Namvazhvu
திருத்தந்தையின் இறுதி விருப்பம்!
Thursday, 04 Jan 2024 05:38 am
Namvazhvu

Namvazhvu

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவர்களாக இருக்கும் திருத்தந்தையர்கள் இறந்த பிறகு அவர்களை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். தற்போது தலைவராக இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ‘மெக்சிகோஸ் சூ பிளஸ் டெலிவிஷன்’ எனும் தொலைக்காட்சிக்கு டிசம்பர், 12-ஆம் தேதி அளித்த பேட்டியில், தான் இறந்த பிறகு தன்னை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் கல்லறையில் அல்ல; மாறாக, மக்களால் ‘சாலுஸ் பாப்பிலி ரோமானி’ என்றழைக்கப்படும் மேரி மேஜர் பேராலய வளாகத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது ஒவ்வொரு திருப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும், அதை முடித்த பிறகும் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாலயத்திற்குச் சென்று அன்னைக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். ஏறக்குறைய 100 தடவைகளுக்கும் மேல் திருத்தந்தை இவ்வாலயத்திற்கு வந்து செபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையர்கள் மூன்றாம் ஒனோரியஸ், நான்காம் நிக்கோலாஸ், ஐந்தாம் பயஸ், ஐந்தாம் சிக்துஸ், எட்டாம் கிளமெண்ட் மற்றும் ஒன்பதாம் கிளமெண்ட் ஆகியோரும் இப்பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 1903-ஆம் ஆண்டு புனித ஜான் இலாத்தரன் பேராலயத்தில் திருத்தந்தை 13-ஆம் லியோ அடக்கம் செய்யப்பட்டார்.