தவக்காலத்தின் குறிக்கோள் மனமாற்றம். இந்த மனமாற்றம் முழுமையானதாக நடைபெற சில ஆன்மிக, உளவியல் படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இக்கருத்தை மிகச் சிறப்பாகத் தனது ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்ற தனது நூலில் தியான பயிற்சியாகத் தருகிறார் புனித இஞ்ஞாசியார். அன்றாடம் மனமாற்றம் அடைந்து சிறப்புடன் வாழ்ந்திட இக்கட்டுரை நம்மை அழைக்கின்றது.
ஆன்மிகப் பயிற்சிகளில் மனமாற்றம்
மனமாற்றம் என்ற ஒரு செயலானது, முற்றிலுமாக ஆன்மிக, உளவியல் சார்ந்தது. மனமாற்றம் என்ற சொல்லில் ‘மனம்’ என்ற வார்த்தை இருப்பதே இதற்குச் சான்றாகும். மனமாற்றம் உண்மையானதாக, முழுமையாக நடந்திட, நாம் சில ஆன்மிக-உளவியல் படிகளைக் கடந்திட வேண்டும். இதைப் புனித இஞ்ஞாசியார், ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்ற தனது நூலில், எண்கள் 43 மற்றும் 44-இல் ஒரு தியான பயிற்சியாகத் தருகிறார். அதை ‘தன்னாய்வுத் தியானம்’ அல்லது ‘ஆன்ம ஆய்வுப் பயிற்சி’ என்று கூறுகிறார். தன் துறவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இத்தியானத்தைக் கட்டாயம் ஒரு நாளைக்கு இருமுறைகள் செய்திடப் பணிக்கிறார். இத்தியான முறையில் மனமாற்றம் முழுமையாக நடந்திட, அதன் ஆன்மிக, உளவியல் படிநிலைகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.
படிநிலை 1: இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுதல்
இறைவன் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து, அவரது நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி கூறுவதாகும். இறைவன் செய்த நன்மைகளுக்கு உணர்வளவில் நன்றி கூறுவதாகும். முழுமையான மனமாற்றத்திற்கு நன்றியுணர்வும், இறையன்பை நினைப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, நம் பலவீனங்களை உணரும்போது, அது தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும். இரண்டு, தன்மீது வெறுப்பு ஏற்பட்டு, சுயமதிப்பீடு குறைந்திடாமல் இருந்திட, நிறைந்த மனத்துடன் மனமாற்றத்தை அணுகுவதே உளவியல் முறையில் பொருத்தமானதாகும். இல்லையெனில், நாம் குற்றப்பழி உணர்விற்குப் பலியாக நேரிடும்.
படிநிலை 2: அருள் வேண்டல்-அகத்தூண்டல்
மனமாற்றத்தின் அடிப்படை இறையருள் ஆகும். இறைவனின் அருள் இல்லையெனில், மனமாற்றம் அடைவது கடினம். அவரது வழித்துணை அவசியம். இறையருள் மனமாற்றம் அடைந்திடும் ஒருவருக்கு அகத் தூண்டலாகத் தரப்படலாம். அதற்கு அடிப்படை, ஆவியானவரின் தூண்டுதல் ஆகும். திருவிவிலியத்தில் இறைவாக்கினர் நாத்தான் வழியாகத் தாவீதுக்கு மனமாற்றத்திற்கான அகத்தூண்டல் அருளப்படுகிறது. பேதுருவுக்கோ இயேசுவின் பார்வை அகத் தூண்டலாக அமைகிறது. இதைப்போல் சக மனிதர்களின் மூலம் நமக்கு இறையருள் தரப்படலாம் .
படிநிலை 3: ஆய்வு செய்தல்-அக உற்றுநோக்கல் (Introsspection or self-evaluation)
இந்த உளவியல் பரிமாணமானது மனமாற்றத்தின் அடிப்படையும், ஆணிவேருமாய் அமைகின்றது. தன்னைத்தானே தனக்கு முன் நிறுத்தி, தனது பலவீனங்களை அறிவதாகும்; அந்தப் பலவீனத்தால் தனக்கும்-பிறருக்கும் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் குற்றங்களை அறிவதாகும்; அதனால் ஏற்படும் தீய பாதிப்புகளை உணர்வதாகும். புனித பேதுருவின் அக உற்று நோக்கல் நேர்மறையாக, இறைமகன் இயேசுவின் நிபந்தனையற்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. இது தனது பலவீனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. இதனால் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க மனம் துணிகிறது. அதுவே அவரைத் திரு அவையின் தலைவராக்கியது. ஆனால், யூதாசின் அக உற்றுநோக்கல் கடவுளின் நிபந்தனையற்ற அன்பை உணராது, தன்னையே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், எதிர்மறை விளைவாக முடிந்தது; தற்கொலைக்கு வழிவகுத்தது. நன்றி உணர்வின் அடிப்படையில் நாம் செய்திடும் நேர்மறை அக உற்றுநோக்கல் மனமாற்றத்திற்கு மிக மிக அவசியமானது.
படிநிலை 4: மன்னிப்பு மன்றாடுதல்
நேர்மறை அக உற்றுநோக்கலில் முக்கியமாக நிகழ்வது தனது பலவீனத்தை முழுமையாக உணர்ந்து, தன்னை ஏற்றுக்கொள்வதாகும். அதன் பின், அப்பலவீனத்தைத் தாழ்மையான உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு, மன்னிப்புக் கேட்பதாகும். பிறர் நம்மை மன்னிப்பதற்கு முன்பு, சுயமன்னிப்பு மிக அவசியம். அதுதான் அடுத்த படிநிலையான மனமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
படிநிலை 5: மனம் மாறிட முடிவெடுத்தல்
நம்மால் நாமே மன்னிக்கப்பட்ட நிலையில், இந்தப் பலவீனத்தால் நமக்கு ஏற்படும் தீய விளைவுகளையும், சுய வளர்ச்சிக்கு ஏற்படும் தடைகளையும் உணர்ந்து மனம் மாறிட முடிவெடுத்து, அதைச் செயல்படுத்துவதில்தான் மனமாற்றத்தின் முழுமை அடங்கியுள்ளது. இதை உணர்ந்து தவக் காலத்தில் புனித இஞ்ஞாசியார் நமக்குத் தந்த தன்னாய்வுத் தியானப் பயிற்சியை அனுதினம் செய்திடும்போது மனமாற்றம் முழுமையாகிறது.
இதுவே ‘கடத்தல்’ என்ற பாஸ்கா விழாவை நிறைவாய்க் கொண்டாடிட வழிவகுக்கிறது. எனவே, மனமாற்றத்தின் ஆன்ம ஆய்வுப் பயிற்சியினைச் செய்திடுவோம்; கிறிஸ்துவின் இறப்பு-உயிர்ப்பு என்ற பாஸ்கா நிகழ்வில் பங்கேற்று, தவக்காலத்தைப் பொருளுள்ளதாய்க் கொண்டாடுவோம்.