Namvazhvu
மரியியல் தொடர் - 27 மரியா பற்றிய மறைக்கோட்பாடுகள்
Thursday, 14 Dec 2023 11:20 am
Namvazhvu

Namvazhvu

மரியா கடவுளின் தாய்எனும் மறைக் கோட்பாடு

திரு அவையின் மரபில் மரியா பற்றி நான்கு மறைக்கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ‘மரியா கடவுளின் தாய்’, ‘மரியா எப்பொழுதும் கன்னிஆகிய இரண்டு மறைக்கோட்பாடுகளும் பிளவுபடாத் திரு அவையால் வரையறுக்கப்பட்டவை. ‘மரியா அமல உற்பவி’, ‘மரியாவின் விண்ணேற்புஆகிய இரண்டும் கத்தோலிக்கத் திரு அவையால் வரையறுக்கப்பட்டவை.

கத்தோலிக்கத் திரு அவை இந்த நான்கு மறைக் கோட்பாடுகளையுமே வரலாற்று உண்மைகளாக ஏற்கின்றது. அவற்றை, அதன் நேர்பொருளில் காண்கின்றது. ஏனைய திரு அவைகள் மரியா பற்றிய அனைத்து மறைக்கோட்பாடுகளையும் வரலாற்று உண்மைகளாகப் பெரும்பாலும் ஏற்பது இல்லை; மாறாக, இம்மறைக்கோட்பாடுகள் உணர்த்தும் உள் அர்த்தங்கள் என்ன என்பதுதான் நமக்கு முக்கியம் என்கின்றன. இக்கட்டுரையில்மரியா கடவுளின் தாய்எனும் மறைக்கோட்பாட்டைக் காண்போம்.

மரியாவை நற்செய்திகள்இயேசுவின் தாய்என்கின்றன. எபேசு சங்கம் அவரைக்கடவுளின் தாய்என்கின்றது. திருத்தந்தை 6-ஆம் பால் அவரைத்திரு அவையின் தாய்என்று அழைத்தார். திரு அவையின் தொடக்கம் முதலே இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் அவரைநமது தாய்என்று அழைத்து வருகின்றோம். இக்கட்டுரையில் மரியாவுக்கு வழங்கப்பட்ட இந்த நான்கு பட்டங்களைப் பற்றியும் காண்போம்.

1. மரியா இயேசுவின் தாய்!

புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது மரியாதான் இயேசுவின் தாய் என்பது மிகத் தெளிவாகப் பல இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

விவிலியச் சான்றுகள்:

1. ‘காலம் நிறைவேறியபோது .... கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக.... அனுப்பினார்’ (கலா 4:4).

2. தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறும்போது, ‘இவர் மரியாவின் மகன்தானே!’ (மாற் 6:3) என்றனர்.

3. ‘அவருடைய தாயும், சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்’ (மாற் 3:31).

4. ‘குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்’ (மத் 2:11).

5. ‘சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி ....’ (லூக் 2:34).

6. ‘இயேசுவின் தாய் பணியாளரிடம்...’ (யோவா 2:5).

7. ‘அவருடைய தாய் மரியாவோடும்...’ (திப 1:14).

8. ‘சிலுவை அருகில் இயேசுவின் தாயும்...’ (யோவா 19:25).

9. ‘அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் ...’ (லூக் 2:51).

10. இயேசு தம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்என்றார் (யோவா 19:26).

11. ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ (லூக் 1:43).

12. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: ‘அவருடைய தாய் மரியாவுக்கும், யோசேப்புக் கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது’ (மத் 1:18).

திரு அவையின் மரபு:

திரு அவையின் தொடக்கக் கால நம்பிக்கை அறிக்கைகளும் மரியாவை இயேசுவின் தாய் என அறிக்கையிடுகின்றன: நிசேயா சங்க நம்பிக்கை அறிக்கை: “தூய ஆவியால் கன்னிமரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.” திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை: “இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.”

திரிபுக்கொள்கை: தோற்றக் கொள்கை

புதிய ஏற்பாட்டிலும், திரு அவையின் நம்பிக்கை அறிக்கைகளிலும் மரியாதான் இயேசுவின் தாய் என்பது மிகத் தெளிவாக இருப்பினும், அதை ஏற்காத சிலர் தொடக்கத் திரு அவையில் இருந்தனர். அவர்கள்தான் தோற்றக் கொள்கையினர். அவர்கள்பருப்பொருள் தன்னிலையிலேயே தீயது; எனவே, தூயவராகிய கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மனிதராகப் பிறக்க முடியாதுஎன்றனர். எனவேதான், இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார்; பாடுகளை ஏற்றார்; உயிர்த்தெழுந்தார்; விண்ணகம் ஏறிச் சென்றார் என்பனவற்றை அவர்கள் மறுத்தார்கள். இவை அனைத்தும் வெறும் தோற்றமே என்றார்கள். இவ்வாறாக, இயேசுவின் மானிடப் பிறப்பை இவர்கள் முற்றிலும் மறுத்தனர். ஆனால், தோற்றக் கொள்கையினரின் கருத்தை நாம் ஏற்க இயலாது. தூய ஆவியாரின் துணையுடன் மரியாதான் இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பது மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. இயேசு ஒரு வரலாற்று மனிதர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

2. மரியா கடவுளின் தாய்! (Theotokos)

எபேசு சங்கம் (கி.பி. 431) மரியாவுக்கு வழங்கிய பட்டம்தான்மரியா கடவுளின் தாய்என்பது. மரியாவைக் கடவுளின் தாய் என அழைப்பதற்குச் சில விவிலியப் பகுதிகளை நேரடிச் சான்றாகவோ, மறைமுகச் சான்றாகவோ கூறலாம்.

விவிலியச் சான்றுகள்:

1. எலிசபெத்தின் வாழ்த்து: ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ (லூக் 1:43).

2. ‘வாக்கு மனிதர் ஆனார்’ (யோவா 1:14).

எபேசு சங்கம் வரையறுத்தமரியா கடவுளின் தாய்எனும் மறைக்கோட்பாட்டை நற்செய்திகளில் காணப்படும் இரண்டு கிறிஸ்தியல்களில் வேரூன்றியதாகக் காண வேண்டும்: 1. ‘கருவுறுதல் கிறிஸ்தி யல்’ (Conception Christology): மரியாதூய ஆவியால் கருவுற்றிருந்தார்’ (மத் 1:18); 2. ‘முன்னிருப்புக் கிறிஸ்தியல்’: (Pre-existence Christology): ‘வாக்கு மனிதர் ஆனார்’ (யோவா 1:14). எனவே, மரியா கடவுளின் தாய் எனும் மறைக்கோட்பாடு முற்றிலும் விவிலியத்தில் வேரூன்றிய ஒன்று.

திரு அவையின் மரபு

திரு அவைத் தந்தையாகிய ஓரிஜின் (Origen) என்பவர்தான் மரியாவைக் குறிக்ககடவுளின் தாய்எனும் பெயரை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.

கடவுளின் அன்னையே, கன்னி மரியே, அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்எனத் தொடங்கும் (Sub tuum Praesidium) பாடலானது, புனித கன்னி மரியாவைக் குறித்து மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கத்தோலிக்கத் திரு அவையில், திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டின் முடிவில் பாடப்படும் நான்கு பாடல்களுள் இதுவும் ஒன்றாக இன்றுவரை உள்ளது. திரு அவைத் தந்தையர்களாகிய புனித எஃப்ரேம், புனித அத்தனாசியுஸ், புனித பாசில், நீசா நகர் புனித கிரகோரி, நாசியானுஸ் நகர் புனித கிரகோரி, புனித அம்புரோஸ், புனித அகஸ்டின் போன்றோரும் மரியாவைக்கடவுளின் தாய்என அழைத்தார்கள்.

திரிபுக்கொள்கை: நெஸ்டோரியுஸ் கொள்கை

கான்ஸ்டான்டிநோபிளின் உயர் மறைத் தந்தையாகிய நெஸ்டோரியுஸ் என்பவரின் கூற்றுப்படி இயேசுவில் இரண்டு ஆள்கள் - இறை ஆள், மனித ஆள் உள்ளனர்; மரியா என்பவர் இயேசு எனும் மனித ஆளை (Anthropotokos Mother of Man) மட்டுமே பெற்றெடுத்தார் என்றார். இவரின் கூற்றை அலெக்சாந்திரியா உயர் மறைத் தந்தையர்களாகிய சிரிலும், ஆயர் புரோக்ளுசும் எதிர்த்தனர். சிரில் என்பவர் இயேசுவில் ஈரியல்புகள் (மனித, இறை) உள்ளன; அவை இரண்டும் ஒரே ஆளில் இணைந்துள்ளன; எனவே, இரண்டு இயல்புகளையும் கொண்ட வரை மரியா பெற்றெடுத்ததால் மரியாவைக் கடவுளின் தாய் (Theotokos) என்று அழைக்கலாம் என்றார்.

இவ்விருவருக்கும் இடையே நடந்த விவாதத்திற்கு முடிவு கட்ட பேரரசர் 2-ஆம் தெயோடிசியுசு என்பவர் எபேசு நகரில் சங்கத்தைக் கூட்டினார். சங்கத்திற்குத் தலைமை ஏற்க எபேசு ஆயர் மெம்னோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி. 431-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று சோபியா பெருங்கோவிலில் சங்கத் தந்தையர்கள் ஒன்றுகூடினர். நெஸ்டோரியுஸ் கருத்துகளைச் சங்கத் தந்தையர்கள் கண்டித்தனர். சிரிலின் கருத்துகளைச் சங்கத் தந்தையர்கள் ஆதரித்தனர். இவ்வாறு, எபேசு சங்கம் மரியாவைக் கடவுளின் தாய் என வரையறுத்தது. சங்கத்தின் இப்படிப்பினையை ஏற்க மறுத்து உருவானதுதான் நெஸ்டோரியுஸ் திரு அவை ஆகும்.

எபேசு சங்கம் வரையறுத்தமரியா கடவுளின் தாய்எனும் மறைக்கோட்பாட்டைக் கால்சிதோன் சங்கம் (கி.பி. 451) மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், கி.பி. 534-இல் திருத்தந்தை இரண்டாம் ஜான் என்பவர் கான்ஸ்டான்டிநோபிளின் ஆட்சிமன்றத்திற்குத் (Senate) தான் எழுதிய கடிதத்தில், ‘மரியா கடவுளின் தாய்எனும் பட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

(தொடரும்)