Namvazhvu
இறைவேண்டலின் பரிமாணங்கள் - 5 இறைவேண்டலில் மன்றாட்டு
Friday, 31 May 2024 04:41 am
Namvazhvu

Namvazhvu

இறைவேண்டலின் பல பரிமாணங்களுள் இறைவேண்டலின் அடிப்படைக் கூறுகளான ஆராதனை, இறைப்புகழ்ச்சி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் ஆகிய ஐந்தையும் ஆய்வு செய்கிறோம். இந்த ஐந்திலும் நமக்கு மிகவும் அறிமுகமானது மன்றாட்டே. பெரும்பாலான நமது இறைவேண்டல் நேரம் மன்றாட்டுகளிலேயே கழிகிறது என்பதையும், மன்றாட்டைவிட இறைப்புகழ்ச்சியும், அர்ப்பணமும் மேலானவை என்பதையும் நாம் முதலில் உணரவேண்டும். இருப்பினும், மன்றாட்டுக்கும் இறைவேண்டலில் ஓர் இடம் இருக்கிறது. எனவே, மன்றாட்டின் பரிமாணங்களை இறைவார்த்தையின் ஒளியில் மேலோட்டமாகக் காணலாம்.

“கேளுங்கள், கொடுக்கப்படும்” (மத் 7:7) என்றும், “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” (யோவா 16:23) என்றும் இயேசு நமக்கு உறுதியளித்துள்ளார். எனவே, நாம் உரிமையுடன் கேட்கலாம்.

ஆனால், என்ன கேட்க வேண்டும்? என்னும் கேள்விக்கு மறைநூல் விரிவான விடைகளைத் தருகிறது. திருவிவிலியத்தின் பரிந்துரைகள் மூன்றினை இங்கே காண்போம்:

1. விண்ணகக் கொடைகளுக்காக மன்றாடுவோம்: ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு இயேசு வயிறார உணவளித்தார். எனவே, மறுநாளும் அவர்கள் இயேசுவைத் தேடி வந்தார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு வாழ்வின் மாபெரும் மதிப்பீடு ஒன்றைப் போதித்தார்.

“அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்; அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவா 6:27) என்பதே அப்போதனை. அவர்களும் அந்தப் போதனையை ஏற்றுக்கொண்டு, “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” (யோவா 6:34) என்று வேண்டினர்.

நாமும் “எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம்” (மத் 6:31) என்று மண்ணகக் கொடைகளுக்காக மன்றாடாமல், அழியாத வாழ்வு தரும் இறைவார்த்தை, நற்கருணை போன்ற விண்ணகக் கொடைகளுக்காக மன்றாடுவோமாக.

2. தூய ஆவியாருக்காக மன்றாடுவோம்: எதற்காக நாம் மன்றாட வேண்டும் என்பது தொடர்பான வேறொரு போதனையில் இயேசு இவ்வாறு கூறினார்: “தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி” (லூக் 11:13). எனவே, நாம் தூய ஆவியாரை நமது கொடையாக மன்றாடுவோமாக.

3. ஞானத்திற்காக மன்றாடுவோம்: நாம் என்ன கேட்கிறோம் என்பது, நாம் யார் என்பதைக் காட்டுகிறது. “யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்” (1கொரி 1:22) என்றார்  பவுலடியார். அறிவாற்றல் மிக்கவரான கிரேக்கர்கள் ஞானத்தை நாடியதில் வியப்பில்லை. “நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்”  என்கிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் (51:13).

எனவே, நாமும் ஞானத்திற்காக மன்றாட அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு. “உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” (யாக் 1:5).

“கேளுங்கள், கொடுக்கப்படும்” என்று வாக்குறுதியளித்தவர் நாம் ஞானத்தைக் கேட்டால், தாராளமாக வழங்குவார் என்பதற்குத் திருவிவிலியத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஓர் எடுத்துக்காட்டு சாலமோன்.

நீடிய ஆயுள், செல்வம் போன்ற மண்ணக ஆசிகளைக் கோராமல், ஞானத்தைக் கோரினார் சாலமோன். “உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை-தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்” (1அர 3:9) என்பதே சாலமோனின் மன்றாட்டு. 

“சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது” (1அர 3:10) என்று அவரைப் பாராட்டுகிறது திருவிவிலியம். ஆண்டவரும் அவரது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர் கேட்ட ஞானத்தையும், “இன்னும் நீ கேளாத செல்வத்தையும், புகழையும் உனக்குத் தருவேன்” (1அர 3:13) என்று கூறி அவரை ஆசீர்வதித்தார். எனவே, இறைவனிடம் நாம் மன்றாடும்போது பின்வரும் இரண்டு வழிகாட்டுதல்களையும் மனத்தில் கொள்வோம்:

1. ஆண்டவரைத் தேடுவோம்: “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33) என்பது இயேசுவின் போதனை.

2. நாம் வேண்டுவதற்கு மேலாகவே அருள்பவர் ஆண்டவர்: கடவுளின் வல்லமையையும், நன்மைத்தனத்தையும் எடுத்துரைக்கும் தூய பவுலடியார், “நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும், நாம் வேண்டுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக” (எபே 3:20)  என்று கடவுளைப் போற்றுகிறார்.

ஆம், இவற்றை மனத்தில் கொண்டு நாம் இறைவனிடம் நம் வேண்டுதல்களை ஏறெடுப்போமாக!