Namvazhvu
மனித மாண்பிற்கான திரு அவைக் கோட்பாடு
Wednesday, 17 Apr 2024 10:43 am
Namvazhvu

Namvazhvu

மனித மாண்பு குறித்த திரு அவைக் கோட்பாடானது திருப் பீட விசுவாசக் கோட்பாட்டுத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ், செயலர் பேரருள்திரு அர்மாண்டோ மேட்டியோ, பேராசிரியர் பாவோலா ஸ்கார்செல்லா அவர்களால் ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மனித மாண்புக்கு எதிரான கொடிய வன்முறை குறித்த  அறிக்கைகள் இக்கோட்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இக்கோட்பாடானது கருவில் உள்ள குழந்தைகள் மற்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் உயிரைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துபவர்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வாழ்வைக் காக்க கவனம் செலுத்துபவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நீக்குவதற்கும் உதவுகின்றது. பகுத்தறியும் திறனின் விளைவாகத் திரு அவையானது பிறக்காத குழந்தை, முதியவர், மனநலக் குறைபாடு உடையவர் உள்பட எல்லா மனிதரின் மாண்பையும் மதிக்கின்றது. ‘வறுமை என்பது சமகால உலகின் மிகப்பெரிய அநீதி. போர் என்பது மனித மாண்பை மறுக்கும் செயல் மற்றும் மனித குலத்திற்கான தோல்வி. மனித வர்த்தகமானது நாகரிகமான சமூகம் என்றழைக்கப்படும் நமது சமூகங்களின் அவமானம்என்று இக்கோட்பாடு வரையறுக்கிறது. மேலும், மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் வர்த்தகம், சிறார் பாலியல் வன்முறை, அடிமைத் தொழிலாளர்கள், விபசாரம், போதைப்பொருள், ஆயுதக் கடத்தல், வன்முறை போன்ற சர்வதேசக் குற்றங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும்  என்பதையும் இக்கோட்பாடானது வலியுறுத்துகிறது.