Namvazhvu
பா.ஜ.க.வின் தலையீடு: நீதித்துறை முதல் விளையாட்டுத் துறை வரை!
Tuesday, 28 Nov 2023 09:41 am

Namvazhvu

இந்தியத் திருநாட்டின் பெருமையே, மாமேதை அறிவர் அம்பேத்கர் வகுத்தளித்த நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுதான். மிகச்சிறந்த மனித உரிமை ஆவணமாக நம் தேசச் சிற்பிகள் வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். ‘அரசனும், ஆண்டியும் ஆண்டவன் முன் சமமே!’ என்பது போல, இந்தியாவின் பிரதமராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, இருவருமே சட்டத்தின் முன் சமமே என உறுதிப்படுத்துகிறது இந்தச் சட்ட வரைவு. நமது நாட்டை யார் ஆண்டாலும் சமத்துவத்தை, சமநீதியை வலியுறுத்தும் சட்டத்தின் வழிநின்றே ஆட்சி செய்ய வேண்டும்  என்பதே இதில் பொதிந்திருக்கும் பேருண்மை.

ஆயினும், இன்று நீதிக்கும், நடைமுறை அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நீடிக்கிறது. அரசியல் அதிகாரமும், பண பலமும் படைத்தோர் நீதியையே நிதி கொண்டு தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.  நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதால், நீதிமன்றங்களில் என்ன நடக்கிறது என்பதை அத்தேவதை அறிய வாய்ப்பில்லாததால் தனிமனிதச் சுயநலங்கள், நீதி அரசர்கள் தங்களைப் பரிந்துரை செய்த ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிடையே மாட்டிக் கொண்டு, அவர்களுக்குச் சாதகமாக வளைந்து கொடுக்கின்றனர்; இது சாமானியரை விழி பிதுங்க வைக்கின்றது. வழி காட்டும் விளக்காக இருக்க வேண்டிய சட்டங்கள், நமக்கு இருட்டறைகளாக மாறிப் போவதுதான் வேதனையிலும் வேதனை! ‘சட்டம் ஓர் இருட்டறை’ என அறிஞர் அண்ணா கூறியது இதற்காகத்தானோ!

‘சட்டம் இல்லாமல் நம்மால் வாழ முடியாதா?’ என்ற கேள்விக்கு, ‘முடியாது’ என்ற ஒரே பதில்தான் இருக்க முடியும். “ஒவ்வொரு குடிமகனும் தன் சுதந்திரத்தை, தன் உரிமைகளை அனுபவித்து, ஒரு நாட்டில் பாதுகாப்போடு வாழ வழி வகுப்பதே சட்டம். ஆனால், அதே சட்டத்தின் பாதுகாப்புடன் சுதந்திரமும், உரிமைகளும் மறுக்கப்படுவது தான் மிகவும் வருந்தத்தக்கது. நம் விரலை வைத்தே நம் கண்களைக் குருடாக்குவதுபோல, சட்டத்தை வைத்தே சனநாயகப் படுகொலை செய்கிற வரலாறு இங்கே தொடர்கிறது” என்று கூறும் நீதியரசர் சந்துரு அவர்களின் கூற்று இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கதே!

சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள், அதை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினர், அதைக் கண்காணித்து நீதி வழங்குகின்ற நீதிமன்றங்கள், நமக்கு நீதி உறுதியாகக் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு வாழ்கிற மக்கள் எனச் சட்டம் ஒரு ‘சதுர’ வடிவம் கொண்டது. ஆனால், அது இன்று ‘சதுரங்க’ ஆட்டமானதுதான் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் அளிக்கின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் மூன்று மசோதாக்களை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த ஆகஸ்டு 11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal code – I.P.C) 1860 -ஐ மாற்றம் செய்ய, ‘பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மசோதா 2023’ என்ற மசோதாவையும், குற்றவியல் நடை முறைச் சட்டம் (Criminal Procedure Act – CPA) 1998-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக சரக்க்ஷா சம்ஹிதா (BNSS) மசோதா 2023’ என்ற மசோதாவையும், இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act – I.E.A) 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக் ஷிய (BS) மசோதா 2023’ என்ற மசோதாவையும் புதிய சட்டங்களாக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.  எதிர் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆளும் பா.ஜ.க. அரசின் கடைசி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்…வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அச்சமயம் இச்சட்டங்களை முழுமையாக நிறைவேற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பா.ஜ.க. அரசு அதிரடியாகக் கொண்டு வந்திருக்கும் இந்த மசோதாக்களில் ஆபத்தான, சூழ்ச்சி கொண்ட சூழல்களும், உட்கூறுகளும் அதிகம் இடம் பெற்றிருப்பதாகச் சட்ட வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்து வரும் சூழலில், இது ஒன்றிய அரசின் நயவஞ்சக தந்திர வேலை என்பதும், அரசியல் போட்டியாளர்களை, எதிர்க்கட்சிகளை, ‘எதிர் கருத்தியல்’ மேற்கொள்பவர்களை அச்சுறுத்துவதற்கும், அடக்கி ஒடுக்குவதற்கும், அவர்களை எப்போதும் குற்றப் பின்னணி உடையவர்களாக அடையாளப்படுத்துவதற்கும் சூழ்ச்சியாகப் பயன்படுத்தப்பட உள்ள கருவியாகவுமே நாம் கருதுகிறோம்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்கள், குற்றவியல் நிபுணர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் விவாதத்திற்கு இந்த மசோதாக்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவற்றுக்கெல்லாம் செவிமடுக்காமல், எந்தவொரு விவாதமுமின்றி, பேராபத்து நிறைந்த இந்த மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு எத்தனிக்கிறது.

நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் பெரிதும் தலையிடும் இந்தப் பா.ஜ.க. அரசு, தேர்தல் ஆணையத்தையும் தன் கைப்பாவையாக ஆக்க முயற்சிக்கும் சூழ்ச்சி இப்போது வெளியாகி, மக்கள் மன்றத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான ஓர் உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச், 2023 அன்று பிறப்பித்திருந்தது. அதாவது, ‘பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் ஆலோசனைப்படியே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் நியமிக்கப்பட வேண்டும்’ என்பதே நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு.

இந்த உத்தரவு பா.ஜ.க. அரசுக்கு இசைவானதாக இல்லாததால், தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாகக் கேபினட் அமைச்சர் ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்று திருத்தி அமைக்கப்பட்ட மசோதா கடந்த மழைக் காலக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அதுவும் நிறைவேற்றப்படும் சூழ லில், தேர்தல் ஆணையம் முழுமையாகப் பா.ஜ.க.வின் கைப்பாவையாகவே மாறிவிடும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது.

நீதித்துறையில்தான் இத்தகைய தலையீடு என்றால், விளையாட்டுத் துறையையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அண்மையில் நடந்தேறிய உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் இதற்குச் சாட்சிகள். விளையாட்டை விளையாட்டாக, போட்டிகளைப் போட்டிகளாகப் பார்க்க வேண்டியவர்கள் அதற்குள் அரசியலையும், மதத்தையும் சேர்த்துப் பார்த்ததால், இன்று உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கிறது இந்தியா. “இறுதிப் போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால்... ஐய்யய்யோ!” என்று புருவம் உயர்த்தும் நபர்களின் விமர்சனங்களும் நமது காதுகளை எட்டுகின்றன.

“கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி” என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் கேப்டனின் ஒற்றை வரிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களின் வலியும், மன அழுத்தமும் நமக்குப் புரிகின்றது. இவர்களின் வெற்றி-பூசைகள், ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள், சாதகங்கள், பதவிகள், பணம், பந்தயம், சொந்த மண், பெரிய படைபலம் போன்றவைமீது விழுந்த பெரிய அடி! இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய சக வீரர்களைத் தோற்கடிக்கவில்லை. மாறாக, இந்தியாவின் அண்மைக்கால ஒற்றை மையத்தன்மையின் போக்கைத் தோற்கடித்திருக்கிறது; தனிமனிதத் துதியைத் தோற்கடித்திருக்கிறது;  பா.ஜ.க.வின் கேவலமான மத அரசியலைத் தோற்கடித்திருக்கிறது. இந்தத் தோல்வி எதிர்வரும் தேர்தலிலும் தொடரும் என்பதே நல்மனம் கொண்டோரின் நம்பிக்கை.

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்