ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் 2020-ஆம் ஆண்டு வெளிவந்தது. எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி, மிக அதிகமான பிரதிகள் விற்று விரைவில் சாதனை படைத்தது. ஆலிசன் வாட்ஸ் மொழிபெயர்த்த இதன் ஆங்கிலப் பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்து, இப்போது ஆங்கிலம் பேசப்படும் நாடுகளிலெல்லாம் பேசப்படுகிற நூலாக ஆகியிருக்கிறது. இப்போது இன்னும் 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இந்தப் புதினத்தை எழுதியவர் மிச்சிக்கோ ஆயாமா எனும் 54 வயது ஜப்பானியப் பெண்.
இந்த நாவலில் ஐந்து அத்தியாயங்கள்தான். ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒருவர் தனக்கு நேர்ந்ததைச் சொல்கிறார்.
முதல் அத்தியாயத்தில் நாம் காண்பது, டொமோக்கா எனும் 21 வயது பெண். மகளிர் உடைகள் விற்கும் ஒரு துணிக்கடையில் பணியாற்றும் பெண். அங்கே அவள் பணியாற்றுவதற்கு ஒரே காரணம், அந்தக் கடை மட்டும்தான் அவளை வேலைக்கு அழைத்தது. வேலை கேட்டு அவள் அனுப்பிய விண்ணப்பங்களை ஏறக்குறைய முப்பது நிறுவனங்கள் நிராகரித்திருந்தன. எனவே, இந்தத் துணிக்கடையின் அழைப்பு கிடைத்ததும் வந்து வேலையில் சேர்ந்து விட்டாள்.
அவளுக்கென்று கனவுகள் எதுவும் இல்லை. அவள் விரும்பி இரசிக்கும் காரியங்கள் என்னவென்று யாராவது கேட்டால், சொல்வதற்கு அவளிடம் எதுவும் இல்லை. காதலன் என்று யாரும் இல்லை. கரைந்து கொண்டே இருக்கும் காலத்தால், வயதாகிக் கொண்டே வருவதை உணர்கிறாள். கணினியைப் பயன்படுத்தவாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.
இரண்டாவது அத்தியாயத்தில் நாம் காண்பது, 35 வயதான ஆண். பெயர் ரியோ. மரச்சாமான்கள் செய்யும் நிறுவனத்தில் கணக்குப் பிரிவில் வேலை செய்பவர். இந்த வேலை அவருக்குப் பிடிக்கவே இல்லை. பழமையான பொருள்களில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால், புராதனப் பொருள்களை விற்கும் கடை ஒன்று தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த ஆசை அரும்பி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்னும் இவரிடம் இந்தக் கடை திறப்பதற்கான பணமோ, திட்டமோ எதுவும் இல்லை.
மூன்றாவது அத்தியாயத்தில் தனது நிலையைச் சொல்வது நட்சூமி என்ற 40 வயது பெண். பல பத்திரிகைகள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் பதிமூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ள திறமை வாய்ந்த பெண். அத்தனை ஆண்டுகளும் அவள் செய்தது இளம்பெண்களுக்கான ஒரு பத்திரிகையின் இதழாசிரியர் பணி. திடீரென்று தான் கருவுற்றிருப்பது அப்பெண்ணுக்குப் புரிந்தது. கருவுற்ற பெண் சந்திக்கும் அத்தனை சிரமங்களையும் சமாளித்து, கடைசி மாதம் வரை வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்களுக்குத் தரப்படுகிற மகப்பேறு விடுப்பு ஜப்பானில் பதினான்கு மாதங்கள். இவள் நான்கே மாதங்கள் சென்றதும் மறுபடியும் வேலைக்கு வந்து விட்டாள்.
வேலைக்கு வந்த முதல் நாளே நிறுவனத்தின் தலைவர் அவளை அழைத்து, முக்கியமில்லாத மற்றொரு துறைக்கு அவளை மாற்றியிருப்பதாகச் சொல்கிறார். ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு முன்பு போல ஓர் இதழாசிரியர் செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய இயலாது என்பதால்தான் இந்த மாற்றம் என்கிறார் அவர். அவள் என்ன சொல்லியும் தன் முடிவை மாற்றிக்கொள்ள தலைவர் தயாராக இல்லை.
நான்காவது நபர் யார்? ஹிரோயா என்ற 30 வயது ஆண். பள்ளிப் படிப்பை முடித்தவன், அதற்கு மேல் படிக்கவில்லை. எந்த வேலையும் இல்லை. வரைவதில் ஆர்வம் இருந்ததால், பள்ளிப் படிப்பை முடித்ததும் இதழ்களையும், நூல்களையும் வடிவமைக்கும் கலையைக் கற்றுக் கொண்டான். ஆனால், இதுவரை நல்ல வேலை எதுவும் கிடைக்கவில்லை.
இவர்கள் எல்லாரையும் விட வயதில் மூத்த மசாவோவை ஐந்தாம் அத்தியாயத்தில் பார்க்கிறோம். அவருக்கு வயது 65. ஒரே நிறுவனத்தில் 42 ஆண்டுகள் வேலை செய்த பின், கடந்த செப்டம்பரில் வந்த அவரது 65-வது பிறந்த நாளன்று பணி ஓய்வு பெற்றார். 42 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் இரயிலேறி, அதே அலுவலகத்திற்கு வந்து, அதே மேஜையில் அமர்ந்து, கடமையுணர்வோடு பணியாற்றிய மசாவோவிற்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பணியாற்றிய ஆண்டுகளில் பலரோடு நாள் முழுவதும் பேசியவர். தினமும் பலர் அவரோடு பேச வருவார்கள். இப்போது அவரிடம் பேச ஆளில்லை. பணி ஓய்வு பெற்றபின் வந்த புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து அட்டைகளோ, பரிசுகளோ எதுவும் வரவில்லை. ‘ஏராளமான நண்பர்கள் எனக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் புரிகிறது, அந்த நட்புகள் எல்லாம் வணிக உறவுகள் என்று. இவர்மீது அக்கறையோ, அன்போ கொண்ட உண்மை நண்பர்கள் யாரும் இல்லை என்ற உண்மை அவரை வதைக்கிறது.
இந்த ஐந்து பேர்களும் தங்கள் தேவைகள், ஆசைகளுக்கேற்ற புத்தகங்களைத் தேடி அந்த நூலகத்திற்கு வருகிறார்கள். அங்கே நூலகராக இருந்தது சயூரி கொமாச்சி என்ற அரிய பெண். நூலகத்திற்கு வருவோரிடம் சயூரி கேட்கும் முதல் கேள்வி, “நீங்க என்ன தேடறீங்க?” (What are you looking for?)
யோவானின் சீடர்கள் இருவர் தம்மைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து இயேசு கேட்டது இதுதான்! (யோவான் 1:38). இயேசு கேட்ட முதல் கேள்வி இதுதான் என்பதைத் திருவிவிலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நூலகத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களைத் தேடி வரும் நபர்களிடம் சயூரி, “என்ன தேடறீங்க?” என்று கேட்டதும், அவர்களின் கண்கள் கலங்குகின்றன. ஏனென்றால், சில நூல்களை மட்டுமல்ல, வாழ்க்கைக்கு முக்கியமான வேறு சில காரியங்களையும் தேடிக் கொண்டிருப்பது அவர்களுக்குத்தானே தெரியும்.
அவர்களிடம் பேசி, கேள்விகள் கேட்டு, அவர்களின் நிலையைப் புரிந்துகொள்ளும் சயூரி, அவர்கள் கேட்கும் புத்தகங்களோடு மற்றொரு புத்தகத்தையும் பரிந்துரைக்கிறார்.
இந்த ஐவர் கேட்காவிட்டாலும், அவர்களுக்கென்றே சயூரி தேடித் தரும் நூலை வாசிக்க, வாசிக்க அவர்களின் ஆழ்மனக் கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றன. அவர்களைப் பாதித்த பிரச்சினைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை கிடைக்கிறது. புதிய வழியொன்று புலப்படுகிறது.
இப்போது இந்தப் புதினத்தின் பெயரைச் சொல்லலாம். ‘வாட் யூ ஆர் லுக்கிங் ஃபார் இஸ் இன் த லைப்ரரி’ (What You Are Looking for Is in the Library). நீங்கள் தேடுவது நூலகத்தில் உள்ளது என்பது எவ்வளவு பொருத்தமான தலைப்பு!
நூல்களும், இதழ்களும் நம் எளிய வாழ்க்கைக்கு எத்தனை வளங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினால் மலைப்பாக இருக்கும்.
அவசியமான பல உண்மைகளை அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. நமக்குச் சிறிதும் அறிமுகமில்லாத புதிய உலகங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன. புதினங்கள் என்று அழைக்கப்படும் நாவல்கள், நாம் இவ்வுலகை விட்டு உயரப் பறந்து புதியதோர் உலகில் உலவ வைக்கின்றன. வேறெதுவும் தர முடியாத நிறைவை, இன்பத்தை நல்ல நூல்கள் நமக்குத் தருகின்றன.
சில நூல்கள் நல்லாசிரியர்கள் போல நமக்குக் கற்றுத் தருகின்றன. சில நூல்கள் நம்மை மாற்றி புதிய நபர்களாய் நம்மை உருவாக்குகின்றன. இலக்கியத் தரம் வாய்ந்த எந்தப் படைப்பும், அது எந்த மொழியில் இருந்தாலும் நமக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை எது தெரியுமா? மனித வாழ்க்கையையும், சக மனிதர்களையும் புரிந்து கொள்ள அவை நமக்குப் பேருதவி புரிகின்றன.
கிறிஸ்தவர்களுக்குத் திருவிவிலியம் போல, இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் திருக்குர்ஆன் போல, இந்து சகோதரர்களுக்குப் பகவத்கீதை போல, மறைநூல் எனும் ஒரு நூல் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால், இத்தனை பயன்களும் வாசிப்போருக்கு மட்டுமே சாத்தியம். வாசிப்பதில் ஆர்வம் இல்லாதோர், வாசிக்க நேரம் இல்லாதோர் இத்தனை பயன்களையும் இழந்து விடுகின்றனர்.
வாசிக்க இயலாதோர் என்று யாரும் உண்டா? பார்வைத் திறனும், படிப்பறிவும் இருந்து விட்டால் வாசிக்க இயலாதோர் என்று யாரிருக்க முடியும்? என்று சிலர் கேட்கலாம். வாசிக்க இயலாமல் சிலர் இருப்பதற்கான காரணத்தை நாம் இன்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இணையதளங்கள், கைபேசி, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி போன்றவை விளைவிக்கும் தொடர்ந்த கவனச் சிதறல்களால், சிலருக்குக் கவனத்தைக் குவித்து, எதையும் கருத்தாய்ச் செய்ய இயலாமல் போய்விடுகிறது. நான்கைந்து வரிகளுக்கு மேல் சேர்ந்தாற்போல இவர்களால் படிக்க இயலாது. நான்கு வரிகளை வாசித்து விட்டு, ‘போரடிக்குது’ என்று சொல்லிப் புத்தகத்தை வைத்து விடுகிற நபர்கள் இவர்கள்.
ஒரு நிமிடம் கூட எதையும் செய்யாமல், அமைதியாய்ச் சும்மா இருக்க இயலாமல் கைபேசியை நோண்டத் தொடங்கி விடும் இளைஞர்களை நாம் இப்போது எங்கும் பார்க்கலாம். ஆனால், வாசிக்க இயலாதோர் அனைவருமே இளையோர் அல்ல என்பது சோகமான உண்மை. பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத் தாவும் பிரச்சினைகள் போல, சில பிரச்சினைகள் பிள்ளைகளிடமிருந்து போய் பெற்றோரைத் தொற்றிக்கொள்கின்றன.
சுவாசிப்பதையும், நேசிப்பதையும் போலத்தான் வாசிப்பதும். நல்ல காற்றைச் சுவாசித்தால், நாம் நலமோடு வாழ இயலும். நல்ல மனிதர்களை நெருங்கிய உறவுகளுக்குத் தேர்ந்துகொண்டு நேசித்தால் நாம் நிம்மதியாய், நிறைந்த மகிழ்வோடு வாழ முடியும். நல்ல நூல்களை, நல்ல இதழ்களை, நல்ல எழுத்தாளர்களைத் தேடித் தேடி நாம் வாசித்தால், எண்ணற்ற வளங்கள் நம் வாழ்விற்குள் வந்து சேரும்.
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்.)