புனித அருளானந்தர் பிறந்து 376 ஆண்டுகள்; இயேசு சபையிலே சேர்ந்து 361 ஆண்டுகள்; கொலையுண்டு 330 ஆண்டுகள்; அருளாளர் பட்டம் பெற்று 170 ஆண்டுகள்; புனிதராக உயர்த்தப்பட்டு 76 ஆண்டுகள்; அவருக்கென்று திருத்தலம் எழுப்பப்பட்டு 63 ஆண்டுகள்; ஆனால், அவர் மண்ணிலே வாழ்ந்த ஆண்டுகள் 45 மட்டுமே. அவரின் தடயத்தையே அழிக்க முனைந்தவர்கள் பலர். மௌன சாமியானார் சிலருக்கு! காலத்திற்கேற்ப கண் சிவந்தார் பலருக்கு! சிந்திய குருதியை மூன்று நூற்றாண்டுகளாகச் செம்மண்ணாக்கிய செம்மண் புனிதரின் குருதியைச் சுவைத்த மணல்மேட்டைப் புண்ணிய பூமியாக்கினார் நமக்கு! “நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!” (1கொரி 9:16) என ஏன் தமிழ் நாட்டின் உட்பகுதியைத் தேர்ந்தார்?
மதுரை மறைபரப்புத்தளம்
இறைமகன் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான தோமாவின் இந்திய வருகை தமிழ்நாடு கடற்கரையையும் எட்டியது. கி.பி. 72-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புனித தோமையார் மலையில், தோமா குத்திக் கொல்லப்பட்டு, சாந்தோம் பேராலயம் உள்ள இடத்திலே அடக்கம் செய்யப்பட்டார். இயேசு சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சேவியரின் (1506-1552) நற்செய்திப்பணி தமிழ்நாடு கடற்கரைப் பகுதி மக்களுக்கு விடுதலை அளித்தது. ஆனால், 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தீண்டத் தகாதவர்கள் என்கிற நிலையிலிருந்த கிறிஸ்தவர்களின் மாண்பை நிலைநாட்ட தமிழ்நாட்டின் உள் பகுதிகளுக்குப் பண்பாட்டுமயமாக்குதலில் கிறிஸ்தவம் பரவி, மதுரை மறைபரப்புத்தளம் 1606-ஆம் ஆண்டு பிறந்தது. போர்த்துக்கீசியர், பிரெஞ்சு, இத்தாலிய இயேசு சபையினரால் மதுரை மறைபரப்புத் தளம் வளர்ந்தது. இதில் இராபர்ட் தே நொபிலி (1577-1656), புனித அருளானந்தர் (1647-1693), வீரமாமுனிவர் (1680-1747), ஜேம்ஸ் தாமஸ் தே ரோசி (1701-1774) ஆகியோரின் பணிகள் அளவிட முடியாதவை.
புனித அருளானந்தரின் வரலாறு
(1647-1993)
ஓரியூர் திருத்தலப் பேராலய பாதுகாவலர் ஜான் தே பிரிட்டோ, போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரிலே உயர் குடியில் பிறந்தார். 11 வயதில் இயேசு சபை புனிதரான பிரான்சிஸ் சேவியரின் அருள் துணையால் உயிர்ப்பிச்சை பெற்று இயேசு சபையில் சேர்ந்தார். 26 வயதில் குருத்துவ அருள்பொழிவு பெற்று, இந்தியாவிலுள்ள கோவாவில் 350 ஆண்டுகளுக்கு முன் தன் பாதம் பதித்து, தனது வழிகாட்டியின் அழியா உடலைக் கண்டு பரவசமாகி, தமிழ் நாட்டின் உள்பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க அனுமதி பெற்றார். கேரளாவிலுள்ள அம்பலக்காட்டில் தமிழ் கற்று, செந்தமிழில் தனது பெயரை ‘அருள் ஆனந்தர்’ என மாற்றிக்கொண்டு, தனது வழித்துணைவரோடு முதல் பணித்தளத்திற்கு ஆர்வத்தோடு பல மலைகளைக் கடந்து வழி நடந்தார். ஓரிடத்தில் புலி ஒன்று இவர்களை வழி மறித்தபோது, துறவற அர்ப்பணத்தின் சிலுவையை உயர்த்திப் பிடிக்க, புலி மாற்றுப் பாதையில் ஓடி மறைந்தது. அன்றிலிருந்து திருச்சிலுவையை மீட்பின் சின்னமாக, குணமளிக்கும் ஒளியாகக் கண்டார். ஏழை, எளியோரின் ‘பண்டார சுவாமி’ ஆகி, அவர்களின் துயர் துடைத்தார்.
16 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நற்செய்தி அறிவித்து, அருள் அடையாளங்களை நிறைவேற்றி, மணவாழ்வில் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் திருவிவிலிய அறவாழ்வை நிலை நிறுத்த முற்பட்டபோது, மறவ நாட்டு சேதுபதி மன்னரால் திருத்தூதர் பவுலைப் போன்று தலை வெட்டுண்டும், திருத்தூதர் பேதுருவைப் போன்று சிலுவை எனும் கழுமரத்தில் ஏற்றப்பட்டும், காட்டு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பத்து நாள்களுக்கு உணவானார். தொடர் மழைநீர், புனிதர் சிந்திய இரத்தத்தை எல்லாத் திசைகளுக்கும் கொண்டு சென்றது; இரவு வேளையில் புனிதரின் தலையற்ற உடலில் ஒளிர்ந்த வெண் ஒளி, மணல் பரப்பைச் செம்மண் ஆக்கியது.
சாம்பல் புதன் அன்று புனிதர் தலை வெட்டப்பட்டதால், ஒவ்வொரு புதன் அன்றும் திருப்பயணிகள் திரளாக வந்து புனிதருக்கு நன்றி செலுத்தி, குணப்படுத்தும் செம்மண்ணை அள்ளிச் சென்றனர். மயிலாப்பூரிலுள்ள ஆயர் அனுப்பிய குழு அருளானந்தரின் மறைச்சாட்சியத் தரவுகளை உரோமையிலுள்ள திருவழிபாட்டு ஒழுங்குமுறைத் திருப் பேராயத்திற்குச் சென்று சேர்த்தது. ‘அருளாளர் பட்டம்’ பெற சாதகமான சூழலில், 1741-ஆம் ஆண்டு இயேசு சபை தடைசெய்யப்பட்ட நிலை தாமதமாக்கியது.1770-ஆம் ஆண்டு சருகணியின் பங்குத் தந்தை ஜேம்ஸ் தே ரோசி, புனிதர் தலை வெட்டுண்ட இடத்திலிருந்த முதல் கோயிலை அகற்றிவிட்டு, போர்த்துக்கீசிய கட்டடக்கலை சாயலில், அருளானந்தர் புனிதர் பட்டம் பெறாத நிலையில் ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணித்தார்.
மதுரை மறைபரப்புத்தளத்தின் இருண்ட காலம் 1773 முதல் 1838 வரை நீடித்தது. 1806-ஆம் ஆண்டு பாரிஸ் மறைபரப்பாளர் குருக்களுக்கும், போர்த்துக்கீசிய குருக்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுச் சண்டையில் பிரிவினை சபையிலே எண்ணற்ற கத்தோலிக்கர் ஈர்க்கப்பட்டனர்.
புதிய மதுரை மறைபரப்புத்தளம்
திருத்தந்தை 7-ஆம் பயஸ் இயேசு சபை மீதுள்ள தடையை அகற்றி, 1814-ஆம் ஆண்டு மீட்டெடுத்தார். மதுரை மறைபணித்தளத்திற்கு இயேசு சபையினரின் பணி இன்றியமையாதது என்று தமிழ் நாட்டிலிருந்து வந்த வேண்டுதலைத் திருத்தந்தை இயேசு சபைத் தலைவருக்கு அனுப்ப, அவரும் 1838-ஆம் ஆண்டு இயேசு சபையினர் இருவர் திருச்சியிலும், இருவர் பாளையங்கோட்டையிலும் தங்கி மறைபரப்புப் பணியினைத் தொடர, பிரான்சில் உள்ள இலயொன்ஸ் மறைமாநிலத் தலைவரைப் பணித்தார். 1846-ஆம் ஆண்டு, மதுரை மறை பரப்புத்தள தலைவரான அலெக்சிஸ் கானூஸ் சே.ச., திருத்தந்தையின் திருத்தூது நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
1853-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அருளானந்தரை ‘அருளாளர்’ ஆக உயர்த்தினார். மும்பை உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்ததான மதுரை திருத்தூது மறைவட்டம், 1887-ஆம் ஆண்டு திருச்சி மறைமாவட்டமாகப் பிரிந்தது. ஓரியூரில் அருளானந்தரின் அருளாளர் பட்டம் பெற்றதன் நினைவாக அவர் கழுமரம் ஏற்றப்பட்ட இடம் 1890-ஆம் ஆண்டு உரோமானிய கட்டடக் கலை சாயலில் கோயிலாக உயர்ந்தது; 1908-ஆம் ஆண்டு அருளானந்தர் தொடக்கப்பள்ளி செயல்படத் தொடங்கியது. திருச்சி மறைமாவட்டத்திலிருந்து 1923-ஆம் ஆண்டு தூத்துக்குடி மறை மாவட்டம் பிரிந்தது. மதுரை மறைபரப்புத்தளம் 1929-ஆம் ஆண்டில் இயேசு சபை மதுரை உதவி-மறைமாநிலமாக, இயேசு சபை தூலூஸ் மறை மாநிலத்தைச் சார்ந்ததாக உயர்த்தப்பட்டது.
1929-ஆம் ஆண்டு முதல் ஆண்டாவூரணியின் கிளைப்பங்காக ஓரியூர் திகழ்ந்தது. இறை ஊழியரான லூயி மரிய லெவே ஆண்டாவூரணியின் பங்குத் தந்தையாக 1921 முதல் 1943 வரை பணியாற்றிய காலத்தில், இறைமக்களை அடிக்கடி திருயாத்திரையாக நடத்திச் சென்று செபத்தாலும், தவத்தாலும், அருளடையாளங்களாலும் அருளானந்தரின் புனிதர் பட்டம் விரைவில் நிகழ முயற்சித்தார். திருச்சி மறைமாவட்ட ஆயராக 1936-ஆம் ஆண்டு மேதகு ஜான் பீட்டர் லெயனார்டு நியமிக்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மதுரை மறைமாவட்ட ஆயரானார்.
அருளானந்தர் திருத்தலப் பங்கு
ஆண்டாவூரணியின் கிளைப்பங்கான ஓரியூர் 1943-ஆம் ஆண்டு பங்காகி, அருள்பணி திவ்ய நாதர் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். 1947-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் நாள் திருத்தந்தை 12-ஆம் பயஸ் அருளானந்தருக்குப் ‘புனிதர் பட்டம்’ வழங்கினார். 12 ஆண்டுகள் உழைத்து அர்ச்சிக்கப் பட்ட கோயிலைத் ‘திருத்தலம்’ என்று மதுரை உயர் மறைமாவட்ட முதல் பேராயர் ஜான் பீட்டர் லெயோனார்ட் அறிவித்தார். 1952-இல் மதுரை உதவி-மறைமாநிலம், இயேசு சபை மதுரை மறைமாநிலமாகவும், 1953-இல் மதுரை மறைமாவட்டம், மதுரை உயர் மறைமாவட்டமாகவும் உயர்ந்தது. மதுரை உயர் மறைமாவட்டத்திலிருந்து 1987-ஆம் ஆண்டு சிவகங்கை மறைமாவட்டம் பிறந்து, முதல் ஆயராக மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் பொறுப்பேற்றார்.
புனிதரின் மகிமையான திருச்சிலுவை
புனிதர் தனது கல்வாரிப் பயணத்தைத் துவங்கும் முன் தனது கழுத்திலிருந்த சிலுவையை வேதாளை பங்குத் தந்தையிடம் கொடுத்து அனுப்பினார். அவர் அதை பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பினார். 1993-ஆம் ஆண்டு புனிதர் கொல்லப்பட்ட 300-ஆம் ஜூபிலி ஆண்டில் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் தலைமை வகிக்க, பிரான்ஸ் நாட்டு இயேசு சபைத் தலைவர் ஜேக்ஸ் ஜெல்லார்ட் ஓரியூர் திருத்தலத்திற்கே புனிதரின் சிலுவையை அன்பளிப்பாகத் தந்தார். கடந்த 30 ஆண்டுகளாகப் புனிதரின் திருச்சிலுவை புரிந்த புதுமைகள் எண்ணிலடங்கா!
திருத்தலம் பசிலிக்கா ஆனது
அனைத்து ஆலயங்களும் 2006-லிருந்து 2009 வரை சீரமைக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட இரண்டாம் ஆயர் மேதகு சூசைமாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் முறையாக, மற்றும் 2020 -ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக, ‘பசிலிக்கா’ தகுதி பெற உரோமைக்கு அனுப்பப்பட்டது. 2023 -ஆம் ஆண்டு செப்டம்பர் 12-இல் சிவகங்கை மறைமாவட்ட திருத்தந்தையின் திருத்தூது நிர்வாகி ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களின் இறுதிப் பரிந்துரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதல் நவம்பர் ஒன்பதாம் நாள் ‘இலாத்தரன் பெருங்கோயில் நேர்ந்தளிப்பு விழா’ அன்று பெறப்பட்டது.
2023-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள், திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருவிழா அன்று சிவகங்கை மறை மாவட்டத்தின் மூன்றாவது ஆயராக மேதகு லூர்து ஆனந்தம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், ஓரியூர் திருத்தலப் பேராலயமாக (Minor Basilica) அறிவிக்க, ஆயர் எடுத்த முயற்சிகளால், அவரின் ஆயர் அருள் பொழிவிற்கு மூன்று நாள்களுக்கு முன்பு உரோமையிலிருந்து ஆவணம் அவர் கரங்களிடம் வந்தடைந்தது. 2023, டிசம்பர் 5-ஆம் நாள், சிவகங்கை மறை மாவட்டமே ஆயர் தலைமையில், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இறைமக்களோடு நன்றிப் பலியை நிறைவேற்றும்போது ஓரியூர் திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்பட்டுள்ளதை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இந்தியாவின் 30-வது பசிலிக்காவாகவும், தமிழ்நாட்டின் 10-வது பசிலிக்காவாகவும் ஓரியூர் திகழ்கிறது.
புனித அருளானந்தர் திருத்தலப் பசிலிக்கா விற்கு வழங்கப்படும் சலுகைகள்
1. உரோமையிலுள்ள பேதுரு பெருங்கோயிலுடன் புனித அருளானந்தர் திருத்தலப் பசிலிக்கா தொடர்பு கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் கீழ்க்காணும் திருவிழாக்கள் தனிப்பட்ட கவனத்துடன் கொண்டாடப்பட வேண்டும்:
● திருத்தூதர் புனித பேதுருவின் தலைமைப் பீடம்: பிப்ரவரி 22.
● திருத்தந்தை திருப்பணி ஏற்பின் ஆண்டு விழா: மார்ச் 13.
● புனிதர்கள் பேதுரு, பவுல் திருத்தூதர்கள் பெருவிழா: ஜூன் 29.
2. திருத்தலப் பசிலிக்காவைச் சந்திக்கும் இறை மக்கள், ஒப்புரவு அருள் அடையாளத்தின் வழியாக பாவமன்னிப்புப் பெற்று, திருப்பலியில் பங்கேற்று, திருவிருந்தில் கலந்து, திருத்தந்தையின் கருத்துகளுக்காக ‘இயேசு கற்றுத்தந்த செபம்’, ‘நம்பிக்கை அறிக்கை’ சொல்லி செபித்து, கீழ்க்காணும் நாள்களில் பரிபூரணபலன் பெறலாம்.
● திருத்தலம், திருத்தலப் பசிலிக்கா எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதல் பெற்ற நாள்: நவம்பர் 09, 2023.
● திருத்தலப் பசிலிக்கா ஆக மறைமாவட்ட ஆயரால் அர்ப்பணித்த ஆண்டு: டிசம்பர் 05, 2023.
● திருத்தலப் பசிலிக்காவாக உயர்த்தப்பட்ட மகிழ்வின் வழிபாட்டுக் கொண்டாட்ட நாள்: மார்ச் 03, 2024.
● சிவகங்கை மறைமாவட்ட ஆயரால், மறைமாவட்ட இறைமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்: அக்டோபர் முதல் ஞாயிறு.
● இறைமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் ஆண்டில் ஒருநாள்:
3. திருத்தலப் பசிலிக்கா முத்திரை மீது, திருத்தந்தையின் இலச்சினை, ‘குறுக்காகப் பதிக்கப்பட்ட சிலுவைச்சாவிகள்’ பதாகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
4. திருத்தலப் பசிலிக்கா அதிபர் துறவற அங்கியின் மீது சிகப்பு நிறத் துளைகள், பொத்தான்கள் கொண்ட வெண்ணிற mozetta அணியலாம்.
கடவுளின் கைவிரல் வல்லமையைச் செயலாக்கி, மதுரை மறைப்பணித்தளத்தில் இறையாட்சியை நிலைநாட்டிய (லூக் 11:20) எண்ணற்ற இயேசு சபையினரின் கடின உழைப்பிற்கு நன்றி செலுத்துவோம். மதுரை உயர் மறைமாவட்டம், சிவகங்கை மறைமாவட்டம், இயேசு சபை மதுரை மறை மாநிலம், இயேசு சபை சென்னை மறைமாநிலம், கார்மேல் சகோதரிகள் ஆகியோருக்குப் புனித அருளானந்தர் பாதுகாவலராகவும், கும்பகோணம் மறைமாவட்டத்திற்குத் துணை பாதுகாவலராகவும் திகழ்கிறார் புனித அருளானந்தர். தமிழ்நாடு மற்றும் அருகிலிருக்கும் மாநிலமான கேரளாவிற்கும் திருப் பயணத் திருத்தலமாக ஓரியூர் திகழ்கிறது.
குடும்ப ஒற்றுமைக்காகவும், திருமணம் நடை பெறவும், மழலைப் பேற்றிற்காகவும், நேர்த்திக்கடன் செலுத்தவும், தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெறவும், இன்னும் பிற நலன்களுக்காகவும் சாதி, சமயம், மொழி, இனம் கடந்து திருத்தலத்திற்கு வருவோர் ஏராளம். நீங்களும் வாருங்களேன்!