மனிதர்கள் தொடர் தோல்விகளில் இருந்து பாடம் கற்கிறார்கள். அது நிறுவனங்களுக்கும், இயக்கங்களுக்கும், ஏன் அரசியல் கட்சிகளுக்கும் கூடப் பொருந்தும். ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என அறிய, நிறைய விலை கொடுக்கிறார்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்கிறார்கள். ‘சிந்துபாத்’ கதையில் வரும் தூக்கிச் சுமந்த சூன்யக் கிழவனைக் கீழே போடுகிறார்கள். அ.தி.மு.க. கட்சிக்குப் பா.ச.க. எனும் அதிகச் சுமையைத் தள்ளி விட்டதில் தற்காலிக மகிழ்ச்சி.
வாக்கு அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்திக்கிற அ.தி.மு.க. கட்சிக்கு, ‘எதைத் தின்றால் பித்தம் தீரும்?’ என்ற திசையறியா நிலை. சிறுபான்மை மக்களின் வாக்கு பா.ச.க. கூட்டணியில் இருந்தால் கிடைக்காது என்று உணர்கிறார்கள். பா.ச.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி முறிவு செய்தவுடன், கருமத்தம்பட்டியில் யாரென்று தெரி யாத, தங்களுக்குத் தாங்களே ஆயர் பட்டம் கட்டிக் கொள்கிற, தெற்கத்திய ஆயர்களை அழைத்து, அ.தி.மு.க. கிறிஸ்தவர்களுக்கான உரிமை மாநாடு நடத்துகிறது. உள்ளூர் கிறிஸ்தவச் சபைகளுக்கோ, கிறிஸ்தவ மக்களுக்கோ அந்த மாநாடு பற்றி சிறிதளவும் தெரியவில்லை. மாநாட்டிற்கு விலைபோன ஆயர்களே தங்கள் சபை மக்களைப் பேருந்துகளில் அழைத்து வந்தனர். பிசுபிசுத்து நகைப்பில் முடிந்தது அந்த ஒருநாள் கூத்து.
‘இந்தியா’ கூட்டணியில் சீட்டும் கிடைக்காது, தாங்கள் வேண்டுவதும் கிடைக்காது என்று தெரிந்த முஸ்லீம் இயக்கங்களை அழைத்து அ.தி.மு.க. மதுரையில் மாநாடு நடத்தியது. அதில் சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களுக்கு மக்களவையில் வாக்களித்த அ.தி.மு.க.வை சிறுபான்மையோரின் காவலர்கள் என உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசினர். அ.தி.மு.க.வின் கடந்த கால வரலாற்றில், அது சிறுபான்மை மக்களைக் காக்கும் கட்சி என்ற பதிவைத் தேடித் தேடி... எங்கும் இல்லை.
அ.தி.மு.க. இந்துத்துவாவை ஆதரிக்கும் கட்சி என்ற பெயர் பெற்றிருக்கிறது. மீனாட்சிபுரம் சம்பவங்களின்போது இந்து முன்னணி வளரவும், அவ்வியக்கத்தின் மீதும் அன்றைய அ.தி.மு.க. முதல்வர் காட்டிய இரக்கம் பதியப்பட்ட வரலாறு. ‘இராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல் எங்கே கட்டுவது?’ எனக் கேட்டவர் ஜெயலலிதா. இராமர் கோவில் கரசேவையை ஆதரித்ததோடு மட்டுமின்றி, செங்கல்லும் அனுப்பியவர் ஜெயலலிதா.
இந்தியாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தவர் அ.தி.மு.க.-வின் முதல்வர் ஜெயலலிதா. தமிழர்களின் பாரம்பரியச் சிறு தெய்வ வழிபாட்டில் முக்கியமானது உயிர் பலி. அதைத் தடைச்சட்டம் கொண்டு வந்து, அதற்குக் கடுமையான தண்டனைகள் அமல்படுத்தியவரும் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மதவாதம் எடுபடாது; அது தங்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் எனப் புரிந்து கொண்ட ஜெயலலிதா இந்த இரண்டு சட்டங்களையும் திரும்பப் பெற்றார். கூட்டணியில் இல்லை எனிலும், இராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை ஏற்றுக்கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. கால் வலி போக முடியவில்லை என்றாலும், எடப்பாடி அந்த நாளில் எல்லாச் சனாதனவாதிகளைப்போல சாமி தோப்பில், மத விழாவில் கலந்து கொள்கிறார். பாவம் அ.தி.மு.க... எப்படியாவது, எதைச் செய்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. கூட்டணி முறிவை அறிவித்திருந்தாலும், பா.ச.க., அ.தி.மு.க. குறித்து விமர்சனங்களை முன்வைக்க மறுக்கிறது. மென்மை போக்கைக் கடைப்பிடிக்கிறது. மோடியோ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரைப் புகழ்ந்து தள்ளுகிறார். அ.தி.மு.க. குறித்து அண்ணாமலை மட்டுமே உரக்கப் பேசுகிறார். கூட்டணிக்காகக் கதவு, ஜன்னல் என எல்லாவற்றையும் பா.ச.க. திறந்து வைத்தும் அ.தி.மு.க. இறுக மூடிவிட்டது. அ.தி.மு.க.வும், பா.ச.க.வும் கூட்டணிக்குக் கட்சிகள் தேடியது குறித்து நகைப்பிற்குரிய பல கதைகள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் என்றார்கள். அவர்களோ ‘நாங்களா? அ.தி.மு.க. உடனா? நெவர்!’ என அறிக்கை விட்டார்கள்.
அ.தி.மு.க. வீடு, வீடாகத் தேடிச் (‘சீட்’டோர் டெலிவரி) சென்று கூட்டணிக்கு அழைக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டது. மூன்று, நான்கு முறை தைலாபுரம் தோட்டம் தேடிச் சென்று கெஞ்சிக் கூத்தாடியும், மருத்துவர் தன் ஆதாயக் கூட்டணிக்குத் தாவி விட்டார். தே.மு.தி.க.விற்குக் கேட்டதை எல்லாம் கொடுத்து, தாஜா செய்து, அ.தி.மு.க கூட்டணி அமைத்தது. அ.தி.முக.வின் இன்றைய நிலை ஐயோ பரிதாபம்!
ஜெயலலிதா இருந்தபோது கெத்தாய் இருந்த கட்சி, இன்று தேய்ந்து கட்டெறும்பான நிலை. 2019 முதல் தொடர் தோல்விகளால் துவண்டு, எதைச் செய்தாவது மீளவேண்டிய கையறு நிலை. காமெடி வில்லன் மன்சூர் அலிகான் வரை கூட்டணிக்கு அழைத்தது அ.தி.மு.க.விற்குப் பெரும் இழுக்கு. பத்தாண்டு காலமாக மோடியைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து விட்டு, இன்று எதிர்ப்பு வேடம் போட்டால் யார்தான் நம்புவார்? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகள் நீர்த்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகிறது. தூங்கிக் கிடந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வேண்டிய கோப்புகள் ஆளுநர் மாளிகையில் உயிர் பிடிக்கிறது. முன்னாள் அ.தி.மு.க. சுகாதாரத் துறை அமைச்சரின் குட்கா வழக்கிற்கு ஆளுநர் அனுமதி வழங்கி விட்டார். இருந்தாலும், பீகாரின் நிதிஷ்குமார் போல பா.ச.க.வின் ஸ்லீப்பர் செல்லாக, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உள்ளது என்ற எதார்த்தத்தை மறுக்க முடியாது,
பா.ச.க. கட்சி அ.தி.மு.க. போன்ற அடிமைக் கட்சியை அழிக்காமல் விடாது என்பதே அரசியல் நிலை. அன்று பன்னீர்செல்வம் என்றால், இன்று வேலுமணி. தேசிய சனநாயகக் கூட்டணியில் பெயர் சொல்லக்கூடிய ஒரே கட்சியாக இருந்தது அ.தி.மு.க. அதனால் கூட்டணிக் கூட்டத்தில் பிரதமர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கை தரப்பட்டது. கூட்டணி விலகலுக்குக் காரணம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூற்றுப்படி, ‘சிறுபான்மை மக்கள் பா.ச.க.வோடு இருந்தால், எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எங்களது தொடர் தோல்விகளுக்குக் காரணம் பா.ச.க. கூட்டணிதான்’ என்கிறார்.
பா.ச.க. கட்சி அ.தி.மு.க.வை மெல்ல மெல்ல அழிக்கிறது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. தலைவர்கள் பொன்னையன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் பேசினாலும், அவர்கள் மோடி அரசைக் கடுமையாக விமர்சிக்க மறுக்கிறார்கள். ஒருநாள் பேசி விட்டு, மறுநாளில் அமைதியாகி விடுகிறார்கள். மாநிலக் கட்சியாக இருப்பதால், பத்தாண்டு கழித்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து மென்மையாகப் பேசுகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கும், பா.ச.க.வுக்கும் எதில் முரண்பாடு? அ.தி.மு.க.வின் நகைச்சுவை அமைச்சரோ ‘நாங்கள் 2026-இல் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்றோம். பா.ச.க. அண்ணாமலை என்றது. நாங்கள் வெளியே வந்து விட்டோம்’ என்கிறார். எது உண்மையோ? தமிழ்நாடு மக்களுக்குப் பா.ச.க.வின் ஒன்றிய அரசு எந்தத் திட்டங்களையும் பத்தாண்டுகளாக வழங்கவில்லை. போதிய நிதி ஆதாரங்களை விடுவிப்பதில்லை. சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் கறுப்புச் சட்டங்கள், விவசாயச் சட்டம் என்று பா.ச.க.வின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கண்மூடி ஆதரித்தது அ.தி.மு.க.
விவசாயச் சட்டத்தை ஆதரித்து, அதைத் திரும்பப் பெற முடியாது என்ற வாதத்தைக் கடுமையாக வைத்தது, அவர்களின் அன்றைய வாய்தா வக்காலத்து வக்கீல் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமிதான்.
எது எதுவாயினும் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து களம் காணும் அ.தி.மு.க., தாங்கள் ஒரு மாநிலக் கட்சி, ஆளும் தி.மு.க.விற்கு எதிரான, அடிப்படைக் கட்டமைப்புகள் கொண்ட கட்சி, ஏகோபித்த வாக்கு வங்கியைக் கொண்ட கட்சி என்பதை உணர வேண்டும். சிறுபான்மையோரின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்குத் தனது அடிப்படை அரசியல் கொள்கைகளை, சித்தாந்தங்களைச் சீர்படுத்தி, அவற்றைச் செயல் திட்டங்கள் வழி முன்னெடுத்தால், அது தமிழ்நாடு அரசியலில் புதிய வடிவம் பெறும். அதுவரை அ.தி.மு.க. எனும் கவிழ்ந்த கப்பல் கரை ஏறாது.