நான் அண்மையில் வாசித்த ஆங்கிலப் புத்தகம். இப்புத்தகம் எல்சால்வதோர் நாட்டின் மறைசாட்சி, புனித ஆஸ்கார் ரோமெரோவின் அன்பு நண்பர் அருளாளர் ரூட்டிலியோ கிராந்தேவின் வாழ்வு, பணி, ஆன்மிகம் மற்றும் அர்ப்பணம் பற்றிய அற்புதமான படைப்பு!
இறுதிவரை இயேசுவின் இறையாட்சிக்காய் உறுதியுடன் வாழ்ந்தவரின் எண்ணம், மனநிலை, சிந்தனை, கனவுகள், இறையியல், பணி வாழ்வு ஆகியவற்றை நம் கண் முன்னால் அப்படியே தத்ரூபமாகப் படம்பிடித்து காட்டும் அருமையான ஓர் எழுத்தோவியம்!
விளிம்பு நிலை மக்களோடு, ஏழை விவசாயத் தொழிலாளர்களோடு, ஆதிக்கக் குடும்பங்களால் ஒடுக்கப்பட்ட பதினான்கு அடித்தட்டு மக்களோடு இணைந்து பயணித்த ஓர் இயேசு சபை அருள்பணியாளரின் அர்ப்பணம் நிறைந்த ஆன்மிகத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் புத்தகம்! வரலாற்றில் பிறந்து, மக்களோடு மக்களாக வளர்ந்த, வாழ்ந்த வரலாற்று இயேசுவின் (Historical Jesus) இறையாட்சியை இப்பூமியில் மலரச் செய்ய உயிர் கொடுத்த சிறந்த சீடனின் வாழ்க்கை வரலாறு மற்றும் இறையியல் சிந்தனைகள் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறிய கருத்துகளை உள்வாங்கி, அவருடைய சமுக, பொருளாதார, அரசியல் சூழலில் நடைமுறைபடுத்த பெரும் முயற்சி செய்தவர் ரூட்டிலோ கிராந்தே. அடித்தளக் கிறிஸ்தவ மக்கள் குழுக்களை உருவாக்கி, மக்கள் ஆற்றல் பெறச் செய்ததை இப்புத்தகம் அழகாக எடுத்துரைக்கின்றது. இலத்தீன் அமெரிக்க சூழலில் விடுதலை இறையியலை (Liberation Theology) வாழ்வாக்கியவர் ரூடிலோ. குருத்துவ இல்லப் பேராசிரியராக விளிம்பு நிலை மக்களோடு தங்கி, வாழ்ந்து, பயிற்சி பெற, இறையியலாக்கம் புரிய வழிகாட்டியவர். ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து, அவர்களின் விடுதலை மற்றும் வாழ்வுக்காய் போராடுவது குருத்துவப் பணியின் முக்கிய அம்சம் என்று சொன்னவர், வாழ்ந்து காட்டியவர். காலத்தின் அறிகுறிகளை அறிந்து, சமுக, பொருளாதார, அரசியல் ஈடுபாடு கொண்டு வாழ அழைப்பு விடுத்தவர். இவர் விரைவில் புனிதராக உயர்த்தப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைய காலத்திற்கு ஏற்ப இறையாட்சிப் பணிபுரிய வழிகாட்டுவதோடு, பணியில் எழும் சவால்களை எதிர்கொள்ளத் துணிவையும், ஆற்றலையும் தரும் புத்தகம்.
பங்கில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, விவிலிய அடிப்படையில் இணைந்து சிந்திக்க வழிகாட்டியதோடு, உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் வழிகாட்டுகிறார் ரூட்டில்லோ. திரு அவையில் பொதுநிலையினரோடு இணைந்து பயணிக்கவும் வழிகாட்டியவர். இன்றைய சூழலில் அருள்பணியாளர்களுக்கான ஒரு முன்மாதிரி (Role model), பாதுகாவலர் (Patron) ரூட்டிலோ கிராந்தே. இயேசுவின் இறையாட்சி பணிபுரிய விரும்பும் அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் வாசித்து உள்வாங்க வேண்டிய அழகான புத்தகம்!