Namvazhvu
வாழ்க்கையைக் கொண்டாடு – 42 இப்படியே இருந்து விடலாமா?
Wednesday, 15 May 2024 10:40 am
Namvazhvu

Namvazhvu

நேற்றைய நாள் போல இன்றைய நாள் இல்லை. சென்ற மாதம் கண்ட சிலவற்றை இந்த மாதம் காணமுடிவதில்லை; ஆறு மாதத்திற்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் இப்போதில்லை. நேற்று கண்ட மனிதன் இன்று வேறொருவனாய் மாறிவிடுகிறான். சில நேரத்திற்கு முன்பு பார்த்த காட்சிகள் இப்போதில்லை. சில நொடிகளுக்கு முன் இருந்த மனநிலை இப்போது அப்படியே இருப்பதில்லை. இப்படிப் பல்வேறு மாற்றங்களைக் கண்டுதான் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. பல்வேறு மாறுதல்களை உள்வாங்கித்தான் நம்மை நாமே புடம்போட வேண்டியுள்ளது. ‘இது எதுவுமே தேவையில்லை; இதனால் என்ன மாற்றங்கள் எனக்கு வந்து விடப் போகிறது?’ எனும் சலிப்புத் தட்டிய நிலை வந்தாலும், சில நேர மணித் துளிகளில் அந்த மனம் மாறி, வேறொன்றை நோக்கிச் சென்றுவிடுகிறது.

நெருங்கிய உறவு இறந்த தருணத்தில், மன வலியோடு நம் வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவிற்கு அப்போதைய சூழல் தோன்றினாலும், சில நாள்களிலேயே இயல்பு நிலைக்கு நம்மை அறியாமலே நம் மனம் மாறிவிடுகிறது அல்லது அன்றாடச் சூழலுக்கு ஏற்ப மனம் அதை நோக்கி ஓடிவிடுகிறது. ஆதலால், ‘இதில்தான்என்று ஒருபோதும் மனம் நிலைத்து, இலயித்து நின்றுவிடுவதில்லை. அப்படியே, அங்கேயே இருந்து விடுவதில்லை. அடுத்தது என்ன என்பதை நோக்கியே நாம் பயணப்பட வேண்டியுள்ளது. அந்தப் பயணத்தில் நாம் பெறும் அனுபவங்களே வாழ்க்கைப் பாடமாக நமக்கும், நம்மைப்  பின்பற்றுவோருக்கும் அமைந்துவிடுகிறது.

மொத்தத்தில்இப்படியே இருந்து விடலாமா?’ எனத் தோன்றினாலும், அப்படியே நாம் இருந்து விடாமல், நம்மை நகர்த்திக்கொண்டே அடுத்தது நோக்கி நகரும் நிலைதான் எல்லாருக்கும் வாய்த்துள்ளது. அதுதான் இயற்கையின் திட்டமும் கூட என்று சொல்லலாம்.

இப்படி நிலையற்ற நிலையில் இருந்து கொண்டுதான், நிலையான ஒன்றை நிலை நிறுத்துவேன் என்று  சவால் விடுகிறோம். நிலையானது என்ற ஒன்று இல்லையா? நிலையானது ஒன்று இருக்கா? இல்லையா? எனும் கேள்விக்குப் பதிலைத் தேடுவதைவிட, நிலைத்து நிற்பதற்கான வழிகளைத் தேட ஆரம்பிப்போமா? அதெப்படி? அறிவார்ந்தவர்களிடம் கேட்டால், ‘நல்லது செய், நல்லது நோக்கி நட, நீ என்றென்றும் நிலைத்து இருப்பாய்எனும் பதில்கள் வரும்.

இது தனிப்பட்ட மனித நிலை பற்றியது. ஒரு நிறுவனம் இந்த நிலையை எப்படி அடைய முடியும்? ‘முடியும்என்கிறது மேலாண்மை. அதுதான்Change Managementஎன்று அழைக்கப்படும் மாற்ற மேலாண்மைச் செயல்முறை. மாற்ற மேலாண்மை என்பது நிறுவனத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செயல்படுத்தி, அதை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மெருகேற்றும் ஒரு வெற்றிச் செயல் முறையாகும். வணிகச் செயல்முறையில் மாற்றம், வரவு-செலவுத் திட்ட முறைகளில் சரியான அணுகு முறை, நிறுவனத்தை மெச்சத்தக்க வகையில் மாற்ற உறுதுணையாக இருக்கும் பிற செயல்பாட்டு முறைகளின் பயன்பாட்டைத் திருத்தி அல்லது மறு வரையறை செய்து, ஒரு மேம்பட்ட வளர்ச்சியைக் காண வைக்கும் ஒரு சிறந்த நடைமுறைதான் இந்த மாற்ற மேலாண்மை.

ஒரு நிறுவனத்திற்குள் மாற்றத்தை ஏற்படுத்த எட்டு படிமுறைகளை ஜான் கோட்டார் எனும் அமெரிக்க மேலாண்மை ஆய்வாளர் பின்வருமாறு கூறுகிறார்:

செயல்படுத்தப் போகும் மாற்றத்தை வெறுமனே முன்வைப்பதை விட, மாற்றத்தின் அவசியத்தைப் பார்க்க வேண்டும்.

அந்த மாற்றத்தைச் செயல்படுத்தத் தகுதியுள்ள பணியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஒரு குழுவாக அமைத்து வாய்ப்பை வழங்க வேண்டும்.

தகுந்த வழிகாட்டலைத் தொடர்ந்து அந்தக் குழுவிற்கு வழங்க, சிறந்த ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

சிறந்த தொலைநோக்கு மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குங்கள்; மாற்றத்திற்குப் பிறகு முன்னேற்றம் எப்படி இருக்கும் என்பதை எல்லார் மனத்திலும் ஓட விடுங்கள்.

கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக ஒரு மாற்றத்தைச் செயல்படுத்துவதில் பணியாளர்கள் சந்திக்கும் சவால்களை அறிந்து, முன்னேற்றத்தை எளிதாக்க அந்தத் தடைகளை உடையுங்கள்.

மாற்றத்திற்கான பாதையில் ஆரம்பகால வெற்றிகளை அங்கீகரிப்பதன் மூலம் வேகத்தையும், உந்துதலையும் அதிகப்படுத்தலாம்.

நிறுவன முன்னேற்றத்தைப் பற்றி அனைவரும் உற்சாகமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க சின்னச் சின்ன வெற்றிகளை அடையாளம் கண்டு கொண்டாடுங்கள்.

முதல் சில சிறிய வெற்றிகளுக்குப் பிறகு மாற்றத்தில் உறுதியாக இருங்கள். அந்த வெற்றிகளை, மேலும் மேலும் உங்களை முடுக்கி விடும் தூண்டுகோலாகப் பயன்படுத்துங்கள்.

ஒரு நிறுவனத்தில் ஏன் மாற்ற மேலாண்மை தேவைப்படுகிறது?’ எனும் பொதுவான கருத்து நமக்கு வரலாம். கீழ்க்காணும் சூழ்நிலைகளால் இந்த மாற்றம் என்பது அவசியமாகிறது:

புதிய தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த.

தலைமைத்துவம் அல்லது மேலாண்மையில் தேவைப்படும் மாற்றம்.

வேலை பார்க்கும் பணியாளர்களிடம் சூழலுக்கு ஏற்ப தேவைப்படும் கலாச்சார மாற்றம்.

மற்ற நிறுவனங்களைத் தம் நிறுவனங்களோடு இணைக்கும்போது அல்லது கையகப்படுத்தும் போது.

தற்போதைய செயல்முறைகளில் கட்டாயமாகத் தேவைப்படும் மாற்றம்.

பணியாளர்கள் மற்றும் கட்டமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள்.

மற்ற மேலாண்மையை விட, மாற்ற மேலாண்மை மிக மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது எதனால்? ஏனென்றால், இந்த மாற்றம் ஒரு நிறுவனத்தில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் கொண்டது. இதில்தான் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையும், அதன் எதிர்காலமும் உள்ளடங்கி இருக்கும். இந்த மாற்றத்திற்கான முன்னெடுப்பில் பல்வேறு துறைகள் பங்கெடுத்தாலும், மனிதவளத் துறையின் பங்கு கணிசமானது.

இந்த மாற்ற மேலாண்மையில் எல்லாரும் ஒரு சேரப் பங்கெடுத்து, ஒரே நாளில் நாம் எதிர்பார்க்கும் நோக்கத்தை அடைந்து விடுவதில்லை. சில முட்டல்கள், மோதல்கள், பிழைகள், தோல்விகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பின்வாங்காமல், எல்லாருக்குமான அவசியத்தை உணர வைத்து, அனைவரையும் அந்த வெற்றிக்குள் கொண்டு வருவது எளிதான செயல் அல்ல; ஆனால், நடைமுறைப்படுத்தக்கூடிய செயல்தான்.

பிழைகளும், தோல்விகளும் இல்லாமல், கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை” - லெனின்.

தொடர்ந்து பயணிப்போம்...