இறைவேண்டல், அறிக்கை சமர்ப்பித்தல், சிறு குழுக்களாகக் கருத்துகளைப் பகிர்தல் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய அருள்பணியாளர்களுக்கான கூட்டம் ஒன்று உரோம் நகரில் பிப்ரவரி 6 முதல் 10 வரை நடைபெற்றது. அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறை, நற்செய்தி அறிவிப்புக்கான துறை, கீழை வழிபாட்டுமுறை திரு அவைகளுக்கான துறை ஆகியவைகளால், ‘உங்களுள் இருக்கும் இறைவனின் கொடையைத் தூண்டிவிடுங்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமில், 60 நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் இலாசரஸ் யூ ஹியுங்-சிக் இப்பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து, தான் இத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல், அருள்பணியாளர்கள் தங்கள் பணியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் அந்தோனியோ தாக்லே, “ஒவ்வோர் அருள்பணியாளரும் தங்கள் கலாச்சாரத்தைப் புகழ்வதோடு, ஏனைய கலாச்சாரங்களின் நல்ல கூறுகளைப் பாராட்ட எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.