகு நான் குருமடத்தில் சேர்ந்தேன். எனது கல்லூரி வாழ்க்கை கருமாத்தூர் தூய அருளானந்தர் கல்லூரியில் தொடங்கியது.”

உங்களின் குருத்துவப் பயிற்சியில் மலரும் நினைவுகள் ஏதேனும் குறிப்பிடுங்களேன்?

“நான் இன்றுவரைக்கும் குருத்துவப் பயிற்சியிலேயே இருக்கிறவன். இப்பொழுது பயிற்சியாளனாக இருக்கிறேன். ஆனால், 37 ஆண்டுகளுக்கு முன்பு பத்து ஆண்டுகள் பயிற்சி பெறுபவனாக இருந்தேன். இறையியல் படிக்கும் காலங்களில் அடிக்கடி நான் சொல்வது ‘Our time is the best time’ என்பதுதான். இரண்டாம் வத்திக்கான்  திருச்சங்கத்தினுடைய  தாக்கங்கள் மலரத் தொடங்கிய காலம் அது. அப்போது குருமடப் பயிற்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, சுதந்திரமாகக் குரு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களாக எல்லாத் தளங்களிலும் இருந்தார்கள். அது நாங்கள் பெற்ற பெரும்பேறு! என்னுடைய பயிற்சியாளர்களாகத் தந்தை ஆஸ்வால்ட், தந்தை பால் லியோன், நம்முடைய பேராயர் அந்தோணி பாப்புசாமி ஆகியோரைக் கொண்டது பெரும் பாக்கியம்! Fr. பெர்க், Fr. சின்னதுரை, Fr. பெஸ், Fr. கொலோசோ, Fr. பெலிக்ஸ் வில்பர்ட், Fr. எரோணிமுஸ், Fr. Y. இருதயராஜ், Fr. X.T. செல்வராஜ் மற்றும் Fr. D. அல்போன்ஸ் போன்றோரும் எங்களுடைய இறையியல் பேராசிரியர்களாக இருந்தார்கள். இவர்கள் இறைஞானத்திலும், மறை அறிவிலும், ஆன்மிகத்திலும் ஆழமான புலமை கொண்டவர்கள்.

கருமாத்தூரில்  மெய்யியல் பயிலும்போது தந்தை முடுந்தகம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் நிறைய சுதந்திரம் கொடுப்பார். சில வேளைகளில் டென்ஷனாகி கத்துவார். ஆனால், மறு நிமிடமே கூப்பிட்டு அன்பாகப் பேசுவார். ‘டென்ஷன் ஆகக் கூடாது; டென்ஷனானாலும் உடனே கூலாகி விடணும்’ என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். எனது தத்துவவியல் பயிற்சிக் காலங்களில் நான் கோல்டு மெடலிஸ்ட்! என்னைப் பொறுத்தவரை உழைப்பு என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி! வெற்றி என்பது உழைக்கிறவனுடைய கனி! கடவுளுடைய அருள்! இரண்டாவது, உழைக்கிறவனுக்கு வெற்றிக்கனி தானாக வரும். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் முழுமையாகப் பங்கெடுக்க, நிறைவான பயிற்சி கொள்கிறோமா என்பதுதான் இங்கு கேள்வி.”

நீங்கள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவுடன் மேற்கொண்ட பணிகளைப் பற்றிக் குறிப்பிடுங்களேன்?

“முதலில் நான் குருவாக ஆன உடனேயே பேராயர் கஷ்மீர் அவர்களுடைய  செயலராக நியமிக்கப்பட்டேன். அப்போது நடந்த  சுவாரசியமான செய்தியைப் பற்றிக் கூறலாம் என்று நினைக்கிறேன்.  ஒருமுறை பேராயர் கஷ்மீர் அவர்களோடு இராயப்பன்பட்டிக்குக் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது பேராயர் என்னிடம் ‘Do you know how you became my Secretary?’ என்று கேட்டார். ‘டெஸ்க் ஒர்க் சரியாகச் செய்யக் கூடியவனாக இருந்ததால் என்னை நியமித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘You are not my choice; You are the choice of Fr. T.A. Soosai’ என்று சொன்னார். Fr. T. A. Soosai அவர்களை நான் மறக்கவே முடியாது. ரொம்ப அன்பானவர். ஆனால், அவர் மிகவும் கண்டிப்பானவர் என்று சொல்வார்கள். அவர் கண்டிப்பாக இருந்தாலும், மிகவும் அன்பாகவும் இருப்பார். குறிப்பாக, நல்ல மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார். அதாவது, பேராயர் கஷ்மீருக்கு நான் உறவினர். அதனால், இவர் வேண்டாம் என்று பேராயர் கூறியிருக்கிறார். ‘வேறு ஆள் இல்லை, இந்த batch-இல் இவரைத் தான் போடணும்; போடுங்கள்’ என்று சொல்லிப் போட வைத்திருக்கிறார். அதுவே அடுத்தப் பேராயர் வரும்போதும் நான் செயலராகத் தொடர்வதற்கான வாய்ப்பாக இருந்தது. அடுத்தப் பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிய வருகிறது. அதற்கு இடையில் மூன்று நூல்கள் எழுதியிருக்கிறேன். அதுவும் தொகுப்பு இறையியல் (Systematic Theology) சார்ந்தவை. அவர் இயல்பாக என்னிடம் ‘ஜெர்மனிக்குப் படிக்கப் போங்க. நான் கோட்டாறில் இருக்கும்போது கோட்டாறு மறைமாவட்டக் குருவுக்காக ஒரு ஸ்காலர்ஷிப் ரிசர்வ் செய்து வைத்தேன். இப்ப இங்கே வந்து விட்டேன். அதனால் நீங்க வந்து ‘வாங்கிட்டுப் போங்க’ அப்படின்னு சொல்லிக் கொடுத்தார். இவையெல்லாம் இயல்பாக நிகழ்ந்தவை. பங்கு அனுபவத்திற்குப் பிறகு படிக்கச் செல்லலாம் என்று தயங்கினேன். ஆனால், பேராயர் வழிகாட்டுதலோடு எனது பேராசிரியர் தெ. அல்போன்ஸ் அவர்களைச் சந்தித் துத் தெளிவு பெற்று, படிக்கச் சென்றேன். அப்பொழுது தந்தை அவர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு அனுபவம் இருக்கிறதால்தான் பேராயரே உங்களைத் தேர்வு செய்திருக்கிறார். படிக்கிறதற்கு இதுதான் சரியான வயது. இன்னும் இரண்டு வருடமானால் மூளை வயதாகி விடும். படிக்க முடியாது’ என்று கூறினார். அவர் கூறியது அருமையாக இருந்தது. இன்றைக்கும் என்னுடைய ஜெர்மன் மொழிப்பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கும்! அங்கே சென்றால்  ஜெர்மனியில் பிரசங்கம் வைப்பேன். இதற்கெல்லாம் காரணம், குறிப்பிட்ட நேரத்தில் பேராயர்கள் வழியாகக் கடவுள் என்னை அனுப்பி வைத்தார் என்பதுதான். அங்கே ஏழு வருடங்கள் Greek, Hebrew, Latin கற்ற பிறகு ஜெர்மனியில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றேன்.”

குருத்துவத்தின் முழுமையைப் பெற்ற நீங்கள், தொடர இருக்கும் ஆயர் பணியின் விருதுவாக்கைப் பற்றிக் கூறுங்களேன்?

“உண்மையினால் அர்ச்சிக்கப் பெறும்படி,  என்னையே நான் அர்ச்சனையாக்குகிறேன்’ (யோவா 17:19). இது ஆண்டவர் இயேசுவினுடைய  வார்த்தைகள். அவருடைய குருத்துவ செபத்தின் சாரம். To be consecrated by truth or in truth. அதுதான் என்னுடைய குருப்பட்டத்தின்  விருதுவாக்காகவும் இருந்தது. அதையே இப்பொழுது ஆயர் நிலையின் விருதுவாக்காகவும் எடுத்திருக்கிறேன். அதற்கு நிறைய பொருள் கூறலாம். நான் வழக்கமாக இதைப் பற்றி நிறைய சிந்தித்திருக்கிறவன். ‘உண்மையா அது என்ன?’ அப்படின்னு பிலாத்து கேட்கிறான். ஆண்டவர் இயேசு அதற்கு மேலே ஒன்றும் கூறவில்லை. ‘நான் உண்மைக்குச் சான்று பகிர வந்தேன்’ என்று கூறினார். அந்த உண்மைக்குச் சான்று பகர்பவர் யார்? யாருக்குச் சான்று பகர்பவர்? தந்தையாம் கடவுளுக்குச் சான்று பகர்பவராக வந்தார். எனவே, கடவுள்தாம் பேருண்மை! அந்தப் பேருண்மைக்குச் சான்று கொடுத்தவர். அந்தக் கடவுள் என்ற பேருண்மையைத்தான் பல்வேறு விதங்களிலே வெளிப்படுத்துகிறது.

தமிழில் உண்மைக்கு மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. வாய்மை, மெய்மை, உண்மை. அதற்கு நம்முடைய நினைவில் வாழும் பேராசிரியர் தந்தை Y. இருதயராஜ் கூறுவார், ‘அதாவது உள்ளத்திலிருந்து வருவது உண்மை; வாயிலிருந்து வெளிப்படுவது வாய்மை; மெய் (உடம்பு)யிலிருந்து வெளிப்படுவது  மெய்மை’ என்று. இப்படி அது எல்லாக் குணங்களிலும் வெளிப்படும். அந்த உண்மை என்பதுதான் கடவுள்! மற்றவை எல்லாமே அதற்குப் பிறகு, அதோடு இணைந்து கொள்வதுதான். எனவே இப்படி ‘உண்மைக்குச் சான்று பகர அல்லது உண்மையினால் அர்ச்சிக்கப்பெறும்படி’ இதுதான் என்னுடைய விருதுவாக்கு.”

பேராசிரியர், வழிகாட்டி, இறையியலாளர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர், அருள்கலைஞர், பெருங்கொடையாளர் எனப் பல்வேறு நிலைகளில்  அறியப்பட்ட நீங்கள், ஆயர் நிலையில் இப்பணிகளை இன்னும் தொடர்வீர்கள் என்று எண்ணலாமா?

“கண்டிப்பாக! 37 ஆண்டுகள் குருத்துவப் பணியின் வீச்சு குறையாது, இப்பணிகளில் ஈடுபட வழிகாட்டிய இறைவன், அதைப் பெரிய அளவில் தொடர இந்நிலைக்கு என்னைத் தேர்ந்து கொண்டிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.  நலிவுற்றவர்கள் உயர்வு பெற, ஏழைகள் நிறைவு பெற, வழிதேடுவோர்க்கு வழிகாட்ட, இறைவன் இன்னும் எனக்குத் துணை செய்வார் என்றே நம்புகிறேன். இப்பணிகள் இனி தனி மனிதனாக மட்டுமல்லாமல், என் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், நல்மனம் கொண்டோர் எனப் பலருடைய துணையோடு இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதுதான் என் நம்பிக்கை.”

சிவகங்கை மறைத்தளத்திற்காகத் தாங்கள் காணும் கனவு?

“ஒருசில கனவுகளை என்னுடைய அருள்பொழிவு நாளில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன். ஆயினும் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்காக முன்கூட்டியே அதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். முதலாவதாக, மறைமாவட்ட ஆயர் என்பவர் அப்பகுதியின் சமயத் தலைவர் (Religious Leader). அவர் சமயப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே, எம் மறைமாவட்ட மக்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்துவது, அவர்களை ஒன்றுபடுத்துவது, நற்பணிகளைச் செயல்படுத்துவது... இத்தகைய வழிமுறையில் விசுவாசத்தில் சிறந்த மறைமாவட்டமாக, ஒரு முன்மாதிரியான மறைமாவட்டமாக அதை மாற்றுவது. குறிப்பாக, பல நபர்கள் இந்நாள்களில் என்னிடம் கூறுவது ‘நமது பகுதியில் மழையில்லை. பெரும் வறட்சி... இதற்கு ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஓரியூர் திருயாத்திரை அங்கு நிகழாதது ஒரு காரணமோ?’ என்று கவலை கொள்கின்றனர்.  மதுரை, சிவகங்கை மறைமாவட்ட இறைமக்களின் நம்பிக்கை, ஓரியூரில் புடமிடப்படுவது ஆண்டு தோறும் நிகழும் வரலாற்றுப் பதிவு. அத்தகைய நிகழ்வு தொடர வாய்ப்புகளை விரைவில் உருவாக்குவது. மறைவட்ட அளவில் செபக்கூடுகை நிகழ்வுகள், இறைவார்த்தை அறிவிப்பு நிகழ்வுகள், இறை நம்பிக்கைப் பகிர்வுக் கொண்டாட்டங்கள், அருள் வாழ்வு புத்தாக்க எழுச்சி மாநாடுகள்  போன்ற நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்வது. அருள்பணியாளர்களை நுட்பமாக வழிகாட்டி, பங்கு மறைப்பணித் திட்டங்கள் (Parish Pastoral Plans) மேற்கொள்ள ஆவன செய்வது என ஒருசிலவற்றை நான் இங்கு குறிப்பிடலாம்.

இரண்டாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலை மாற்றுவதற்குப் பல்நோக்கு சமூக சேவை மையத்தோடு இணைந்து திட்டங்களை முன்னெடுப்பது. குறிப்பாக, ஏழை மாணவ-மாணவியருக்குக் கல்வி முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவது. மூன்றாவதாக, கணினித் துறை மற்றும் வேலை வாய்ப்புகளுக்காகப் பலரும் நகர்புறம் நோக்கி நகர்வதால், கிராமங்கள் முதியோர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பிள்ளைகள் வாழ்வதால், சில கிராமங்களில் முதியோர் குடும்பத்தாரின் ஆதரவின்றி இருப்பதையும் அறிய வருகிறேன். அத்தகையோருக்கு ‘Mid-day meals kitchen’ அதாவது, பகுதிகள் தோறும் சமூகத் தன்னார்வப் பணியாளர்களைக் கொண்டு உணவு வழங்க ஏற்பாடு செய்வது. நான்காவதாக, நீண்ட கடற்கரை பகுதிகளைக் கொண்ட சிவகங்கை மறைத்தளத்தில் மீனவச் சமூகத்திற்கு ஏற்படும் அசாதாரண சூழலுக்கு, அரசியல் பங்களிப்புடன் சுமூக நிலை ஏற்பட முன்னெடுப்புகளைத் தொடர்வது.  ஐந்தாவது, அதிகமான பனை ஏறும் தொழில் செய்யும் மக்களைக் கொண்ட இம்மறைமாவட்டத்தில், அம்மக்களுக்கான சமூக-பொருளாதார ஏற்றத்திற்குப் புதிய திட்டங்களை வகுப்பது. எல்லாவற்றிக்கும் மேலாக, ‘புதிய பேராலயக் கட்டுமான பணி’ எனும் பலருடைய விருப்பத்தை நிறைவேற்ற உடனடியாக ஆவன செய்வது... என்பன எனது கனவாக இருக்கின்றன.

ஆகவே, எனது கனவு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை விசுவாசத்தளத்தில் பூர்த்தி செய்வது என்பதாகும். வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்லாமல், மக்களை இறைச்சமூகமாகக் கட்டியெழுப்புவதே எனது கனவாக இருக்கிறது. இக்கனவு மெய்ப்பட என் உடன் உழைப்பாளர்களான குருக்கள், துறவறத்தார், மற்றும் பொது நிலையினர் அனைவரையும் இப்பணிகளில் ஈடுபடுத்தி, ஒருங்கிணைந்த இறைச்சமூகமாக எம் மறைத்தளத்தை மலரச் செய்வதே எமது கனவு.”

சிவகங்கை தலத் திரு அவைக்குத் தாங்கள் விடுக்கும் அழைப்பு?

“ஒவ்வொரு மறைத்தளமும் ஒரு குட்டித் திரு அவை (local Church). அது கூட்டொருங்கியக்கத் திரு அவையாக மலர வேண்டும் என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பேராவல். ஏற்கெனவே இறைச் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற இந்தக் கருத்தியல் செயலாக்கம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. ஆயர் என்பவர் இயேசுவின் தலைமைத்துவத்தைத் தன்வயப்படுத்துகிறவர். இயேசுவின் தலைமைத்துவம் என்பது Steward Leadership (காக்கின்ற தலைமைத்துவம்); Servant Leadership (பணிபுரியும் தலைமைத்துவம்); Shepherding Leadership (வழிநடத்தும் தலைமைத்துவம்) என்பதாகும். அதாவது, ஆயர்  என்பவர் ஒரு தலைவர். He should... Know the way; Show the way; and Go the way. அத்தகைய தலைமைத்துவ வாழ்வியலையே முன்னெடுக்க விரும்புகிறேன். என் மக்களுக்கான பாதையை அறியவும், நல்வழியைக் காட்டவும், அங்கே முன்சென்று வழிநடத்தவுமே விரும்புகிறேன்.”

நம் வாழ்வு’ முதன்மை ஆசிரியராக, அதன் பதிப்பாளராக தாங்கள் ஆற்றிய இதழியல் பணியைத் தமிழகத் திரு அவை நன்கு அறியும். தற்போது இத்திரு அவையின் ஆயராக, ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்குத் தாங்கள் விடுக்கும் அழைப்பு என்ன?

“என்னுடைய குருத்துவப் பணி வாழ்வில் ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் பணியாற்றியது மறக்க முடியாத தருணம். இவ்விதழைப் பரவலாக்க பல முயற்சிகள் மேற்கொண்டு, துணையாசிரியர்களை உருவாக்கி, அவர்களிடமே தலைமைப் பொறுப்பையும் ஒப்படைத்தது பெரும் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. எனது துணை ஆசிரியர்கள் அதன் தலைமைப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைத் தொடர்ந்து வருவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்  என்னவெனில், இவ்விதழின் நோக்கம் தங்களுக்குத் தெளிவுற வேண்டும் என்பதே! ஆன்மிகம், உளவியல், அன்றாடச் செய்திகள் எனப் பல காணப்பட்டாலும், சரியான அரசியல் நிலைப்பாட்டை, விழிப்புணர்வைக் கிறிஸ்தவ மக்களுக்கு வழங்குவதையே இவ்விதழ் நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதுதான். கிறிஸ்தவத்தை அரசியலுக்கும், அரசியலைக் கிறிஸ்தவத்திற்கும் கொண்டு செல்லும் பாலமாக இது அமைய வேண்டும் என்பதுதான். இதற்காகவே இந்த இதழ் தொடங்கப்பட்டது. இந்நோக்கம் எனது காலத்தில் கூர்மைப்படுத்தப்பட்டது என்றே நான் நம்புகிறேன். அது மீண்டும் அருமையாக இன்று தொடர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது இவ்விதழ் மீண்டும் புதுப்பொலிவோடு தரமாக வெளிவருவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவதுபோல் நானும் பேரானந்தம் அடைகிறேன். இப்பணி தொடர உளமார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் ஆசீரை வழங்குகிறேன்.”

அன்பு ஆயர் அவர்களே, தங்களின் தெளிந்த நீரோடையான சிந்தனை, வாசகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. தங்கள் ஆயர் பணிகளும், தங்களின் ஆளுமைப் பணிகளும் தொடர்ந்திட, அவை சிறந்திட, திரு அவை மகிழ்ந்திட ‘நம் வாழ்வு’ சார்பாக  மனதார நான் வாழ்த்துகிறேன்.