Namvazhvu
இறைவேண்டலின் பரிமாணங்கள் 2. இறைவேண்டலில் ‘ஆராதனை’
Wednesday, 08 May 2024 10:04 am
Namvazhvu

Namvazhvu

இறைவேண்டலின் பல பரிமாணங்களுள், இறைவேண்டலின் அடிப்படைக் கூறுகளான ஆராதனை, இறைபுகழ்ச்சி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் ஆகிய ஐந்தையும் சற்று ஆய்வு செய்வோம். இந்த ஐந்திலும் தலையானது ஆராதனையே.

முதலில் இந்தச் சொல் பற்றிய ஒரு விளக்கம்: ‘ஆராதனைஎன்னும் சொல்லே நமது திருவிவிலியத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? காரணம், அது ஒரு  சமஸ்கிருதச் சொல். அதன் நல்ல தமிழ் வடிவம்வணக்கம், தொழுகை, வழிபாடுஎன்பனவே. இருப்பினும், ‘ஆராதனைஎன்னும் சொல்லாடல் நமது பயன்பாட்டில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளதால், அந்தச் சொல்லையே இங்குப் பயன்படுத்துகிறோம்.

ஆராதனைஎன்றால் என்ன? “நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20:2-3) என்னும் இறைமொழிக்கேற்ப, கடவுளை மட்டும் தொழுவதே ஆராதனையாகும். இக்கட்டளையை விளக்கும் இயேசுஉன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” (மத் 22:37) என்று தெளிவுபடுத்தினார். எனவே, வேறு தெய்வங்களை வழிபடுவதும், கடவுளை முழுமையாக அன்பு செய்யாமல்பிளவுபட்ட மனத்தோடு’ (1கொரி 7:34) அவரை அன்பு செய்வதும் முதல் கட்டளைக்கு எதிரான பாவம்.

ஆராதனைக்குத் திருவிவிலிய எடுத்துகாட்டுகள் பல உள்ளன. “உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள்” (இச 8:19) என்பது இஸ்ரயேல் மக்களுக்குத் தரப்பட்ட எச்சரிக்கை.

புதிய ஏற்பாட்டில் அலகை இயேசுவைச் சோதித்தபோது அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” (மத் 4:9) என்றது. இயேசுவோ வணங்க மறுத்துவிட்டார்.

திருவெளிப்பாடு நூலில், காட்சி கண்ட யோவான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தார். வானதூதரோ அவரிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும், உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” (திவெ 19:10) என்றார்.

வணங்குதல்என்னும் சொல்லுக்கு இணையாகதொழுகைஎன்னும் சொல்லும் திருவிவிலியத்தின் பல இடங்களில் காணப்படுகின்றன. வணங்குதல் கடவுளுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மாறாக, தொழுகை என்னும் சொல் கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தொடக்க நூலில் ஆபிரகாம்ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப் பெயரைத் தொழுதார்’ (தொநூ 12:8) என்று வாசிக்கிறோம். முதல் பாஸ்கா வழிபாடு பற்றி மோசே இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது, மக்கள்தலை வணங்கித் தொழுதனர்’ (விப 12:27). நெகேமியா நூலில் ஒரு காட்சி: எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்திஆமென்! ஆமென்! என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்’ (நெகே 8:6).

ஆராதனை என்பதற்குவழிபாடுஎன்னும் சொல்லும் திருவிவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" (யோவா 4:24) என்று சமாரியப் பெண்ணிடம் கூறினார் இயேசு.

வழிபாட்டின் எதிர்ச்சொல்லேசிலை வழிபாடு.’ ‘அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக, அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்’ (உரோ 1:23) என்று சிலைவழிபாட்டை விளக்கினார் பவுலடியார்.

எனவே, நமது இறைவேண்டலில் ஆராதனை முதன்மை இடத்தைப் பிடிக்கிறது. அடிப்படையில், ஆராதனை என்பது சொல்லால், பாடலால் வெளிப்படுவதைவிட, மனநிலையில் (Attitude) வெளிப்படுவதே சிறந்தது. நம் வாழ்வில் அனைத்திற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வதும், கடவுளுக்கு முதன்மைத்துவம் அளிப்பதுமே ஆராதனை.

மேலும், இந்த ஆராதனை செயலிலும், வாழ்விலும் வெளிப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, இறைவனோடு செலவழிக்க நேரம் ஒதுக்க வேண்டும். இறைவனைவிட தொலைக்காட்சி, அலைபேசி, இணையதளம் ஆகியவற்றில் பொழுது போக்கிற்காக அதிக நேரம் செலவழிக்கும்போது, சமூக ஊடகங்களே நவீன சிலைகளாக மாறி விடுகின்றன.

புதிய ஏற்பாடு செல்வம், மனிதர்கள், உலக இன்பங்கள் ஆகியவற்றைப் புதிய சிலைகளாகக் காட்டுகிறது. “நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6:24) என்றார் இயேசு. பேராசையைச்சிலை வழிபாடாகிய பேராசை’ (எபே 5:5) என்று அழைத்தார் பவுலடியார்.

எனவே, நாம் தந்தையாம் கடவுளைஅவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவோமாக’ (யோவான்-4:23). செல்வம், மனிதர்கள், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலாக ஆண்டவரையே நம் உள்ளத்திலும், வாழ்விலும் முதன்மைப்படுத்துவோமாக! இதுவே உண்மையான ஆராதனை. இதுவே இறைவனுக்கேற்ற இறைவேண்டல்!