Namvazhvu
மையம் விளிம்பாக, விளிம்புகள் மையங்களாக! மாமன்ற 16-வது பொது அமர்வின் முதல் கூடுகை மீள்பார்வை
Thursday, 30 Nov 2023 09:24 am
Namvazhvu

Namvazhvu

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடி வந்த ஆகாரைப் பாலைநிலத்தில் எதிர்கொள்கிற வானதூதர் அவரிடம், ‘எங்கிருந்து வருகிறாய்?’, ‘எங்கே செல்கிறாய்?’ என்று இரண்டு கேள்விகள் கேட்கின்றார் (காண். தொநூ 16:8). முதல் கேள்விக்கு மட்டுமே விடை அறிந்திருக்கிறார் ஆகார். தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடி வருவதாகச் சொல்கிறார். எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் நின்ற ஆகாரைத் தன் தலைவியின் இல்லம் நோக்கித் திரும்பச் சொல்கிறார் வானதூதர்.

கூட்டியக்கத்துக்கான மாமன்றத்தின் 16-வது பொது அமர்வின் முதல் கூடுகை முடிந்திருக்கும் இந்நேரம், நம்மில் எழுகிற கேள்விகளும் இவையே: ‘எங்கிருந்து வருகிறாய்?’, ‘எங்கே செல்கிறாய்?’ ‘எங்கிருந்து வந்துள்ளோம்?’ எனும் கேள்விக்கு, மாமன்றத்தில் பங்கேற்றவர்கள் புன்னகையுடன், ‘நாங்கள் உரோமையிலிருந்து வந்துள்ளோம்!’ எனப் பதில் தருவார்கள். ‘எங்கே செல்கிறோம்?’ எனும் கேள்விக்கு, ‘மீண்டும் உரோமை செல்கிறோம்’ என்பார்கள். மற்றவர்களாகிய நாம், ‘நம் இல்லத்திலிருந்து வந்தோம்! நம் இல்லத்திற்கே செல்கிறோம்!’ ஆகார் பகர்ந்த விடைகளே நம் விடைகள்.

1. பொது அமர்வின் முதல் கூடுகையின் சிறப்பம்சங்கள்

மாமன்றப் பொது அமர்வின் முதல் கூடுகைக்குச் சென்றவர்கள் இதற்கு முன்னர் நடந்த அமர்வுகளுக்கும், இந்த அமர்வுக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை ஒருசேர மொழிகிறார்கள்: ‘முந்தைய மாமன்றங்களில் ஆயர்கள் மட்டுமே கூடினர். இந்த மாமன்றத்தில் ஆயரல்லாதவர்களும் - அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், இளைஞர்-இளம்பெண்கள் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்கள் ஓட்டுரிமையும் பெற்றிருந்தனர். முந்தைய மாமன்றங்கள் வெறும் நிகழ்வுகளாக (events) அமைந்தன. இந்த மாமன்றமோ ஓர் அனுபவமாக (experience) இருந்தது. முந்தைய மாமன்றங்கள் இறுதியில் வெளிவரக்கூடிய ஏட்டை (product) மையப்படுத்தியதாக இருந்தன. இந்த மாமன்றமோ செயல்பாட்டு முறைக்கே (process) முக்கியத்துவம் கொடுத்தது.

இந்த மாமன்றப் பொது அமர்வு நடத்தப்பட்ட முறையில் மூன்று கூறுகள் பாராட்டுதற்குரியவை:

அ) ஆவியாரில் உரையாடுதல் (conversation in the Spirit) - ஒருவர் பேச, அறையில் உள்ள யாவரும் கேட்க எனும் நிலை மாறி, யாவரும் பேச, யாவரும் கேட்கலாம் என உறுப்பினர்கள் சிறிய குழுக்களாக அமர்த்தப்பட்டார்கள். மேலும், பேசிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக, ஒருவர் மற்றவருக்குச் செவிகொடுக்கவும், செவிகொடுத்ததைப் புரிந்து கொள்ளவும், புரிந்துகொண்ட பின்னர் அமைதி காக்கவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

ஆ) திருமுழுக்கு அடையாளத்தை மையப் படுத்திய ஒன்றிப்பு (Communion through Baptismal identity) - உலகின் பல பகுதிகளிலிருந்தும், பின்புலங்களிலிருந்தும் வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும், தாங்கள் பெற்றிருக்கும் திருமுழுக்கு எனும் அடையாளத்தை மட்டுமே மையமாக வைத்து ஒன்றுகூடினர். படிநிலை அல்லது அமைப்பு ரீதியான எந்த வேறுபாடும் பார்க்கவில்லை. மேலும், திருமுழுக்குத் தண்ணீரை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய இவர்கள், போரினாலும், சுற்றுச்சூழல் அழிவுகளாலும் மானுடமும், இயற்கையும் வடிக்கும் கண்ணீரையும் நினைவுகூர்ந்தனர்.

இ) நிரப்புநிலை அல்லது இணைவுநிலை (Complementarity) - ஆன்மிக வழிகாட்டுதல்கள் அருள்தந்தை ஒருவராலும், அருள்சகோதரி ஒருவராலும் வழங்கப்பட்டன (பாலின நிரப்புநிலை). அமர்வுகளில் அமைதியும், உரையாடலும் ஒன்றோடொன்று இணைந்து சென்றன. படிநிலை அருளும், அருங்கொடை அருளும் ஒன்றோடொன்று பொருந்தி நின்றன.

2. முதல் அமர்வின் மைல் கற்கள்

30.09.23               திருவிழிப்பு இறைவேண்டல்

1 to 3.10.23          மூன்று நாள் தியானம்

03.10.23               ‘கடவுளைப் புகழுங்கள்’

                              (Laudate Deum)

                            திருத்தூது ஊக்கவுரை வெளியீடு

04.10.23               மாமன்றத் தொடக்கத் திருப்பலி. ‘இயேசுவின் பார்வை’ எனும்

                             மையப்பொருளில் மறையுரை

4 to 28.10.23       பொது குழுமங்கள் செயல்பாட்டுக் குழுக்கள்

12.10.23               திருப்பயணம்

  15.10.23               ‘அது பற்றுறுதியே!’ குழந்தை இயேசுவின் புனித தெரசா பற்றிய      திருத்தூது மடல்

  19.10.23             புலம்பெயர்ந்தோர் மற்றும் அடைக்கலம் நாடுவோருக்கான இறைவேண்டல்.                  

22.10.23               நற்செய்தி அறிவிப்புக்கான  உலக நாள்

26.10.23               அமைதிக்கான செபமாலை இறைவேண்டல்

26.10.23               இறைமக்களுக்கான மடல்.  மாமன்ற உறுப்பினர்களிடமிருந்து!

28.10.23               கருத்துத் தொகுப்பு அறிக்கை கையெழுத்திடப்படவில்லை!  

29.10.23             மாமன்ற நிறைவுத் திருப்பலி ‘கடவுளை ஆராதிப்பதும்,     அடுத்திருப்பவர்களுக்கு அன்பில் பணி செய்வதும்’ எனும் மையக்கருத்து  

                           அக்டோபர் 2024-ஐ நோக்கி

மறைமாவட்டங்களில், ஆயர் பேரவைகளில், ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பில் தொடர் சிந்தனை.

3. கருத்துத் தொகுப்பு அறிக்கை சுருக்கம்

பொது அமர்வின் முதல் கூடுகையில் ஓட்டெடுப்பு வழியாக உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற ‘41 பக்கக் கருத்துத் தொகுப்பு அறிக்கை’, ‘மறைத்தூதுப் பணியில் கூட்டியக்கத் திரு அவை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. மூன்று பகுதிகளும் ‘தோழமை, பணி, பங்கேற்பு’ (Communion - mission - participation) எனும் மாமன்ற இலக்கிய வாக்கியச் சொல்லாடல்களின் விளக்கவுரைகளாக அமைந்துள்ளன.

பகுதி ஒன்று (அலகுகள் 1-7), ‘கூட்டியக்கத் திரு அவையின் முகம்’ எனும் தலைப்பில் கூட்டியக்கத் திரு அவையின் தன்மையையும், அடையாளத்தையும் வரையறுக்கிறது. கூட்டியக்கத் திரு அவை என்பது, வாழ்ந்து பார்க்க வேண்டிய அனுபவமே என்கிறது இப்பகுதி. மூவொரு இறைவனின் தோழமையில் வேரூன்றி, வறியோரை நோக்கிப் பயணம் செய்கிறது இத்திரு அவை. கீழைத் திரு அவைகள், மற்றக் கிறிஸ்தவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பயணம் இது.

‘அனைவரும் சீடர்கள்; அனைவரும் மறைப் பணியாளர்கள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பகுதி (அலகுகள் 8-13), திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரும் இயேசுவின் சீடர்களாகவும், ஆர்வம் நிறை மறைப்பணியாளர்களாகவும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என நினைவுறுத்துகிறது. அனைத்து இறை மக்கள், திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள், பெண்கள், தலத் திரு அவைகளின் ஆயர்கள், உரோமையின் ஆயர் என அனைவருக்கும் மறைப்பணி பொதுவானது என முன்மொழிகிறது இப்பகுதி.

மூன்றாம் பகுதி (அலகுகள் 14-20), ‘பிணைப்புகளை ஏற்படுத்துதல், குழுமங்களைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அனைத்து இறைமக்களின் கூட்டு உருவாக்கம், எண்ணியல் தளத்தில் மறைப்பணி, பங்கேற்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற கருத்துருகள் பற்றிய சிந்தனையை வழங்குகிறது.

ஒவ்வோர் அலகும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளன: அ) ஏற்றுக்கொண்டவை (Convergences) (அனைவராலும் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணங்களும் செயல் முறைகளும்). ஆ) கருத்தில் கொள்ள வேண்டியவை (Matters for Consideration) (கூடுதல் தெளிவுகளும், புரிதல்களும் தேவைப்படுகிற தளங்கள்). இ) முன்மொழிதல்கள் (Proposals) (தலத் திரு அவைகள், ஆயர் பேரவைகள், ஆயர் பேரவைக் கூட்டமைப்புகள், அகில உலகத் திரு அவை ஆகிய தளங்களில் தேர்ந்து தெளியப்பட வேண்டியவை).

மாமன்றக் கருத்துத் தொகுப்பு அறிக்கையில் காணப்படுகிற பின்வரும் சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன: ‘கூட்டியக்கப் பண்பாடு’, ‘கூட்டியக்கத்துக்கான உருவாக்கம்’, ‘அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் இணைந்த கூட்டு உருவாக்கப் பயிற்சி’, ‘அனைத்துத் தளங்களிலும் ஆவியாரில் உரையாடுதல்’, ‘மாற்றியமைக்கப்பட வேண்டிய மேய்ப்புப் பணிப் பங்கேற்பு அமைப்புகள்’, ‘அமைப்புகள் பற்றிய திரு அவைச் சட்ட இறையியல் ஆய்வுகள்’, ‘பணிமைய இயக்கம்’, ‘அருங்கொடை அறிகுறி’, ‘பெண்கள் மறைப்பணியில் பங்கேற்பாளர்கள்’, ‘அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் பணித் திறனாய்வு’, ‘ஆயர் நிலைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான செயல்முறை மறு ஆய்வு’, ‘ஆயர்களின் பணிகள் திறனாய்வு’, ‘தலத் திரு அவைகளை இணைத்தல்’, ‘நற்செய்தி அறிவிப்பு ஒன்றிப்பு.’

கூட்டியக்கத் திரு அவையின் மையமாக இருக்கக்கூடிய ஒற்றைச் சொல் மறைப்பணி. மறைப்பணியே நற்செய்தி அறிவிப்பின் மகிழ்ச்சியாகக் கனிகிறது.

4. நாம் எங்கே செல்கிறோம்?

அடுத்து என்ன? ஆகார் போல நாம் இல்லம் திரும்ப வேண்டும்! நம் இதயங்கள், குடும்பங்கள், பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், ஆயர் பேரவைகள், ஆயர் பேரவைக் கூட்டமைப்புகள் எனும் இல்லங்கள்நோக்கி நாம் திரும்ப வேண்டும். கருத்துத் தொகுப்பு நோக்கி நம் உள்ளங்களைத் திருப்ப, ஆய்ந்துப் பார்க்க வேண்டும். மையம் விளிம்புகளாக மாறி, விளிம்புகள் மையங்களாகின்றன. நம் குடும்பங்கள், தலத் திரு அவைகள், பிற சமயங்கள், மற்றக் கிறிஸ்தவர்கள், புலம் பெயர்ந்தோர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வறியோர்கள் ஆகியோரே நம் கூட்டியக்கத் திரு அவையின் மையங்கள் - பணி மையங்கள் மட்டுமல்ல, அடையாள மையங்கள்!

நான்கு சாலைகளின் சந்திப்பில் வந்து நிற்கிறாள் ஆலிஸ். அந்த நேரத்தில் அங்கே வருகிற பூனைக்குட்டி ஒன்று, ‘பெண்ணே, நீ சோர்ந்து நிற்பதேன்?’ எனக் கேட்கிறது. ‘நான்கு வழிகளில் எதில் பயணிப்பது எனத் தெரியவில்லை. வியந்து நிற்கிறேன்’ என்றாள் ஆலிஸ். ‘நீ எங்கே போக வேண்டும்?’ எனக் கேட்கிறது பூனை. ‘எங்கே போக வேண்டும் என்பதையும் அறியேன்!’ என்கிறாள் ஆலிஸ். ‘எங்கே போக வேண்டும் எனத் தெரியாதவருக்கு எல்லா வழியும் ஒன்றே!’ எனச் சொல்லி வழிநடக்கிறது பூனைக்குட்டி.

மாமன்ற 16-வது பொது அமர்வின் முதல் கூடுகையின் நிறைவில், நாம் எங்கே போக வேண்டும் என்பதை அறிந்தவர்களாக வழி நடக்கின்றோம்.