Namvazhvu
30, ஜூன் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு - சாஞா 1:13-15,2:23-24; 2கொரி 8:7,9,13-15; மாற் 5:21-43
Friday, 28 Jun 2024 07:11 am
Namvazhvu

Namvazhvu

நிகழ முடியாதவற்றையும் நிகழ்த்துபவர் நம் கடவுள்!

 ‘ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது’, ‘தம்மருகில் இருப்போரைத் தள்ளிவிடாதவர் இயேசு’, ‘எல்லாம் வல்லவரான இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லை’, ‘இயேசுவின் காலடியில் அமர்வது வியப்பான விளைவுகளை நம் வாழ்விலே ஏற்படுத்தும்.’ இந்த நம்பிக்கை தரும் செய்திகளை இன்று நமக்கு உரக்கச் சொல்கின்றனர் தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிரும், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணும்.

இன்றைய நற்செய்தியின் மையப் புள்ளியாக இருக்கும் இரு வேறு பெண்களின் நிலை பற்றியும், இறைத் தொடுதலால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட எழில்மிகு எதிர்காலத்தைப் பற்றியும், அவை நமக்கு உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்களையும் விரிவாகச் சிந்திப்போம்.

இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் சமூகத்தில் எந்த அளவுக்கு வேதனை அடைந்திருப்பார் என்பதைத் திருவிவிலியம் மிக அழுத்தமாக எடுத்துரைக்கிறது. லேவியர் நூல் 15-ஆம் அதிகாரம், இரத்தப்போக்குடைய பெண் தீட்டானவர் என்பதைத் தீர்க்கமாகப் பதிவிடுகிறது. தீட்டுப் பட்டவர் வந்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, தொடப்பட்டவரும் தீட்டு என்று சொல்லி இவர்களைப் புறக்கணித்தது அன்றைய சமூகம். தீட்டுடைய பெண், தீட்டைப் போக்க ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும். குடும்பப் புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பு, சமயப் புறக்கணிப்பு எனத் துன்பத்தின் கோரப்பிடியில் காலம் முழுவதும் யாருடைய தொடர்புமின்றி வாழும் இவர்களுக்கு, இறைவன் ஒருவரே அடைக்கலம். இப்படிப் பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணை நாம் இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த ஒரு மனிதரை நலமாக்கி விட்டுப் படகிலேறி மீண்டும் மறு கரைக்கு வந்த இயேசுவை எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு பெருங் கூட்டம் சூழ்ந்துகொண்டது. இதில் தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர், சாகும் தறுவாயில் இருக்கும் தனது மகளை நலமாக்க வேண்டிக்கொள்கிறார். இயேசுவும் அவரோடு செல்கின்றபோது, பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் துன்புற்ற ஒரு பெண்ணும் இயேசுவைப் பின்தொடர்கிறார். இதுவே இந்தப் பெண்ணின் இறுதி முயற்சியாகக் கூட இருந்திருக்கலாம். ஏனென்றால், அவர் மருத்துவர் பலரிடம் தனக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர் (மாற் 5:26). இயேசு எப்படியும் சுகம் தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அப்பெண் இயேசுவின் ஆடையைத் தொடுகிறார்; நலம் பெறுகிறார்.

இந்தத் தொடுதலால் இவர் உடலளவில் மட்டுமல்ல; பெண்ணென்றும், அதிலும் இரத்தப் போக்குள்ள பெண்ணென்றும் தன் பெண்ணினச் சமூகத்தின்மீது தீட்டுகளைச் சுமத்தித் தங்களை இரண்டாம் தரமாக நடத்தும் சமூகத்தின்மேல், ஆண்கள்மேல், சட்டங்களை இம்மியும் பிசகாமல் காப்பாற்றும் சமயத் தலைவர்கள்மேல், இவர்கள் தூக்கிப்பிடிக்கும் சமயத்தின்மேல், அந்தச் சமயத்தின் மையமாகக் கருதப்படும் கடவுள்மேல்... பன்னிரு ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் உள்ளத்தில் வேரோடியிருந்த வேதனைகள், தலைமுதல் கால்வரை புரையோடியிருந்த வெறுப்புகள் அனைத்திலுமிருந்தும் முழு விடுதலை பெறுகிறார்.

பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் துன்புற்றப் பெண்ணை நலமாக்கிய சூழலில் இயேசு, யாயிரின் வீட்டுக்குச் செல்லக் காலதாமதமாகவே, ‘அந்தச் சிறுமி இறந்துவிட்டார்என்ற செய்தி இயேசுவுக்குச் சொல்லப்படுகிறது. உடனே தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குள் விரைந்து சென்ற இயேசு, அங்கே ஓலமிட்டுப் புலம்பும் மக்களைப் பார்த்து, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை; உறங்குகிறாள்” (மாற் 5:39) என்று சொல்லும்போது கூடியிருந்த அனைவரும் நகைக்கிறார்கள். இயேசுவோ அந்தச் சிறுமியின் தாய், தந்தை மற்றும் தம்மோடு பேதுரு, யாக்கோபு, யோவான் (மாற் 5:40; லூக் 8:51) ஆகியோரை மட்டும் வீட்டினுள் அழைத்துச் சென்று, குழந்தையின் கையைப் பிடித்து நலமாக்குகிறார் (மாற் 5:41).

இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, ஆழமான, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் புலப்படும். இந்த இரண்டு வல்ல செயல்களும் வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கின்ற இரு பெண்களைப் பற்றிப் பேசுகின்றன. இருவரும்மகள்என்று அழைக்கப்படுகின்றனர் (வச. 23, 34). நலமிழந்த பெண்ணும், மகளை இழந்த யாயிரும்இயேசுவால் எல்லாம் கூடும்என நம்புகின்றனர் (வச. 23, 28). நோயுற்றவரைத் தொட்டால் தீட்டு என்ற யூதச் சட்டங்களையும் கடந்து இருவரும் சிந்திக்கின்றனர் (வச. 23, 27). இரண்டு பெண்களின் நிலை தீட்டு குறித்த சட்டங்களோடு தொடர்புடையவை (வச. 25, 35). இரண்டு பெண்களும் பன்னிரண்டு ஆண்டுகளோடு தொடர்புடையவர்கள் (வச. 25, 42). இரண்டு நிகழ்வுகளிலும் இறைநம்பிக்கை குறிப்பிடப்படுகின்றது (வச. 34, 36). இரு நிகழ்வுகளிலும் இயேசுவின் ஆற்றல் வெளிப்படுகின்றது (வச. 30, 42). இரண்டு பெண்களும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர் (வச. 29, 42). இரண்டு நிகழ்வுகளிலும்தொடுதல்செயல் நிகழ்கின்றது (வச. 27, 41).

வேற்றுமைகள் எவை? எனப் பார்க்கும்போது, யாயிரும், இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணும் அன்றைய யூதச் சமூகத்தில் இருவேறு எதிர் சமூக நிலையில் இருந்தவர்கள். யாயிர் தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவர்; இரத்தப்போக்கினால் வருந்திய பெண் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தவர். சமூகத்தின் உயர் நிலையில் இருக்கும் யாயிர் இயேசுவை நேரிடையாகச் சந்திக்க உள வலிமையுள்ளவர். நோயுற்ற பெண் என்பதாலே இயேசுவை நேரிடையாகச் சந்திக்க வலிமையற்றவர். யாயிர் இறந்த மகளுக்காக உயிர்ப்பிச்சை கேட்டவர். மற்றொருவர், நலம் இழந்து தவித்தவர். ஆயினும், இருவரும் இயேசுவில் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். வாழ்வினால் மகிழ்வுறச் செய்யும் கடவுள், இந்த இரு பெண்களுக்கும் வாழ்வளிக்கும் சக்தியைக் கொடுத்து மீட்கிறார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியச் செய்தியாகும்.

இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நோயினால் வருந்திய பெண்ணும், சாகும் தறுவாயில் இருக்கும் சிறுமியும் வாழ்வை இழந்து நிற்பவர்கள். இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண் பன்னிரண்டு ஆண்டுகளாய் துன்புற்றதாகவும், இறந்த யாயிரின் மகள் பன்னிரண்டு வயதுடையவர் என்றும் மாற்கு குறிப்பிடுகின்றார் (வச. 25, 42). இயேசு இவர்கள் இருவரில் ஒருவருக்கு நலமும், பிறிதொருவருக்கு உயிரும் அளித்தார் என்று ஒரு வரியில் கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்தியப் பெண், குழந்தை பெற்றெடுக்கும் ஆற்றலை இழந்து நிற்கிறார். பன்னிரண்டு வயதில் பூப்பெய்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு, குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய சிறுமி இறந்து கிடக்கிறார். (முற்காலத்தில் பன்னிரண்டு வயது என்பது திருமண வயதாகப் பார்க்கப்பட்டது.) எனவே, இங்கு இவர்கள் இருவருமே பெண்மையின் முழுமையை அடையாமலே தங்கள் வாழ்வை முடிக்கின்றார்கள் எனப் பொருள் கொள்ளலாம். அதாவது, ‘பிள்ளைப் பேறுஎனும் பெண்மைக்குரிய ஆசியைப் பெறாமல், தங்கள் வாழ்வை இழக்கும் சூழலை இவர்கள் இருவரும் எதிர்கொள்கின்றனர். மக்கள்பேறு ஆண்டவர் அளிக்கும் பரிசில்! (திபா 127:3). எனவேதான் இயேசு, நோயிலும் சாவிலும் இருந்து இவர்கள் இருவரையும் மீட்டு, அவர்களின் உடலில் உயிர் அளிக்கும் ஆற்றலைக் கொடுத்து, தங்கள் வாழ்வை முழுமையாய் வாழ வழி செய்கிறார்.

இந்த இரு வல்ல செயல்கள் வழியாக இயேசு, ‘விண்ணகத் தந்தைஎப்படிப்பட்டவர் என்பதைச் சுற்றி நின்ற குழுவிற்கும், நமக்கும் உணர்த்துகிறார்.

i. கடவுள் நாம் அழிவதில் மகிழ்வதில்லை. மாறாக, நாம் வாழ்வதில்தான் அவர் மகிழ்ச்சியும், நிறைவும் காண்கிறார். அவர் சாவின் கடவுள் அல்லர்; மாறாக, வாழும்/வாழ்வோரின் கடவுள். மக்களை வாழ்வினால் மகிழ்வுறச் செய்வதே அவர் காட்டும் அன்பு (முதல் வாசகம்).

ii. கடவுள் தமக்குச் சொந்தமான மேன்மை, புகழ், வல்லமை, அதிகாரம் எல்லாவற்றையும் துறந்து, ஓர் அடிமையாகப் பிறந்து எல்லா வகையிலும் ஏழையாகத் திகழ்ந்தார். இந்தத் தாழ்ந்த நிலை மனிதரைக் கடவுளிடம் நெருங்கி வரச் செய்ய உதவியது (இரண்டாம் வாசகம்).

iii. கடவுள் கொடிய நோயினின்று கைதூக்கி விடுபவர். அவரது பேரிரக்கமும், பேரன்பும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அவரை நோக்கிக் கதறும் அடியார்களின் புலம்பலை மகிழ்ச்சியாக மாற்றுபவர் இறைவன் (திபா 30).

கடவுள் எப்படிப்பட்டவர் என்று இந்த இரு நிகழ்வுகள் வழியாகக் கற்றுத் தந்த இயேசுவின் செயல்களிலிருந்தும், இயேசுவிடம் வேண்டிக் கொண்ட யாயிர் மற்றும் நலம்பெற்ற பெண்ணிடமிருந்தும் நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

நாம் மையம் என்று கருதுபவை ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாறும் என்பதே அந்தப் பாடம். சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள், சமூகத்தில் முதன்மையானவர்கள் ஆகிறார்கள். ஏழை, எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரகசியமாக இயேசுவை அணுகி, யாருக்கும் தெரியாமல் அவரது ஆடையின் ஓரங்களைத் தொட்டாலே போதும் (மாற் 5:29) என்று எண்ணி வந்த பெண்ணை, ஓரங்களிலே விட்டுவிட மனமில்லாமல் அவரைக் கூட்டத்தின் மையத்திற்கு அழைக்கிறார் இயேசு. பெயரற்ற அந்தப் பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்குடைய பெண் சமுதாயத்தினின்று விலக்கி வைக்கப்பட வேண்டும் என்னும் யூத மைய விதியை ஓரங்கட்டிவிட்டு, அந்தப் பெண்ணைமகளேஎன அழைத்து இன்னுமோர் அதிசயத்தை அப்பெண்ணின் வாழ்வில் நிகழ்த்துகிறார். சமுதாயத்தின் ஓரங்களில், விளிம்புகளில் வாழ்பவர்களை மையத்திற்குக் கொண்டு வரும் கலை இயேசுவுக்கு நன்கு தெரிந்த கலை!

மிகப்பெரிய பதவியில் இருந்தாலும், சாகும் தறுவாயிலிருந்த தன் மகளை நலமாக்குமாறு இயேசுவின் காலில் விழுந்து வேண்டிய தொழுகைக்கூடத் தலைவர் யாயிர், ‘ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்என்ற உணர்வில் அனைத்து ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறி வந்த நோயுற்ற பெண் ஆகிய இருவரின் ஆழமான இறைநம்பிக்கை நமக்கு ஒரு பெரிய சவால்.

நிறைவாக, ‘தம்மருகில் இருப்போரைத் தள்ளிவிடாதவர் இயேசுஎன்பதை உணர்ந்துகொள்வோம். ‘எல்லாம் வல்லவரான இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லைஎன்ற அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வோம். கடவுளின் நலமாக்கும் கரங்களாக மாறி, காயமுற்றோரை, பிணியுற்றோரை நமது வேண்டலாலும், நம்பிக்கையாலும் தொட்டு நலப்படுத்த நாமும் முன்வருவோம். நிகழ முடியாதவற்றையும் நிகழ்த்துபவர் நம் இயேசு ஒருவரே என்பதை முழுமையாக நம்பலாம் அன்றோ!