Namvazhvu
அச்சுறுத்தலில் கிறிஸ்தவர்களின் வாழ்வு!
Friday, 01 Mar 2024 05:37 am
Namvazhvu

Namvazhvu

2024, பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் இலக்னோ மேய்ப்புப்பணி மைய இயக்குநர் அருள்பணி. டோமினிக் மற்றும் ஒன்பது பேர்கள் மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் கூட்டம் நடத்தியதாகப் பொய் வழக்கு போடப்பட்டுகாவல்துறையால் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 2024, பிப்ரவரி 5-ஆம் தேதி காஷ்மீரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க முடியாது எனக் கூறி மத்திய பா..-வின் ஆளுநர் அரசு இரத்து செய்துள்ளது. இதனால், 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

2024, பிப்ரவரி 6-ஆம் தேதி சட்டீஸ்கர் மாநிலம், அம்பிகாபூரில் உள்ள தூய கார்மேல் பெண்கள் பள்ளியில் வகுப்பறைக்குச் செல்லாமல் கழிவறையில் இருந்த நான்கு, ஆறாம் வகுப்பு மாணவிகளை அருள்சகோதரி கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் செய்த ஆர்ப்பாட்டத்தால் பள்ளி மூடப்பட்டுள்ளது. அருள்சகோதரி மெர்சி கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ஸாமில் அனைத்துக்  கிறிஸ்தவப் பள்ளிகளில் உள்ள இயேசு மற்றும் மாதாவின் சுரூபங்கள் அகற்றப்பட வேண்டும்; பள்ளிக்கு அருள்பணியாளர்களும், அருள்கன்னியர்களும், அருள்சகோதர்களும் அவர்களது மத அடையாள உடை அணிந்து வரக்கூடாது என இந்து அடிப்படைவாதக் குழு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. 2024, பிப்ரவரி 6-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிஸ்துபூரில் இயங்கி வரும் தூய லொயோலா பள்ளிக்குள் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த சுனில் வர்மா தனது சக ஊழியர்களுடன் உள்நுழைந்து மாணவர்களிடம் பைபிளைப் பற்றி ஏதாவது போதிக்கிறார்களா? எனக் கேட்டுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து நூலகத்திற்குள் நுழைந்து அங்கு ஏதாவது பைபிளோ அல்லது மற்ற கிறிஸ்தவ அடையாளங்களோ இருக்கின்றனவா? என்று ஆராய்ந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் சுனில் வர்மா வேண்டுமென்றே செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.