அண்மையில் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ‘பொங்கல்’ உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூகத்தால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்தந்த நாடுகளின் தலைவர்களின் பொங்கல் வாழ்த்தும், விழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒளிக்காட்சிகளும் வலைதளங்களில் வலம் வந்ததை நாம் அறிவோம். அவ்வாறே நமது இந்திய ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சர், தில்லியில் கலந்து கொண்ட பொங்கல் விழாவும் ஊடகங்களில் முதன்மைப் படுத்தப்பட்டது.
2024 - நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாடு தற்போது தலைசிறந்த மாநிலமாகிறது; தமிழ்க் கலாச்சாரமும், பண்பாடும் உலகில் சிறந்ததாக அடையாளப்படுத்தப்படுகிறது; பொங்கல் விழா உலகில் உன்னதமான விழா எனப் போற்றப்படுகிறது; ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் தேசிய உணர்வைப் பொங்கல் விழா பிரதிபலிப்பதாகக் கருத்துக் கூறப்படுகிறது; வள்ளுவர் வானளவு இன்று ‘அவர்களால்’ உயர்த்தப்படுகிறார்; உலகப் பொதுமறை உரைக்கும் கருத்துகள் மேடைகள்தோறும் புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும் முழங்கப்படுகின்றன; ‘காசி - தமிழ்ச் சங்கமம்’களை கட்டுகிறது. அத்தனையும், ஏன் இந்த நாடகம்? என்ற கேள்வியைச் சாமானியரின் எண்ணத்தில் எழுப்பாமல் இல்லை.
ஐயன் திருவள்ளுவரின் கருத்துகளை மேற்கோள் காட்டும் ஒன்றிய முதன்மை அமைச்சர், தேசத்தைக் கட்டமைப்பதில் ‘படித்த குடிமக்கள்’, ‘நேர்மையான வணிகர்கள்’, ‘நல்லதொரு பயிர் விளைச்சல்’ ஆகியவை முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். இவை மூன்றுமே கடந்த பத்து ஆண்டு கால இந்தப் பா.ச.க. ஆட்சியில் தடம் மாறி விட்டதே! அறநெறிகள் தவறிவிட்டனவே! ஆட்சியாளர்களின் ‘படிப்பு’ பற்றிய உண்மை மறைக்கப்பட்டுள்ளதே! வணிகம் சார்ந்த ‘நேர்மை’ அதானிக்கும் அம்பானிக்கும் அடகு வைக்கப்பட்டுவிட்டதே! உழவனும், உழவுத் தொழிலும், உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதே! மேலும், படித்தக் குடிமக்களை அரசியல் களத்தில் தேடிப் பார்க்க வேண்டியுள்ளதே! வணிகத்தில் ‘உலகறிந்த’ நேர்மையைக் கொண்டிருந்தால், உலகப் பணக்காரர் பட்டியலின் முன்வரிசையில் உடனே இவர்களால் எப்படி வர முடிகிறது? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது அல்லவா!
வேளாண்மைத் திட்டம், விவசாயிகளின் நலவாழ்வு, வேளாண் சட்ட மசோதா... போதும் உங்கள் நாடக நடிப்பு! நீங்கள் அணிந்திருக்கும் எமது வேட்டியும், துண்டும் சில மணித்துளிகளில் மாற்றப்படும்போது, உங்கள் சிந்தனையையும் மாற்றிவிடுவீர்கள். பயிரும், நம் உயிரும் நெருங்கிய உறவு கொண்டதாக அறிந்தவருக்கு, விவசாயிகள் மடிந்த போது, தில்லியில் வேளாண்மை மசோதாக்களுக்கு எதிராகப் போராட்டங்களில் கலந்து உயிர்த்தியாகம் செய்தபோது, ஏனோ இந்த உறவு நிலையை அறியாதிருந்தார்? இங்கே நாடகத்தில் முதல் காட்சி முடியும் முன்பே, இரண்டாம் காட்சியும் துவங்கியிருக்கிறது.
எதிர்வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு நமது ஒன்றிய முதன்மை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் எல்லா மாநிலத்தவராலும், எல்லா மொழியினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராகவும், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவச் சபைகளின் அனைத்து உட்பிரிவுகளாலும் பெரிதும் நேசிக்கப்படும் ஆளுமையாகவும் புதிய உத்திகள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த ஏமாற்று நாடகத்தில் தனிநபர் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் இந்துத்துவா, பா.சி.ச., சனாதன தேசியம் பேசும் பா.ச.க. கட்சியும் அனைவருக்குமான கட்சியாகத் தன்னை அண்மைக் காலங்களில் அடையாளப்படுத்தத் துவங்கியிருக்கிறது. அத்தகைய பெரும் முயற்சியில் முழு வேகத்துடன் களம் இறங்கியிருக்கிறது பா.ச.க. இதற்கான ஒத்திகைதான் காசி - தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா - தமிழ்ச் சங்கமம், கேரளப் பயணம், மேலும் அங்கு நடைபெறும் ‘சிநேக யாத்திரை’ போன்றவை.
மக்களைச் சிதைத்து, பிரித்தாளும் உத்தியை மணிப்பூருக்கு அடுத்து கேரளாவில் அரங்கேற்ற அடித்தளமிடப்பட்டிருக்கிறது. அங்கு வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெற கிறிஸ்தவர்களைக் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்படையான செயல்பாடுகள் அன்றாடம் அங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெரும் அமைப்பாகச் செயல்படும் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மலபார், மலங்கரா, இலத்தீன் மரபுகளின் ஆயர்களைச் சந்திப்பதும், நன்கு அறியப்படும் கிறிஸ்தவ ஆளுமைகளைப் பா.ச.க.வின் முகமாக மாற்றுவதும் நடைபெற்று வருகின்றன.
தேர்தலைச் சந்திக்கத் தீட்டப்பட்டுள்ள திட்டங்களைக் கணிக்கும்போது, அவை பேரச்சமும், பெரும் அதிர்ச்சியும் தருபவையாக இருக்கின்றன. இந்து ஆதரவு வாக்குகளுடன் கிறிஸ்தவர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்து விட்டால் பல தொகுதிகளில் வென்றுவிட முடியும் என்று பா.ச.க. திட்டமிட்டிருக்கிறது. கேரளாவில் காங்கிரசைப் பிளவுபடுத்திக் கிறிஸ்தவ வாக்குகளைக் கவர்ந்திழுப்பதால், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சனநாயக முன்னணிக் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கங்கணம் கட்டியிருக்கிறது.
மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் சமய நம்பிக்கை கொள்ளவும், அந்த நம்பிக்கையை இணைந்து பாதுகாக்கவும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறப்பு உரிமை வழங்கியுள்ளது (Article 25). அதனைப் பா.ச.க. உள்ளிட்ட இந்து இயக்கங்கள் விமர்சித்து வருவதும், இந்துக்களை மத மாற்றம் செய்ய கிறிஸ்தவச் சிறுபான்மையினர் மதபோதனை மேற்கொள்வதாகக் குறைகூறுவதுடன், மக்களைப் பெரும்பான்மை - சிறுபான்மை என்று பிரித்தாளும் பா.ச.க.தான் இன்று ஒற்றுமை - ஒருமைப்பாடு - சகோதரத்துவம் - உன்னத பாரதம், உயர்ந்த தேசம் என்ற சொல்லாடல்களைச் சுமந்து வருகின்றது.
கேரளாவில் முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம்களையும் காங்கிரஸ் கட்சி அளவுக்கு அதிகமாகத் திரைமறைவில் முக்கியத்துவப்படுத்துகிறது; அவர்களுக்குப் பேராதரவு அளிக்கிறது; ‘கிறிஸ்தவர்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம், வாருங்கள்’ எனப் பொய்ப்பிரச்சார, நயவஞ்சகத் தீயை மூட்டி வருகின்றது. மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பா.ச.க.வின் செயல்பாடுகளில் பெரும் மாற்றம் வந்திருப்பதை மக்கள் இன்னும் அறியாமலா இருக்கிறார்கள்? நடக்கட்டும் இந்த நாடகம்.
‘வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்.
கொப்பளிக்கக் கொப்பளிக்க
வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்க்கின்றேன்
நீரே அழுக்கு!’
என்ற சுப்ரமணிய ராஜூவின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. அழுக்கானவர்களால்தான் இன்று இந்த அரசியல் அழுக்காகிப் போனது. இதில் பா.ச.க.வில் சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு அடர்த்தியாக அழுக்கேறிக் கிடக்கிறது. ஆனால், அவர்கள் தங்களைப் ‘பரிசுத்தவான்களாக’ (சுத்தக்காரர்களாக) அடையாளப்படுத்த முயல்கின்றனர்.
ஒரு சமுதாயத்தின் மாற்றத்தைத் தீர்மானிக்கவல்ல தலைமைப் பொறுப்பை அலங்கரிப்பவர்களின் தனிமனித ஒழுக்கமும், பண்புகளும் ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். “மக்கள் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைவிட, நல்ல மனிதர்களால் ஆளப்படுவதே சிறப்புக்குரியது” என்றார் கிரேக்க தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில். ஆகவே, தோழர்களே! ‘வரலாறு மக்களால் படைக்கப்படுகிறது’ என்பதை மறந்துவிடக்கூடாது. நம்மை நெறிப்படுத்தவும், உயர்ந்த இலட்சியங்கள் கொண்டு அரசமைக்கவும், அதற்காக நேரிய உத்திகளை வடிவமைக்கவும், வழிகாட்டவும் உன்னதமான தலைவரைத் தேடுவோம். பொய்மை மறையட்டும். அது மண்ணில் மடியட்டும்; நன்மை பிறக்கட்டும், இனி நானிலம் சிறக்கட்டும்!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்