ஓர் இளைஞன் தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தான். அவனுக்கு ஒரு நான்கு சக்கர வாகன விற்பனையகத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலையும் கிடைத்தது. விற்பனைப் பிரதிநிதி என்ற வகையிலே நேர்த்தியாக உடையணிந்து, கடைக்கு வருகிறவர்களைப் புன்முறுவலோடு வரவேற்று, கவர்ச்சிகரமாகப் பேசி, வாகனங்களை அறிமுகம் செய்து, வருகிறவர்களை வாங்குகிறவர்களாக மாற்ற வேண்டும். ஆனால், அந்த இளைஞனுக்கு அந்தத் திறனோ துளியும் இல்லை.
சில நாள்களிலே அந்தக் கடையின் மேலாளர் அந்த இளைஞரை அழைத்து, சகட்டு மேனிக்குத் திட்டுகிறார். “உனக்கு இனிமேல் இங்கே வேலை கிடையாது! நானும் மூணு மாசமாகப் பாக்குறேன். உன்னால திறமையாகப் பேசி ஒரு வாகனத்தைக்கூட விற்க முடியவில்லை!”
அந்த இளைஞன் மேலாளரிடம் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே, கண்ணீரோடு சொன்னான்: “எனக்கு இயல்பா பேச வரமாட்டேங்குது சார்! நான் என்ன செய்யட்டும்?”
“அது எங்களுக்கும் தெரியுது. அதனால்தான் சொல்றேன், உனக்கு இனிமேல் வேலையில்லை” என்று கடுகடுப்புக் காட்டினார் மேலாளர்.
“ஐயா, எனக்கு இந்த வேலைதான் வரமாட்டேங்குது. தயவுசெய்து வேற ஏதாவது ஒரு வேலை கொடுங்க.… நான் வேற எதுக்காவது பயன்படுவேன்” என்று சொல்லி அழுதே விட்டான்.
அந்த மேலாளர் பரிதாபப்பட்டு, அவனைக் கணக்கு எழுதும் வேலையில் அமர்த்தினார். அந்த வேலை அவனுக்குப் பொருத்தமாக இருந்தது. கூடிய விரைவிலே எல்லார் மதிப்பையும் பெற்று அந்த நிறுவனத்தின் நிதி மேலாளராக உயர்ந்து விட்டான்.
இந்த இளைஞருக்கு ஒரு துன்பமான அனுபவத்திற்குப் பிறகு, மனதுக்குப் பொருத்தமான மகிழ்ச்சியான வேலை அமைந்துவிட்டது. ஆனால், பலருடைய வாழ்விலும் இப்படி நடப்பதில்லை. அவர்கள் தங்கள் ஆளுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாத வேலைகளைத் தேர்ந்தெடுத்துத் துன்பத்தோடு காலத்தைக் கடத்துவதைப் பார்க்கிறோம்.
ஏன், பலரும் தாங்கள் செய்யும் வேலைகளில் மகிழ்ச்சியில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இதைக் கண்டறிய ஜான் ஹாலண்ட் (John Holland) என்னும் கல்வி உளவியலாளர் ஓர் ஆய்வினை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவிலே அவர் ‘வேலையைத் தேர்ந்தெடுக்கும் விதி’ (The Theory of Career Choice) ஒன்றை முன்மொழிந்தார். அதன்படி, ‘தங்கள் ஆளுமைக்கு முற்றும் எதிரான ஒரு வேலையில் இருப்பதாலே பலரும் வேலையிடங்களில் மகிழ்ச்சியாக இல்லை’ என்றார். ஆகவே, மாணவர்கள்தான் தாங்கள் படிக்கும்போதே தங்கள் ஆளுமை வகைகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும் வேலைகளை நிர்ணயம் செய்து, அதற்கேற்ற மேற்படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி, மாணவர்களும் தங்கள் ஆளுமை வகைகளைக் கண்டுபிடிக்க வசதியாக ஆறு வகைத் தொழில் ஆளுமை வகைகளை அறிமுகம் செய்தார்.
1. செயல் ஆளுமை: இவர்கள் செயல் வீரர்கள்! கருவிகளை இயக்குவது, கட்டுவது, சரிசெய்வது, நிலத்தைப் பண்படுத்துவது, கால்நடைகளைப் பராமரிப்பது என உடலுழைப்பு விரும்பிகள். இவர்களுக்கு விமானம் ஓட்டுவது, விவசாயம், கட்டட வேலை, இராணுவம், மின்சாரத்துறை, விளையாட்டுத் துறை போன்ற உடலுழைப்பு சார் வேலைகள் பொருத்தமாக இருக்கும்.
2. சிந்தனை ஆளுமை: ஒருசிலருக்குச் சிறு வயதிலிருந்தே தர்க்கரீதியாகச் சிந்திப்பது, கணக்குப் போடுவது, அறிவியல் ஆய்வு செய்வது, புதியவற்றைக் கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, எழுத்துவழி கருத்துகளை வெளியிடுவது, வடிவமைப்பது போன்ற திறன்கள் இருக்கும். இவர்களுக்குப் புலனாய்வுத்துறை, ஆய்வகப் பணிகள் (வேதியியல், உயிரியல், வானியல், இன்னும் பல), கணினி மென்பொருள் உருவாக்கம் போன்ற வேலைகள் பொருத்தமாக இருக்கும்.
3. கலைப் படைப்பு ஆளுமை: ஓவியம், இசை, நடனம், நாடகம், காட்சித் தொடர்பு இவற்றின் வழியாகக் கலைப் படைப்புகளை உருவாக்கும் திறன் இவர்களுக்கு மிகுந்திருக்கும். ஆகவே, ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், கதாசிரியர், நடன இயக்குநர், நடிகர், விளம்பர உருவாக்குநர், சிகை, உடை, வீட்டின் உள்புற அலங்கார நிபுணர் போன்ற வேலைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
4. சமூக ஆளுமை: மக்களோடு இணைந்து பணியாற்றுவது, பிறருக்கு உதவி செய்வது, ஆறுதல் சொல்வது, பயிற்சி கொடுப்பது, மக்களை ஒருங்கிணைப்பது, கற்றுக்கொடுப்பது போன்ற திறன்கள் இவர்களிடம் மிகுந்திருக்கும். இவர்களுக்கு ஆசிரியர், தொழில் முனைபவர், ஆற்றுப்படுத்துநர், அரசியல் தலைவர், சமூகச் சேவை பணியாளர், மருத்துவ உதவியாளர் போன்ற பணிகள் பொருத்தமாக இருக்கும்.
5. தலைமைத்துவ ஆளுமை: பேசி மக்களைத் தன்வயப்படுத்துவது, அடுத்தவரை உற்சாகப்படுத்துவது, திறமையாகப் பேசி விற்பது, திட்டமிட்டுச் சாதிப்பது, நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து தாக்கங்களை உருவாக்குவது போன்ற திறன்கள் இவர்களிடம் மிகுந்திருக்கும். இவர்களுக்கு விற்பனைத்துறை, வழக்கறிஞர், அரசியல் தலைவர், தொழிலதிபர், அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகளின் நிர்வாக இயக்குநர்கள், விளம்பரம் செய்பவர் போன்ற தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.
6. ஒழுங்குபடுத்தும் ஆளுமை: இந்த ஆளுமைப் பண்பு உடையவர்கள் தானுண்டு, தன் பணியுண்டு என அமைதியாக, தனியாக வேலை செய்ய விரும்புவார்கள். பொருள்களை ஒழுங்குபடுத்துவது, தகவல்கள், கோப்புகள், பணம் இவற்றைப் பத்திரப்படுத்துவது, அறைகளை மிக நேர்த்தியாகப் பராமரிப்பது போன்றவை இவர்கள் திறமைகளாக இருக்கும். இவர்களுக்கு அலுவலகச் செயலாளர்கள், வரவேற்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், நூலகர், வங்கிப் பணியாளர், பொருள்களை ஒழுங்குபடுத்துபவர் போன்ற வேலைகள் பொருத்தமாக இருக்கும்.
ஜான் ஹாலண்ட் அவர்களின் தொழில் ஆளுமை வகைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, அந்த வாகன விற்பனையகத்தில் ஏன் அந்த இளைஞனுக்கு முதலில் ஒரு கசப்பான பணி அனுபவம் கிடைத்தது? என்பதைப் புரிந்திருப்பீர்கள். அமைதியான சிந்தனை ஆளுமைதான் அந்த இளைஞனின் இயல்பான ஆளுமை வகை. அந்த ஆளுமையைக் கொண்டு, அவனால் ஒரு விற்பனைப் பிரதிநிதியாகப் பேசி வெற்றிபெற முடியவில்லை. ஆனால், நிதி மேலாளராக அமைதியாகக் கவனமாக உழைத்து, மகிழ்வையும் வெற்றியையும் ஒருசேரப் பெற முடிந்தது.
ஆனால், இங்கே நாம், ஒருவரிடம் ஒரு வகை ஆளுமை, பாறையில் பொறிக்கப்பட்ட எழுத்து போல அப்படியே வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருப்பதில்லை என்பதையும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பேச்சாளர் ஒரு மிகப்பெரிய விழா மேடையில் அருமையாக உரை நிகழ்த்தியதைப் பார்த்த அவருடைய தமிழ் ஆசிரியர் பக்கத்திலிருப்பவர்களிடம் “பள்ளிக்கூடத்துல படிக்கும்போது வகுப்புல வாயத்திறந்து பேசவே மாட்டான். அவ்வளவு கூச்சப்படுவான். இப்போ மேடையில எப்படித் தைரியமாக அழகா பேசுறான் பாருங்க” என்று சொல்லி வியந்தார்.
ஆகவே, முயன்றால் ஒரு வேலைக்குத் தகுந்த ஆளுமையை நம்மால் உருவாக்க முடியும். ஆயினும், இயல்பாக, இயற்கையாக, சிறுவயது தொட்டே நம்மோடு இருக்கும் ஓர் ஆளுமையோடு தொடர்புடைய வேலைப்பிரிவை நிர்ணயம் செய்து, அதற்கேற்ற மேற்படிப்பைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வில் வெற்றி எளிதாகும் என்பதைத்தான் நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும். சரியான முடிவுகளை எடுத்து மகிழ்வோடு படிக்கவும், பணியாற்றவும் வாழ்த்துகள்!