திருப்பலி முன்னுரை
இன்றைய ஞாயிறு வழிபாடு, விமர்சனத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி எடுத்துரைக்கிறது. ‘எந்த ஒரு தலைவரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது அதீத உணர்ச்சி தேவையில்லை’ என்கிறார் நெல்சன் மண்டேலா. வாழ்வில் எதையும் செய்யாதவர்கள், விமர்சனத்தை ஒருபோதும் சந்தித்திருக்க மாட்டார்கள். நாம் புதிதாக ஒரு செயலைச் செய்யும்போது மட்டும்தான் விமர்சனங்கள் எழும். எதிர்மறை விமர்சனங்களால் நாம் ஒருபோதும் கலங்கிடத் தேவையில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு ஓர் இறைவாக்கினர் என்பதை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். எந்த இறைவாக்கினரும் தங்கள் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; அதுபோலவே இயேசுவும் தம்முடைய சொந்த மண்ணில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விமர்சனம் என்பது நம்மை நாமே செதுக்கும் உளியே தவிர, வெட்டும் கோடாரி அல்ல; ஆயினும், ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இயேசு அங்கும் நற்செய்தியை அறிவித்தார்; உடல் நலமற்றோரைக் குணப்படுத்தினார். அதுபோலவே, பிறர் நம்மீது அழிவுக்குரிய விமர்சனம் வைத்தாலும், நன்மை செய்வதை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தன்னுடைய பலவீனத்தைத் தன்னுடைய சுய ஆய்வில் கண்டுகொண்டு, அதனை இறைவனின் வல்லமையால் நிறைவாக்கியதைப் போல, இறைவனின் துணையால் சுய ஆய்வை மேற்கொண்டு திறம்பட வாழ்வை அமைப்போம். அதற்காக இந்தத் தெய்வீகத் திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினரையும், இறைவார்த்தையையும் பிரிக்க முடியாது. இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கக் கூடியவர்தான் இறைவாக்கினர். நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்குக் கூடுதலான கவனமும், ஊக்கமும் தேவையில்லை. அதுபோல இறைவார்த்தையின்படி வாழ்பவர்களுக்கு இறைவாக்கினர் தேவையில்லை. நம்பிக்கையற்றவர்களுக்கும், கலகம் செய்பவர்களுக்கும்தான் இறைவாக்கினர் தேவை என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
குறையைக் குறைவாகப் பார்ப்பவன் மனிதன்; குறையை நிறையாகப் பார்ப்பவன் மாமனிதன்! நம்மிடம் அது இல்லை, இது இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தால் வாழ்வின் சுவையைச் சுவைக்க முடியாது. குறைவில் நிறைவு காண்பவர்கள்தான் வாழ்வை முழுமையாக வாழ்கிறார்கள். ‘போதும்’ என்ற மனமே நிறைவான வாழ்வு என்றுரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அனைத்தையும் காக்கும் இறைவா! உமது பெயரால் எம்மை வழிநடத்தும் திருத்தந்தை, பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் ஆசீர்வதித்து, மக்களை நேர்மையான வழியிலும், உண்மையான பாதையிலும் வழிநடத்த அருள்தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணையும், மண்ணையும் ஆளும் உன்னதமான இறைவா! எங்களை ஆளும் எம் நாட்டுத் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். நீர் விரும்பும் அன்பின் ஆட்சியையும், இரக்கத்தின் ஆட்சியையும் தரக்கூடிய ஆற்றலை எம் நாட்டுத் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய்மையான உதடுகளைத் தந்த ஆண்டவரே! எம் நாவைத் தூய்மைப்படுத்தி, அடுத்தவர்களைப் பற்றித் தவறான கருத்துகளைத் தெரிவிக்கும் மக்களாக நாங்கள் இல்லாமல், அடுத்தவர்களின் நன்மைத்தனத்தை அறிவிக்கக்கூடிய ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
4. உண்மையான ஆண்டவரே இறைவா! எங்களிடம் இருக்கின்ற நன்மை, தீமைகளை நாங்களே சுய ஆய்வு செய்துகொள்ள வரத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.