2024 - தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகப் பல தகவல்களை வெளியிட்டன. சீனா இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்து, புதிய கிராமங்களை உருவாக்கி விட்டது. அதற்குச் சீன மொழிப் பெயர்கள் வைத்து, புதிய குடியேற்றங்களும் நடந்துள்ளன. சீன இராணுவம் சென்றுவர புதிய வழித்தடங்கள் போடப்பட்டுள்ளன. இந்திய நிலப்பரப்பில் பல்லாயிரம் சதுர மைல்கள் உள் நுழைந்து விட்டது. எல்லைக் கோட்டைச் சீனா மதிக்கவில்லை. பிரதமர் மோடியோ பாராளுமன்றத்தில்கூட சீனா என்ற பெயரை உச்சரிக்கப் பயப்பட்டார். இந்த இலட்சணத்தில், இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை இருக்கிறது.
“எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சீனாவிடம் தூதரக ரீதியில் தெளிவாகக் கூறிவிட்டோம்; ஆனால், அவர்கள் அதனைத் தொடர்ந்து செய்து படைகளைக் குவித்தால், எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வழக்கமானதாக இல்லை என்று அர்த்தம். கடந்த சில நாள்களாக இது தெரிகிறது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சப்பைக் கட்டுக் கட்டுகிறார்.
மோடி அரசு சீனா மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை என்று எந்த எல்லை தேசங்களோடும் நட்புறவில் இல்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. அகண்ட தேசம் பற்றி தன் சாகா வகுப்புகளில் பாடமெடுத்து விட்டு மௌனம் காக்கிறார்கள்.
வங்கதேசத்தில் இந்துகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தங்களை இந்துகளின் பாதுகாவலன் என அடையாளப்படுத்திய ஒன்றிய அரசு மௌனம் காத்தது. வங்கதேசத்தில் நதிநீர் உரிமைகளை இந்தியா மீறுகிறது என்ற கட்டற்றப் பொய்ப் பிரச்சாரம், வங்க மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
இவ்வாறாக, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்துவிட்டது. இலங்கையில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்ட போதும் அமைதியாகத் தூங்கி விட்டார்கள். ஏன், குட்டித் தீவான மாலத்தீவு கூட இந்தியாவிடம் வாலாட்டுகிறது. மாலத்தீவில் இந்து மகாகடல் பிராந்தியப் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது. நவம்பர் 2023 -இல் ஆட்சிக்கு வந்தவுடன், சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் புதிய அதிபர் முய்ஸு, தீவு நாட்டிலிருந்து தனது இராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.
“இந்த ஆண்டு பிப்ரவரியில், மார்ச் 10 முதல் மே 10 வரை மாலத்தீவில் நிலைகொண்டுள்ள 80-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை இந்தியா வெளியேற்றும்” என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. கடந்த மூன்று மாதங்களில் இரண்டு அணிகள் ஏற்கெனவே திரும்பப் பெற்றுள்ளன.
மாலத்தீவில் உள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் தற்போதைய பணியாளர்களுக்குப் பதிலாக, திறமையான இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்களால் இயக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுதான் இந்திய வெளியுறவுத் துறையின் இலட்சணமாக இருந்தது.
மோடி வெளிநாடுகளுக்குப் பறந்து பறந்து பயணம் செய்தாரே, அதன் பயன் என்ன? என்பதற்கான விடை அம்பானியிடமும், அதானியிடமும் மட்டுமே இருந்தது. பிரதமர் இந்தியாவில் இருந்ததைவிட, வெளிநாடுகளில் இருந்ததே அதிகம் எனப் பேசப்பட்டது. அதன் பலன் பூஜ்ஜியம் எனவும் தெரிய வருகிறது. இதில் மக்கள் வரிப்பணம் பல்லாயிரம் கோடி வீண் என்பதே உண்மை.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி (விசா) தடை செய்யப்பட்டிருந்தது. அது குஜராத்தில் அவர் செய்த அநீதச் செயல்களால் என்பதை நினைவுகூர வேண்டியது கட்டாயம்.
பிரதமரானவுடன் அவருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் உள்ளான உறவு டெக்சாஸ் நகரில் தேர்தல் பிரச்சாரம் வரை நீண்டது. அது குடியரசுக் கட்சி, சனநாயகக் கட்சி என மாறி வரும் ஆட்சி சூழலில், மோடியின் டிரம்ப் ஆதரவுப் பிரச்சாரம், இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவாகக் காணப்பட்டது. அமெரிக்காவும், ஜெர்மனியும் குடியுரிமைச் சட்டம், கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் போன்றவைகளில் தங்கள் கண்டனத்தைப் பதிந்தனர். கனடா நாட்டில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் படுகொலை குறித்து கனடா பிரதமரே, இந்திய அரசு மற்றும் உளவுத்துறை மீது பகிரங்கக் குற்றச் சாட்டை முன்வைத்தார். இந்தியாவில் மதச்சுதந்திரமின்மை, சிறுபான்மையோர் பாதுகாப்பின்மை என்ற குற்றச்சாட்டுகளை, ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளன.
மத்திய அரசின் பிரதானிகளின் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுகளால், எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள், இந்திய அரசுமீது நம்பிக்கை இழந்ததும் கவலை கொள்ளக்கூடியதே. ஒரு மதச்சார்பற்ற அரசு மதவெறி அரசாக இருப்பது பரிதாபம்.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அணிசேரா கொள்கை எனினும், அதன் இரஷ்ய சார்பு உலகறிந்த செய்தி. உக்ரைன் போரை உலக நாடுகள் கண்டித்தபோது, இந்தியா போர் நிறுத்தம் பற்றிப் பேசியதே தவிர, ஐ.நா. வாக்கெடுப்புகளில் நடுநிலை அல்லது வாக்களிக்காமல் போனது. இதே நிலையை இஸ்ரயேல்-பாலஸ்தீன் போரிலும் தொடர்ந்தது. இவ்வளவு மோசமான வெளியுறவுக் கொள்கை எக்காலத்திலும் இந்திய அரசில் இருந்ததே இல்லை.
மோசமான பொருளாதாரச் சீர்குலைவைச் சந்தித்துள்ள இலங்கை, சீனச் சார்பு நிலையிலிருந்து மாறவில்லை. கச்சத்தீவு குறித்த இந்தியக் கருத்துகளுக்கு, இலங்கை அமைச்சரின் அடாவடித்தனப் பதிவுகளில் இருந்தே, நம் வெளியுறவுக் கொள்கைகளின் தோல்வியை அறியலாம். தெற்காசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராஜதந்திர செல்வாக்கு, இந்தியாவை நிலைகுலைய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. வங்கதேசத்தோடு உள்ள சீன வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியா-வங்கதேச வர்த்தக ஒப்பந்தங்கள் பின்னலாடைத் தொழிலை முடக்கியது இதன் மறுபக்கம்.
இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் வெளியுறவுக் கொள்கையானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்குச் சேவை செய்வதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஆயினும், மக்களவையில் பா.ச.க.வின் மோசமான வெளியுறவுக் கொள்கையில் இருந்து மீள்வதே, புதிய அரசிற்கான பெரும் சவால்.