2024 - மக்களவைத் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்கு முந்திய, பிந்திய கருத்துக் கணிப்புகளைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. தொங்கு பாராளுமன்றம் அமைந்து விட்டது. எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும், எந்த மசோதாக்களை நிறைவேற்றினாலும், மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் தேவை; தேசிய சனநாயகக் கூட்டணிக்கும், ஏன் ‘இந்தியா’கூட்டணிக்கும் இந்த அறுதி, உறுதி பெரும்பான்மை இல்லை. யாரும் நினையாத நேரத்தில் ஆட்சி கவிழ்க்கப்படலாம்.
பீகாரிலும், ஆந்திராவிலும் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக, தாங்கள் அரசியலை விட்டு விலகப் போவதாகக் கண்ணீர் விட்டு, கதறியழுது பேட்டிகள் கொடுத்த நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஒன்றிய அரசைத் தீர்மானிக்கப் போகிறார்கள். இவர்கள் இருவரின் பதவி ஆசை குறித்த வரலாறுகள் பலே இரகம்! சொந்த மாமனார் என்.டி. ராமாராவ் வெளிநாடு சென்று வருவதற்குள், கட்சியை உடைத்து, ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் நாயுடு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டணி மாறி, ஆட்சியைத் தக்க வைப்பதில் சாதனை படைத்தவர் ‘ஜங்கிள் குமார்’ எனும் நிதிஷ்குமார். இந்த யோக்கிய சிகாமணிகள் 2014- இல் சந்திரபாபு நாயுடுவும், 2019-இல் நிதிஷ் குமாரும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மோடிக்கு மாற்றாகப் பிரதமருக்கு முன்னிறுத்தப்பட்டவர்கள்.
தேர்தல் முடிவுகள் மாறக் காரணங்கள் என்ன? தென் இந்தியாவில் பா.ச.க. தேறாது என்ற கணிப்பு மாறிவிட்டது. கர்நாடகாவில் கடந்த மக்களவைத் தேர்தலைவிட ஆறு சீட்டுகள் குறைந்தாலும், பா.ச.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பா.ச.க. 11 சீட்டுகளைப் பெற்று விட்டது. கேரளாவிலும் பா.ச.க. நுழைந்து விட்டது. தமிழ்நாட்டில் மட்டுமே கருத்துக் கணிப்புகளுக்கு உட்பட்டு ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றது.
இந்திய அரசியலில் ஒரு நம்பிக்கை உண்டு. உத்தரப்பிரதேசத்தில் வெல்லும் அணி, ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்பதே. சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸ் கட்சியும், பிற கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 44 இடங்களைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளன. முதல் நான்கு சுற்றுகளில் மோடி பின் தங்கியது கவனத்திற்குரியது. அயோத்தியின் பைசாபாத் தொகுதியில் பா.ச.க. மண்ணைக் கவ்வியது. விவசாயிகள் போராட்டம் நடத்திய பஞ்சாப்பில் பா.ச.க. தமிழ்நாடு போலவே முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அரியானாவில் பத்து சீட்டுகளில் பாதிக்குப் பாதி காங்கிரஸ் கட்சியும் பெற்றது. இதுவும், தலைநகர் தொகுதிகள் தோல்வியும் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவாக மாறியது.
ஒடிசா மற்றும் ஆந்திர ஆளும் மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையும், மக்களவைத் தேர்தலில் எதிரொலித்து, அது பா.ச.க.வைத் தேற்றியது. ஒடிசாவின் 21 தொகுதிகளில் 19 தொகுதிகளைப் பா.ச.க. கைப்பற்றி, ஒரு பாதுகாப்பான நிலைக்கு வந்தது. கடந்த மக்களவையில் மோடியின் மக்கள் விரோதச் சட்டங்களை எடப்பாடி பழனிசாமி போல கண்மூடி ஆதரித்தவர்கள்தான் ஆந்திராவின் ஜெகன்மோகன் மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் போன்றோர். நாளை இதே நிலை நாயுடுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் வரலாம். அதுதான் பா.ச.க.வின் அநாகரிகம். தரம் தாழ்த்துவது என்பது பா.ச.க. பாணி. அதைத் தேர்தல் களத்திலும் எதிரொலித்தார்கள்.
முதல் இரண்டுகட்ட வாக்குப் பதிவிற்குப் பின், மோடி தன் தரம் தாழ்ந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இரண்டு வீடு, இரண்டு எருமை ஆகியவற்றில் ஒன்றைக் காங்கிரஸ் பிடுங்கி முஸ்லிம்களுக்குக் கொடுக்கும் என்ற இந்துத்துவாவை மக்களிடம் வெறியாக்கினார். மோடியின் மதவாத பேச்சுகள் குறித்த புகார்களைத் தேர்தல் ஆணையம் குப்பையில் போட்டது. மோடியின் பேச்சுக்காகப் பா.ச.க. கட்சித் தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது வேடிக்கை.
ஊடகங்களைச் சந்திக்காத மோடி கீழிறங்கி, நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் தனி பேட்டிகள் கொடுத்தார். ‘எப்படி 400 சீட்டுகள் வெல்வோம் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள்?’ என்ற வினாவுக்குப் பிரதமரின் பதில் ‘அது ஒரு ஜிம்லா’ என்கிறார். கடைசியில் 370-க்கு இறங்கினார். கடந்த 2014 தேர்தல் களத்தில் மோடி, அயல் நாடுகளில் உள்ள இந்தியக் கறுப்புப் பணத்தை மீட்டெடுத்து, இந்திய மக்களுக்கு, ஆளுக்கு 15 இலட்சம் தருவேன் என்ற ஜிம்லாவின் தொடர்ச்சி இது. தமிழ்நாட்டில் இதற்குப் பெயர் ‘வாயில் வடை சுடுவது’ அல்லது ‘மோடி சுட்ட வடை.’
மக்கள் களத்தைக் கவனித்தார்கள். எது உண்மை? எது உண்மையற்றது? என்று ஆய்ந்தார்கள். இரண்டு கூட்டணிகளும் நினையாத மாநிலங்களில் வெற்றி பெற்றார்கள். ‘வெற்றி பெறுவோம்’ என்று நினைத்த இடத்தில் தோற்றார்கள். மத்தியப் பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணி இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாறாக, வட மாநிலங்களில், குறிப்பாக மராட்டிய மக்கள் பெரும்பான்மை இடங்களை ‘இந்தியா’ கூட்டணிக்கு வழங்கி, துரோக ஷிண்டேவுக்குப் பாடம் கற்பித்தனர். ஜார்க்கண்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்பதும் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவே. சாம, பேத தண்டங்களைக் கையில் எடுத்தும் பா.ச.க. 400, 370 எனப் படியிறங்கி, 240-இல் வென்றது. மோடியின் கியாரண்டி எடுபடவில்லை.
தேர்தலுக்கு முன்பே 400 இடங்கள் என்று கட்டமைக்கப்பட்ட பா.ச.க.வின் மூளைச் சலவை பிரச்சாரம் ஒட்டுமொத்த ஊடகங்கள் மோடிமீது கட்டமைத்த மாயபிம்பம் என்பதெல்லாம் பெரும் சவால் எனலாம். மக்கள்மீது நடத்தப்பட்ட உளவியல் சார்ந்த மனத் தாக்குதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது ‘இந்தியா’ கூட்டணிக்குப் பெரும் போராட்டமாக அமைந்தது.
‘இந்தியா’ கூட்டணிப் பிரச்சாரத்தில் மாநில உரிமைகள், விவசாய விளைப்பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பெண்களுக்கு மானியத் தொகை. சாதிவாரி கணக்கீடு, அக்னிபாத் நீக்கம், இட ஒதுக்கீடு என மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தியது. சிறுபான்மையோர், பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்களின் வாக்குகளைப் பெற்று 234 தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணி பெற்றது.
‘இந்தியா’கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது; சரத்பவார் பேசுகிறார்; ஸ்டாலின் பேசுகிறார் போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவினாலும், அது உண்மை இல்லை. புதுதில்லியில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே “பாசிச அரசைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவோம்” என்கிறார்.
கடந்த காலத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதா, வாஜ்பாய் அரசைக் கவிழ்த்ததுபோல, நாளை மோடி அரசைக் கவிழ்ப்பது நிதிஷ்குமாரா? சந்திரபாபு நாயுடுவா? யார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.