திருத்தந்தையின் புனித வாரம் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களைத் திருப்பீடத் தகவல் தொடர்பு செயலகம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 24-ஆம் தேதி, குருத்து ஞாயிறு மற்றும் பெரிய வியாழன் காலையில் திரு எண்ணெய் புனிதப்படுத்தும் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றுவார். அதற்கு அடுத்த நாளாகிய புனித வெள்ளியன்று மாலை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இயேசுவின் பாடுகள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களைத் தலைமையேற்று நடத்திய பின், உரோம் நகரின் கொலோசியம் அரங்கில் சிலுவைப்பாதை நிகழ்வை வழி நடத்துவார். புனித சனியன்று மாலை பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியை வழக்கம்போல் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்த்துவார். பிறகு ஞாயிறன்று கிறிஸ்து உயிர்ப்பு திருவிழா திருப்பலியைப் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றுவார். உயிர்ப்பு ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு பேராலய மேல்தளத்திலிருந்து ‘நகருக்கும், உலகுக்கும்’ எனப் பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியையும், ஆசிரையும் உலகின் அனைத்து மக்களுக்கும் திருத்தந்தை வழங்குவார்.