Namvazhvu
திருத்தந்தைக்கு யூதக் குருக்களின் நன்றிக் கடிதம்
Friday, 01 Mar 2024 05:25 am
Namvazhvu

Namvazhvu

யூத மதக்குருக்களும், வல்லுநர்களும் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பது யூத மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்வையும் உண்டாக்கியுள்ளது. யூத விரோதப் போக்குகளுக்கு எதிராகத்  தன் எதிர்ப்பைக் காட்டி வருவதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள யூதர்களை நோக்கித் தன் கரங்களை விரித்து வருவதற்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு யூத மதக்குருக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இக்கடிதத்தில், பல ஆண்டு முயற்சிகளால் கட்டியெழுப்பப்பட்ட உறவுகள் கூட இன்றைய சமூகத்தில் ஆட்டம் கண்டு வருகின்றன. இந்நிலையில் பகைமையின் இடத்தில் புரிந்துகொள்ளுதலையும், விரோதத்தின் இடத்தில் நட்புணர்வையும், கண்டனங்களின் இடத்தில் புரிந்துணர்வையும் விதைப்பதில் திரு அவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் நம் சமூகத்திலும், வரலாற்றிலும் அழிக்க முடியாத சுவடுகளைப் பதித்து வருகின்றன. விடாமுயற்சி, நம்பிக்கை, மனவுறுதி ஆகியவை அதிகம் அதிகமாகத் தேவைப்படும் இன்றைய உலகில், திருத்தந்தை ஆறாம் பவுலின்  Nostra Aetate’(கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திரு அவைக்குள்ள உறவு) எனும் ஏடு, மனித குலத்தின் உடன்பிறந்த நிலை எத்தகைய சூழலிலும் மீட்டெடுக்கப்பட வல்லது என்பதை வலியுறுத்துவது புதிய நம்பிக்கைகளைத் தருகின்றது எனக் கூறியுள்ளனர்.