அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் ‘ஜி7’ உச்சி மாநாடு இத்தாலியின் புக்லியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்துத் தனது சிந்தனைகளைத் திருந்தந்தை பகிர்ந்துகொண்டார்.
“அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதர்களின் படைப்புத் திறனின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு; உண்மையில், செயற்கை நுண்ணறிவு என்பது துல்லியமாக, கடவுளால் கொடுக்கப்பட்ட படைப்புத்திறனை மனிதன் முழுமையாகக் கட்டி ஆள்கின்றார் என்பதன் அடையாளமாக இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவானது தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், புள்ளி விவரங்களின் அடிப்படையிலும் முடிவுகளை இயந்திரம் தானாக எடுக்கின்றது. ஆனால், மனிதனின் முடிவு என்பது அவருடைய இதயத்திலிருந்து எடுக்கப்படுகின்றது.
இயந்திரம் செயல்பட்டாலும், முடிவு என்பது மனிதனின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். குறிப்பாக, மனித உயிரைப் பறிக்கும் ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவின் முழுக் கட்டுப்பாடு மனிதரிடத்தில் இருக்க வேண்டும். மனித மாண்பு பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “மிகவும் மாறுபட்ட துறைகள் மற்றும் திறன்களை உள்ளடக்கிய ஓர் ஆரோக்கியமான அரசியல் மட்டுமே செயற்கை நுண்ணறிவின் சவால்கள் மற்றும் வாக்குறுதிகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டது” என்றார்.