Namvazhvu
கொடுங்கோலர்களின் கறுப்புச் சட்டங்கள்
Tuesday, 23 Jan 2024 10:44 am
Namvazhvu

Namvazhvu

கொடுங்கோல் அரசின் அடையாளம்  இராணுவத்திற்கும், காவல்துறைக்கும் அதிக அதிகாரம் வழங்குவதே. ஆரியக் கோட்பாட்டிற்கு உள்பட்ட இந்திய நாசிஸ்ட்டுகள், ‘ஒரே பாரதம், ஒரே மதம்ஒரே தலைவன், ஒரே சட்டம், ஒரே மொழி, ஒற்றை ஆட்சிஎன்பதற்கு எதையும் செய்வார்கள். தங்கள் வசதிக்கு ஏற்பச் சட்டத்தை வளைப்பார்கள் என்பது புதிய நடை முறை. இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு உட்பட்ட  மதவாதத் திரிபு அரசியல்.

டிசம்பர் 12-இல் நாடாளுமன்றத்தில்  புகை குண்டு வீச்சு  தொடர்பாக விவாதங்கள், அமளிகள், குண்டுக்கட்டு  வெளியேற்றம் என அனல் பறந்த நேரம். ஒன்றிய அரசு நாடாளுமன்ற  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 140 நபர்களை இடை நீக்கம் செய்து விட்டு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மக்களவையில் நிறைவேற்றியது.

உலகின் முதல் சனநாயகம்எனப் பெருமைப் பேசும் ஆளும் பா... அரசு, புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துத் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றினர். இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவு 48 மணி நேரத்திற்கு முன்தான்  மக்களவை  உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. முழுவதும் ஆழ வாசிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது. வாசித்துதான் என்ன செய்ய முடியும்?

மக்களவையில் இந்தியத் தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்தியச் சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிக்கு மாற்றாக, பாரதிய நியாயா சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரசா சன்ஹிதா 2023, பாரதிய சாட்சிய அதினியம் 2023  என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்தது.

புதிய குற்றவியல் சட்ட வடிவிற்குப்பாரதியஎன்று துவங்கும் இந்திப் பெயர்களே  பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. பல இந்தியக் கூட்டணித்  தலைவர்களோடு, தமிழக  முதல்வர் மு.. ஸ்டாலினும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசத்தை, ‘பாரத நாடுஎனப் பெயர் மாற்ற வேண்டும், எல்லாப் பெயர்களிலும் அரசியல் சாசனம் உள்பட எல்லாவற்றிலும்பாரதஎனத் துவங்க வேண்டும் என்பதன் முதல்  படிநிலை சித்தாந்தம் இதில் நிறைவேறியது. தேசிய மொழி என அவர்கள் கருதும் இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற ஆசையும் அதில் உள்ளடக்கம்.

சட்ட மசோதா அறிமுக நிலையில் இருந்து, 158 ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதில் வரும்  புள்ளி, கமா வரை ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்தும், சட்ட வடிவை  மக்களவையில் முன் வைக்கும் வரை பல எதிர் வினைகள் இருந்தன. ‘பழைய சட்டங்கள் காலனிய அரசின் ஆதிக்க வெறிக்கு உள்பட்டதாக இருந்தது; புதிய சட்டம் காலத்திற்கு ஏற்றதுஎன்கிறது ஆளும் அரசுத் தரப்புஎதிர்க் கட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் பலர் பல சட்டங்கள்கட் & பேஸ்ட்எனக் கிண்டல் அடித்தனர். புதிய குற்றவியல் சட்டங்களும் மறு காலனிய ஆதிக்க வெறிக்கு உட்படுத்தும் என்கிறார்கள்.

புதிய குற்றவியல் சட்டங்கள் மனித உரிமைகளைப் பறிக்கிறது. காவல்துறைக்கு அதிக கட்டற்ற அதிகாரங்களை வழங்குகிறது. காவல் துறையினரின் பொறுப்பை  மேம்படுத்த எந்த வழியும் காட்டப்படவில்லை. 33 குற்றங்களுக்குத் தண்டனை அதிகரிப்பு. 83 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிப்பு. 6 சிறு குற்றங்களுக்குப் புதிதாகச் சமூக சேவை என்ற தண்டனை முறை அறிமுகம்.  23 குற்றங்களுக்குக் கட்டாயக் குறைந்தபட்ச தண்டனை அறிமுகம். புதிய சட்டம் பத்து மடங்கு கடுமையானது என்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் கெவின் கோன் சால்வஸ்.

வட இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல் சட்டம் குறித்து, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாகபல வட மாநிலங்கள் முடங்கின. பெட்ரோல், டீசல்அத்தியாவசியப்  பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணமான சட்டம் இதுதான். காவல் துறைக்கோ, நீதித்துறைக்கோ தெரியப்படுத்தாமல், விபத்து ஏற்படுத்திய இடத்தில் இருந்து தப்பிச் சென்றால் பத்து வருடச் சிறைத் தண்டனை. ஏழு இலட்ச ரூபாய் அபராதம். போராட்டம் வெடித்த பின் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஹிட்ஆள்ட் ரன் சட்டம்நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

அரசு காவல்துறைக்குப் புதிய அதிகாரங்களைப் புதிய சட்டம் வழி வழங்குகிறதுஉதாரணமாக, குற்றவாளிகளை விசாரணைக்கு எடுக்கும் 15 நாள்  என்ற நடைமுறை, 90 நாள்களாக மாற, அது  காவல் துறையின் சித்ரவதை, மூளைச்சலவை முறை, பொய் சாட்சியங்களை உருவாக்கும் நேரம் ஆகியவற்றில்  தாக்கங்களை ஏற்படுத்தும்உண்மையான நீதி மறுக்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள், ஏழைகளுக்கு நீதி வழங்கும் மாநில சட்ட உதவி, இலவசச் சட்ட உதவி, சம வாய்ப்புகள் ஆகிய மாற்றுச் சட்ட  உதவிகளைப் பேசவில்லை என்பது பெருங்குறைபாடு.

இந்த இலட்சணத்தில்  புதிய குற்றவியல் சட்டங்கள் ஏழைகளையும், விளிம்பு நிலை மக்களையும் பாதுகாக்கும் என்று கூறி சிரிக்க வைக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர்.

புதிய குற்றவியல் சட்டம் யாரை வேண்டுமானாலும்தேசியப் பாதுகாப்புஎன்ற பெயரில் காவலில் வைக்க, தங்கள் தேவைக்கு வளைக்க அதிகாரம் அளிக்கிறது. அரசை விமர்சித்தால் இந்தக் குற்றவியல் நடவடிக்கைக்கு எவரும் உட்படுத்தப்படலாம்.

உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தும்அம்னெஸ்டி இன்டர்நேஷனல்எனும் பன்னாட்டு மன்னிப்பு அவை, ‘புதிய குற்றவியல் நீதிக் கட்டமைப்பானது, நாட்டின் கருத்துச் சுதந்திரம் மீதான இலக்கு ஒடுக்கு முறைக்கு வழி  வகுக்கும்என்று புதிய குற்றவியல் சட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறது.

மனித   உரிமை, தனிமனிதச் சுதந்திரம் ஆகியவை விழுங்கப்படும் காலத்தில் அரசு குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு, குற்றங்களுக்கான தண்டனைகளை, காவல்துறை அதிகாரத்தை வரம்பு மீற வளர விடுவது, சனநாயக அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்துவதாகும். பத்து ஆண்டு கால பா... ஆட்சியில் சர்வாதிகாரம் எல்லை மீறுவதன் அடையாளமே புதிய குற்றவியல் சட்டங்கள்.

ஆயினும், எல்லாக் கேள்விகளுக்கும் விடை கூற, நம் கையில் வாக்குரிமைதானே உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது.