Namvazhvu
காங்கிரசும், ‘இந்தியா’ கூட்டணியும் பாடம் கற்குமா?
Wednesday, 13 Dec 2023 07:23 am

Namvazhvu

இந்திய அரசியல் எங்கே போகிறது?’ என்ற கேள்வி இன்று பலரையும் பதற வைக்கிறது. அது சனநாயகப் பொம்மலாட்டமாக மாறுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. சாதி, மதம், மொழி வெறியைத் தூண்டும் போக்கு, பணத்தை வைத்து பதவியைப் பெறும் வணிக அரசியல் சூழல், வெற்றுப் புகழுரையில் மார்தட்டிக்கொள்ளும் மனோபாவம், கூட்டணி தர்மம் ஏதுமின்றி சுயநலம் கொண்ட அதிகாரத் தேடல்... பாவம் அப்பாவி மக்கள்!

சனநாயக அரசியல் என்பது ஒரு கட்சி நடத்தும் ஆட்சியை, மற்றொரு கட்சி கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்ஆனால்இங்கே ஆளுங்கட்சி ஆதிக்க சக்தியாகவும், எதிர்க் கட்சி எதிரிக்கட்சியாகவும் செயல்படும் அவலநிலை. பாக்கு வெட்டிக்கு இடையில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையில் நாமிருக்கிறோம்.

மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றனவா? இல்லை எதிர்பார்த்தது தானா? என்று பட்டிமன்றமும் மக்கள் மன்ற விவாத மேடைகளும் நடத்துவதைத் தவிர்த்து, இதிலிருந்து காங்கிரசும், அது அங்கம் வகிக்கும்இந்தியாகூட்டணியும் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே தேர்ந்து தெளிய வேண்டும்.

மூன்று மாநிலங்களில் (மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர்) கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பா... தனிப் பெரும்பான்மையுடன் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், இரு மாநிலங்களில் ஆட்சியை இழந்ததால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்து விட்டது. மூன்று மாநில வெற்றிமத்திய அரசின் தற்சார்பு இந்தியா தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றிஎன்றும், ‘இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வெற்றிஎன்றும், ‘இது 2024 மக்களவைத் தேர்தலில் பா... மூன்றாவது முறை வெல்வதற்கான உத்தரவாதம்என்றும், ஒன்றிய முதன்மை அமைச்சர் புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறார்.

சாதிய அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டிவிட்டதாகமத்திய உள்துறை அமைச்சரும், ‘சனாதன தர்மத்தின் விரோதிகள் தாமாகவே அழிந்தனர்என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசியச் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சாலும், ‘விவசாயிகள், ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம் பெற ஒன்றிய முதன்மை அமைச்சர் வழங்கிய உத்தரவாதமே வெற்றிக்கான காரணம்என்று பா.. வின் தேசியத் தலைவர் ஜெ.பிநட்டாவும் கருத்துத் தெரிவித்திருந்தாலும், ‘இந்தத் தேர்தல் முடிவுகள் மூலமாகக் காங்கிரஸ் மற்றும்இந்தியாஎதிரணியினருக்கு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டி யுள்ளனர்என்று கூறிய பிரதமரின் கூற்றில் என்னவோ பேருண்மைகள் பொதிந்திருக்கின்றன.

தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கே காரணமான காங்கிரஸ் கட்சி, பத்து ஆண்டுகள் கழித்தே அங்கு வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. “தோல்வியடைந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றனஎன்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கூற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. நாட்டின் இரண்டாவது பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் (கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா) மூன்றாகக் குறைந்திருப்பதும், தமிழகம், பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதும் அக்கட்சிக்கு அழகல்ல; பரந்து விரிந்த வட இந்தியப் பரப்பளவில் ஒரே ஒரு மாநிலத்தில் (ஹிமாச்சலப்பிரதேசம்) மட்டுமே காங்கிரசால் கால் பதிக்க முடிந்துள் ளது. இது அக்கட்சிக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த நாட்டிற்கே பேரச்சம் தரும் சூழல் என்பதை யாவரும் உணர்ந்தாக வேண்டும்.

இத்தேர்தல் முடிவுகளில் காங்கிரசும், ‘இந்தியாகூட்டணியும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். பா...வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில்இந்தியாகூட்டணியை உருவாக்கிய போதிலும், நடந்து முடிந்த இந்த ஐந்து மாநிலச் சட்ட மன்றத் தேர்தல்களில்இந்தியாகூட்டணிக் கட்சிகளுடன் கைகோர்க்காமல், காங்கிரஸ் தனியாகத் தேர்தலை எதிர்கொண்டது மிகப் பெரிய தவறு. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சிக்குக் காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்காமல், இரு கட்சிகளுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியது இரண்டாவது தவறு.

இத்தகைய சூழலில், “ஒரு பொது எதிரியைத் தேர்தலில் எதிர்கொள்ளும்போது, மாநிலத்தில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்; ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதற்கு நேர் மாறாகச் செயல்பட்டது. தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டதைப்போல அக்கட்சியினர் நடந்து கொண்டனர். தாங்கள் மிகப் பெரிய சக்தி என்றும், தங்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்பது போலவும் காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தனஎன்று குறிப்பிடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கதே!

குடியுரிமைச் சட்ட மசோதா, விவசாயச் சட்டத் திருத்தம், இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாடு, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல், பாலியல் வன்கொடுமைகள், மணிப்பூர் கலவரங்கள், பண மதிப்பிழப்பு, விளையாட்டு வீராங்கனைகளின் போராட்டம், அதானி மற்றும் அம்பானி சார்ந்த பெரு முதலாளித்துவ வர்த்தக முடிவுகள், நீதிமன்றங்களில் தலையீடு, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளில் தலையீடு, தெகல்ஹா பிரச்சினை, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு, ஒற்றைத் தலைமைப் புகழாரம், அடக்குமுறை அரசியல், மதவாத அரசியல் கொள்கை எனப் பல்வேறு காரணங்களுக்காக நாடெங்கிலும் பா... எதிர்வலைகள் இருக்கின்ற போதிலும், அவர்களால் தொடர்ந்து வெற்றிபெற முடிகிறது என்றால், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதே முக்கியக் காரணம். காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கத் தவறிவிட்டது என்பதே தோல்விக்கான முதன்மையான காரணம்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் தெலுங்கானாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, அங்கு காங்கிரசின் வெற்றிக்கு ஓரளவுகைகொடுத்தாலும், இனி நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தன்னால் தனியாகப் போட்டியிட்டுப் பா...வைத் தோற்கடிக்க முடியாது என்பதை அக்கட்சி உணர்ந்தாக வேண்டும்.

நாடு, காங்கிரஸ் தலைமையில் வெற்றி காண - முதலில், காங்கிரஸ் கட்சி தங்களுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலைத் தவிர்க்க வேண்டும்; அதிகார வேட்கையுடன் செயல்படும் அக்கட்சித் தலைவர்கள் பொதுநலம் நோக்க வேண்டும்; பா...விற்கு இரகசியமாகத் திரைமறைவில் பணியாற்றும் சிலர் அதைக் கைவிட வேண்டும். “கட்சி என்பது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் மூலம் நாட்டின் நலன்களைப் பெருக்குவதற்குக் கூட்டு முயற்சி செய்பவர்களின் தொகுப்புஎன்ற அறிஞர் எட்மண்ட் பர்க் அவர்களின் கூற்றுப்படி, நாட்டு நலனில் முழுமையாக நாட்டம் கொண் டுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; ‘இந்தியாகூட்டணி வலுப்பெற வேண்டும், கூட்டணிக் கட்சிகள் பதவி, அதிகாரத்தைத் தேடாமல் பா...வைத் தோற்கடித்து வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பொதுநலனைத் தங்கள் கொள்கைகளால் முன்னிறுத்த வேண்டும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்பது காங்கிரசுக்கும், ‘இந்தியாகூட்டணிக் கட்சிகளுக்கும் பாடமாகட்டும்.

ஆயினும், தோல்விகள் வெற்றிக்கான படிக்கற்கள் என்பதை இக்கூட்டணிக் கட்சிகள் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்கள் மனம் தளர்ந்து போகக்கூடாது; பெரும் நம்பிக்கைக்கொள்ள வேண்டும். வெற்றி என்பது இத்தேர்தல்களில் எட்டும் தொலைவில்தான் இருந்திருக்கிறது. வெற்றி பறிக்கப்பட்டிருந்தாலும் அல்லது கை நழுவிச் சென்றிருந்தாலும் வெற்றிக்கான வாக்கு விகித இடைவெளி மிகச் சிறியதே! (மத்தியப் பிரதேசத்தில் 48.66%-40.46%, இராஜஸ்தானில் 41.73%-39.54%; சத்தீஸ்கரில் 46.30%-42.14%). ஆகவே, பா... என்பது வெற்றிகொள்ள முடியாத கட்சி ஒன்றும் இல்லை. எனவே, அவநம்பிக்கையை அறுத்தெறிவோம்; ஒற்றுமையும், தெளிந்த நகர்வும், தொடர் முயற்சியும் நமது பாடமானால், நாளைய வெற்றி உறுதியாக நமதாகும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்