‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாக’ என்பது கிராமப்புறங்களில் அடிக்கடிப் பேசப்படும் சொலவடையாகும். அதுபோல ஒன்றிய அரசின் பிரதிநிதியாக, தபால்காரராக இருக்க வேண்டிய தமிழ்நாட்டின் ஆளுநர் ஆளும் கட்சிக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக, திராவிடத்திற்கு எதிராக, தமிழ் மொழிக்கு எதிராக, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர், பொதுவெளிகளில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென கிறிஸ்தவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு எதிராக வரலாறு தெரியாமல், பண்பாடு சிறிதும்கூட இல்லாமல் கருத்துக் கூறுகின்ற அளவிற்குச் செயல்பட்டு வருகிறார்.
இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் வரலாற்றைத் திரித்துக் கூறுவதென்பது வரலாற்றுப் பிழை மட்டுமல்லாமல், மாபெரும் குற்றத்திற்குச் சமமான ஒன்றுமாகும். அதிலும் குறிப்பாக, தமிழ் மொழியின் வரலாற்றை, முன் தோன்றிய மூத்தக் குடியின் வரலாற்றை, முதல் மொழியின் வரலாற்றைப் பிரித்துப் பேசுவதென்பது, திரித்துக் கூறுவதென்பது ஒன்றுமே புரியாதவர்கள், ஒன்றுமே தெரியாதவர்கள் பேசும் பேச்சாகும்.
தமிழ்நாட்டின் ஆளுநர் அய்யா வைகுண்டரின் அவதார விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகின்ற பொழுது, அய்யா வைகுண்டரின் பெருமைகளைப் பற்றிப் பேசாமல், மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தமிழை முறையாகக் கற்றுத் தெரிந்த, தெளிந்த ஜி.யு. போப், இராபர்ட் கால்டுவெல் போன்றோரைப் பற்றிப் பேசிய பேச்சுகள் கிறிஸ்தவர்களின் மத உணர்வை, மத உரிமையைப் புண்படுத்தியுள்ளன.
‘பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்’
என்ற பாரதிதாசனின் வரிகள் கிறிஸ்தவர்களைத் தட்டி எழுப்பியுள்ளன. விழாவில் பேசிய ஆளுநர் “கால்டுவெல் என்ற மேலைநாட்டுப் பாதிரியார் தொடக்கக் கல்வியைக் கூட முடிக்காதவர். பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்றவர் (drop out). அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை யாரும் நம்ப வேண்டாம். அந்த நூல் பொய்யான செய்திகளை உள்ளடக்கியது. கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் கற்றறிந்த தமிழறிஞர்களாக விக்கிப் பீடியாவில் சொல்லப்படுகிறது. அதெல்லாம் Nonsense!” என்று பேசியிருப்பது, கிறிஸ்தவர்களை வீண் வம்புக்கிழுக்கும் இழி செயலாகும்.
தமிழ்நாட்டின் ஆளுநர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர், அரசியல் சாசனத்திற்குட்பட்டுச் செயல்பட வேண்டியவர்; விதிகளுக்குட்பட்டுக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டியவர். ஆனால், உண்மை வரலாறு தெரியாமல், அரை வேக்காட்டுத் தனமாகப் பேசியிருக்கிறார்.
இராபர்ட் கால்டுவெல் யார்? வரலாறு என்ன சொல்கிறது?
கால்டுவெல் 1814-இல் அயர்லாந்தில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் முடித்து, பத்தாவது வயதில் தாய் நாடாகிய ஸ்காட்லாந்திற்குச் சென்றார். பதினாறு வயது வரை ஆங்கில இலக்கிய, இலக்கணங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றார். 1834-இல் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தைச் சிறந்த மதிப்பெண்களுடன் பெற்று நிறைவு செய்தார். பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது, ஒப்பீட்டு மொழியில் சிறந்து விளங்கிய பேராசிரியர் சர். டேனியல் அவர்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் ஒப்பீட்டு மொழியின் மீதான ஆர்வம் மேலும் கால்டுவெல்லுக்கு அதிகமானது.
இந்த நிலையில் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க தனது 24-ஆம் வயதில் இந்தியா வந்தடைந்தார். திருவிவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றறிந்தார். இதுவே தென்னிந்திய மொழிகளுக்கான நூலொன்றை எழுதக் காரணமாய் அமைந்தது.
1841-இல் குருப்பட்டம் பெற்று, திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் கிராமத்தில் தங்கி, ஐம்பது ஆண்டுகள் மதப் பணியுடன் சேர்த்துத் தமிழ்ப் பணியும் செய்து வந்தார். கி.பி. 1856-இல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A comparative Grammar of the Dravidan language) என்னும் நூல் உலகெங்கும் இவருக்குப் புகழை ஈட்டித் தந்தது. தமிழ் மொழி உலகின் முதல் மொழி என்றும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் தமிழ் மொழி கலப்பில் வந்தவை என்றும் ஆய்ந்தறிந்து, திராவிட மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதையும் உலகம் வியக்க விளக்கம் கூறினார்.
இராபர்ட் கால்டுவெல் செய்த தவறு என்னவென்றால், ‘சமஸ்கிருதம்தான் உலகின் தொன்மையான, முதன்மையான மொழி; சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் மற்றும் திராவிட மொழிகள் தோன்றின’ என்ற உண்மைக்குப் புறம்பான செய்தியை, புழுகு மூட்டையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்யாமல் வாழ்ந்ததேயாகும். அதன் தாக்கத்தால்தான் அய்யா வைகுண்டர் அவதார விழாவில் தமிழ்நாடு ஆளுநர், இராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் பற்றிய பொய்யான செய்திகளைத் தெரிவித்திருக்கிறார்.
அய்யா வைகுண்டர் விழாவில் கால்டுவெல் அவர்களைப் பற்றிப் பேச தேவை என்ன எழுந்தது?
அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு பொய்யான வரலாற்றுப் பதிவைத் திட்டமிட்டே தெரிவித்திருக்கிறார். நீதி தேவதை கண்களை மூடிக்கொண்டு இருப்பதால், ஆளுநரும் கண்மூடித்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறாரா? நீதிமன்றங்கள், தான் இட்ட கட்டளைகளை ‘சட்’டென நிறைவேற்றும் என்ற தவறான எண்ணத்தில் கெட்ட வரலாறுகளைக் கொட்ட நினைக்கிறாரா?
“உங்கள் வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்” (மத் 5:39) என்ற திருவிவிலிய வார்த்தையின் வழிவந்தவர்கள், அதனால் கன்னத்தைத் திருப்பித் திருப்பிக் காட்டிக்கொண்டிருப்பார்கள்; நாம் மாற்றி மாற்றி அறைந்து கொண்டே இருக்கலாம் என்று கருதுகிறாரா ஆளுநர்?
அதே திருவிவிலியம்தான், “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்” (லூக் 12:49) என்றும் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதையும் ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘ஆள்கின்றவனை ஆளவிடாமல்,
போகின்றவனைப் போக விடாமல்
முன்னே ஒருவன் முட்டியிலடித்தும்
பின்னே ஒருவன் பிடரி பிடித்தும்
சனநாயகத்தைச் சகதியாக்கினால்...’
என்ற கவிதை வரிகளுக்கேற்ப, சனநாயகத்தைச் சகதியாக்கி, சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறார் இந்த ஆளுநர்.
மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, தினமும் ஒரு விழாவை மாளிகையில் நடத்தி, ஒவ்வொரு விழாவிலும் திராவிடத்தைத் திசை திருப்பியும், இஸ்லாமியர்களை இழிவாகப் பேசியும், கிறிஸ்தவர்களைக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தும், பா.ச.க.வின் மறுபக்கமாக, ஆர்.எஸ்.எஸ்.-இன் அடிவருடியாகச் செயல்படுவதும் ஆளுநரின் அன்றாடப் பணிகளாகி விட்டன.
ஆளும் தி.மு.க. அரசு மக்களின் நலனை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றிய மசோதாக்கள் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், வந்த வேலையைச் செய்யாமல் வேறு எந்தெந்த வேலைகளையோ செய்து கொண்டிருக்கிறார். பா.ச.க.வின் கொள்கைப் பரப்பு செயலராகப் பதவி வகிக்க வேண்டியவர், ஆளுநராக அமர்ந்து கொண்டு சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘ஈஷா’ யோகா மையத்தில் மையங்கொண்டு ஆட்டமாட வேண்டியவர், ஆளுநராக அமர்ந்திருக்கிறார். கோவிலுக்குக் கோவில் தீர்த்தயாத்திரை செல்ல வேண்டியவர், ஆளுநராக அமர்ந்துகொண்டு திராவிடத் தலைமுறையினருக்கு இடையூறாகச் செயல்படுகிறார். அரசியல் சாசனப் பதவி வகிப்பவர், அச்சானத்திற்கு உட்பட்டு செயல்படாமல், ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு மாளிகையைப் பா.ச.க.வின் தலைமை அலுவலகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆளுநரின் இயலாமையால், முயலாமையால் தமிழ்நாட்டின் பல்நோக்குத் திட்டங்கள், தொலை நோக்குத் திட்டங்கள் கெட்டுப் போய் விடுமோ என்ற பயம் மக்கள் மனத்தில் எழாமல் இல்லை.
இனியாவது, தமிழ்நாட்டின்மீது, தமிழ் மக்களின் மீது, தமிழ் மொழியின் மீது, சிறுபான்மையினர் மீது வன்மக் கருத்துகளைக் கூறாமல், வரலாறுகளைத் திரித்துக் கூறாமல் மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஆளுநர் செயல்படுவார் என்று நம்புவோம். மீண்டும் மீண்டும் தொடர்ந்தால்,
‘எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’
என்னும் பாடலை நம் மக்களுக்கு நினைவு படுத்துவோம்.