சென்னை உயர்நீதிமன்றம் அரசு ஊதியம் பெறும் குருக்களுக்கும் துறவிகளுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு தர இயலாது என்று வருமான வரித்துறை மேல்முறையீடு செய்த வழக்கில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில் இடைக்காலத் தடையாணை மே மாதம் 9 ஆம் தேதி கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழக ஆயர் பேரவையின் சட்டப்பணிக்குழுவின் தொடர்பணியின் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.
துறவிகள் மற்றும் குருக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க்கூடாது என்ற வாதம் தமிழகத் திரு அவைக்கு மட்டுமல்ல.. அகில இந்திய திரு அவைக்கும் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான வழக்காகும். இதனை வெறுமனே நிதி சுமை ஏற்படுத்தக்கூடிய அரசின் நெருக்கடி என்று மட்டும கடந்து போக இயலாது. அதையும் கடந்து.. காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் துறவற மற்றும் குருத்துவ வாழ்க்கை முறையையே மாற்றக்கூடிய அளவில், கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு விசித்திரமான அரசின் முடிவாக இதனை அணுக வேண்டியுள்ளது.
பள்ளிகளில், கல்லூரிகளில் ஊதியம் பெறும் துறவிகள் மற்றும் குருக்களுக்குக் கடந்த 75 ஆண்டுகளாக, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் பெறும் ஊதியம் முழுமையும், அவர்கள் சார்ந்துள்ள சபை அல்லது மறைமாவட்டம் எனும் திருஅவை அமைப்புகளுக்குச் சென்று சேர்வதாலும், அந்த அமைப்புகள் வருமான வரியிலிருந்து விலக்குப் பெற்றிருப்பதாலும், துறவிகள், குருக்களின் ஊதியத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
1944 முதல் நடைமுறையில் உள்ள வரிவிலக்கு முறையை மாற்றி, 2015 முதல் வருமான வரி செலுத்த வேண்டுமென்று மத்திய அரசின் வருமானவரித் துறை முடிவு செய்தது. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, சென்னையில் உள்ள வருமானவரித்துறையின் முதன்மை ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதன் விளைவாக, அரசக் கருவூலம் மற்றும் கணக்குதணிக்கைத் துறை அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஓர் சுற்றறிக்கையை அனுப்பியது. இதன்படி, கல்விநிறுவனங்களில் ஆசிரியப் பணி மற்றும் ஆசிரியரல்லாத பணி அருள்சகோதரிகளும் அருள்பணியாளர்களும் மத்திய அரசின் நேரடி வரி ஆணையத்தின் (ஊநவேசயட க்ஷடியசன டிக னுசைநஉவ கூயஒநள) டிசம்பர் 5, 1977 ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு இணங்க வேண்டும்.
இதனால், ஊதியம் பெறும் ஒவ்வொரு குருவும், துறவியும் கணிசமான தொகையை வரியாகச் செலுத்த வேண்டிவரும். இது மறைமாவட்டங்களுக்கும், துறவற சபைகளுக்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மறைமாவட்டங்கள், துறவற சபைகள் சார்பாக, 2015-ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. தமிழக ஆயர் பேரவையின் சட்டப்பணிக்குழு இதற்காகக் கடுமையாக உழைத்தது. அருள்முனைவர் மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள் ராஜ் அவர்களும் அருள்சகோதரி அருள்மேரி அவர்களும் இதற்காக வழக்குரைப் பணி செய்தனர். துறவற வாழ்வை மேற்கொள்ளும் குருக்களும் துறவிகளும் மறைமாவட்டத்தில் துறவறச் சபையில் சேர்ந்தபிறகு ஊதியம் உட்பட சொத்துரிமைக்கான தகுதியை இழக்கின்றனனர். திருஅவைச் சட்டத்தின்படி அவர்கள் மேற்கொள்ளும் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய வாக்குறுதிகளை மேற்கொள்கின்றனர். 1944 ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த நடைமுறையில், மாற்றத்தைப் புகுத்துவதால் குழப்பங்களும் குளறுபடிகளும் ஏற்படுகின்றன. வருமான வரித்துறை திருஅவைச் சட்டத்தை மதிக்க வேண்டும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசின் நேரடி வரி ஆணையத்தின் உத்தரவு (டிச.05.1977) இதனை உறுதிப்படுத்துகிறது என்றெல்லாம் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சிவஞானம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி , 2016 அன்று, வழங்கியத் தீர்ப்பில இறுதித் தீர்ப்பில், குருக்கள், துறவிகளுக்கு வரி விதிக்கக் கூடாதென வருமான வரித்துறையின் முதன்மை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதே வழக்கு கேரளாவிலும் நடைபெற்றது. துறவிகள், குருக்களுக்கு எதிராகத் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பை எதிர்த்து, செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசின் வருமான வரித் துறை, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சி.வி.கார்த்திக்கேயன் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அரசின் முடிவு, துறவற வாழ்க்கைமுறைக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் மாறானது என்ற நமது வாதங்களை நீதிபதிகள் பாராட்டினர். இருப்பினும் சட்டத்தின் பார்வையில், ஒரு தனிநபரின் வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க முடியாது. எனவே, ஊதியம் பெறுவோருக்கு வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என மார்ச் 20 ஆம் தேதி 2019 தீர்ப்பு வழங்கினர். ஆயினும், 2015-2016 முதல் 2018-2019 வரையிலான கடந்த காலத்திற்கு நிலுவையிலுள்ள வருமான வரியைச் செலுத்தத் தேவையில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துதான் தமிழகத்திலுள்ள அனைத்துத் துறவற சபைகள், மறைமாவட்டங்கள் சார்பாக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையென்றால், 2019, ஏப்ரல் முதல் அரசு வருமான வரியைப் பிடித்தம் செய்யத் தொடங்கிவிடும். இது தொடர்பாக ஏப்ரல் 05 ஆம் தேதி 2019 அன்று, மறைமாவட்ட, துறவற சபைப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் அசோக் பூஷன் ஆகியோரின் தலைமையில் ஏப்ரல் 29 ஆம் தேதி, மே 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விசாரித்தது. மூத்த வழக்கறிஞர் அர்விந்த பி. தத்தார் திருஅவைச் சார்பாக தம் வாதங்களை முன்வைத்தார். அரசும் வருமான வரித்துறையும் நமது வழக்கைக் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மே மாதம் 9 ஆம் தேதி அன்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் குருக்கள், துறவியர் பெறும் அரசு ஊதியத்திற்கு வரி விலக்குக்குத் தொடர்கிறது.
இவ்வழக்கு, துறவற சபைகளின் நிர்வாகத்திலும், துறவியர் வாழ்விலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமக்கென்று ஏதும் சொந்தமற்ற துறவிகளைத் தம் சொத்திற்குச் சொந்தம் கொண்டாட அரசு கட்டாயப்படுத்துகிறது. இது துறவியரின் அடிப்படைச் சமய உரிமையில் தலையிடுவதாய் அமையும்.
இவ்வழக்குகளை நடத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்த மூத்த வழக்கறிஞர்கள் திரு. அரவிந்த் தத்தார், தந்தை சேவியர் அருள்ராஜ், வழக்குரைஞர் சகோதரி வைதேகி ஆகியோரை தமிழக ஆயர் பேரவையும் தமிழகத் திருஅவையும் பாராட்டி மகிழ்கிறது.