Namvazhvu
சிந்தனைச் சிதறல் – 17 காகிதங்களின் அரசி
Friday, 19 Jul 2024 07:15 am
Namvazhvu

Namvazhvu

2023 - ஆம் ஆண்டில் கிரீனாக்கில் உள்ள வீட்டு அலுவலகத்திலிருந்து ஒரு மேசை, நாற்காலி, கணினி மற்றும் தொலைபேசி இணைப்புடன் ஓர் இலட்சம் முதலீட்டுடன் ஒரு தனிநபராக அமைத்த PG காகிதக் கம்பெனி லிமிடெட், சுமார் 200 ஊழியர்களுடன் ரூ. 650 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் உலகளாவிய செயல்பாடுகளைக் கொண்டு ஆறு கண்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1100 வகையான காகிதங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றையெல்லாம் செய்தது ஆண் அல்ல; ஒரு பெண்! தன்னைப் பற்றி அவரே சொல்கின்றார், நாம் கூர்ந்து கேட்போம் வாருங்கள்.

“இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் 18-20 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த பூனம் குப்தா நான்தான்.

நான் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை வர்த்தகம் செய்பவர். என் தாயார் ஓர் இல்லத்தரசி. எனக்கு நான்கு உடன்பிறப்புகள். அவர்களில் மூத்தவர் நான். அவர்களில் ஒரே பெண் நான் மட்டும்தான்.  நான் 1994 - ஆம் ஆண்டு மதுரா சாலையில் உள்ள டி.பி.எஸ். பள்ளியில் 12 - ஆம் வகுப்பை முடித்தேன். பின்னர் 1997 - ஆம் ஆண்டில் டெல்லியின் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. ஹானர்ஸ் (B.A., Honours in Economics) பட்டம் பெற்றேன். பின்னர் டெல்லியின் ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் (Fore School of Management) சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப் படுத்தலில் MBA முடித்தேன்.

எனக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் மற்றும் நல்ல கல்வி இருந்தது. ஆனால், திருமணத்திற்கு முன்பு எனது கல்வியை முடிக்க நான் போராட வேண்டியிருந்தது. குடும்பத்தில் நான் ஒரே பெண் குழந்தை என்பதால் எனக்குத் திருமணம் செய்து வைக்க என் பெற்றோருக்கு ஒரு சமூக அழுத்தம் இருந்தது. திருமணத்தை நான் விரும்பியது இல்லை; படிப்புக்கும், தொழிலுக்கும்தான் நான் முன்னுரிமை கொடுத்தேன். என் தலைமுறையில், ஒரு பெண் வசதியான குடும்பத்தில் பிறந்தால், அவள் வேலைக்குச் செல்லத் தேவையில்லை என்று கருதினர். அவளை ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க விரும்பினர். அவள் வேலை செய்ய விரும்பினால், அந்த விருப்பத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நன்றாகப் படித்தால், எதிர்காலத்தில் என் கணவனின் வியாபாரத்தில் உதவ முடியும் என்று எண்ணி, எம்.பி.ஏ. முடித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன் என்ற பிடிவாதத்தில் நான் இருந்தேன்.

எம்.பி.ஏ. முடித்த பிறகு வேலை செய்ய விரும்பினேன். நான் என்ன வேலை செய்ய வேண்டும்? யாரிடம் செய்ய வேண்டும்? என்பதை என் குடும்பம்தான் தீர்மானம் செய்தது. என்னை ஒரு குத்தகை நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதித்தது. ஆனால், நான் ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த  வேலையை விட்டுவிட்டேன். நான் அந்த வேலையை இரசிக்கவில்லை, அங்கு எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அது ஒரு மிகச்சிறிய நிறுவனம். நான் வெளியேறியபோது, உரிமையாளர்கள் என்னைத் துணைத் தலைவராக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக எனது சக ஊழியர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு வீட்டிற்கே தெரியாமல் அதிக பகுதிநேர வேலைகளைச் செய்தேன். ஆனால், 2002 - ஆம் ஆண்டில், நான் இறுதியாக என் பெற்றோரின் விருப்பத்திற்கு அடிபணிந்து திருமணத்திற்குச் சம்மதித்தேன். 2002 - ஆம் ஆண்டில் நான் புனீத் என்பவரை மணந்தேன். அவரது குடும்பம் நீண்ட காலமாக ஸ்காட்லாந்தில் வசித்து வந்தது. புனீத் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் மேலாளர் பதவியில் இருந்தார்.

ஸ்காட்லாந்தை அடைந்த குறுகிய காலத்திற்குள் திடீர் நோயால் என் அம்மாவை இழந்தேன். இறக்கும்போது அவருடைய வயது 49. அவரது எதிர்பாராத மரணம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இறந்து ஒரு மாதம் கழித்து நான் ஸ்காட்லாந்து திரும்பியபோது அது மிகவும் தனிமையாகவும், கொடுமையாகவும் இருந்தது. நல்ல மனநிலையில் நான் இல்லை. எனவே, என் மனநிலையை மாற்ற நான் ஒரு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நான் ஒரு வேலையைப் பெற ஆசைப்பட்டேன்; ஆனால், எதுவும் எனக்குச் சாதகமாக நடக்கவில்லை. ஏனென்றால், எனக்கு அனுபவம் இல்லை என்றார்கள்.

எளிதாக விட்டுக்கொடுக்கும் குணமில்லாத எனக்கு, இறுதியாக ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இரண்டு மாதங்களுக்கு ஊதியம் இல்லாத வேலையில் சேர்ந்தேன். இது இங்கிலாந்தில் வணிகம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதற்கான மதிப்புமிக்க வெளிப்பாட்டை எனக்கு வழங்கியது. நானே ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தேன். தொடங்கி அதனை ஆறு மாதங்களுக்குள் மூடிவிட்டேன்; காரணம், தனித்துவமான ஸ்காட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சுவழக்குக் காரணமாக உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வது சவாலாக இருந்தது. பிளேஸ்மென்ட் ஏஜென்சியைக் கையாளும்போது, பத்து மாதங்கள் காகிதத் தொழில் பற்றி அறிந்து, சந்தையைப் பற்றி ஆராய்ச்சி செய்தேன்.

2003 - ஆம் ஆண்டு வெறும் ஓர் இலட்சம் முதலீடு செய்து PG என்ற காதித நிறுவனத்தை நிறுவினேன். எனது நிறுவனம் ஒரு B2B நிறுவனம். நாங்கள் ஓர் இடத்திலிருந்து காகிதத்தை வாங்கி உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப விற்கிறோம். நாங்கள் எந்தச் சில்லறை விற்பனையையும் செய்வதில்லை. பெரிய அளவுகளில் மட்டுமே கையாள்கின்றோம்.

நாங்கள் வணிகத்தைத் தொடங்கிய முதல் வருடத்திலேயே ஓர் இத்தாலிய நிறுவனத்தை எங்களுக்காகக் காகிதம் தயாரிக்கச் சம்மதிக்க வைத்து, எனது முதல் ஒப்பந்தத்தை முடித்தேன். பின்னர் நாங்கள் அதை இந்தியாவுக்கு விற்றோம். பி.ஜி. பேப்பர் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், குறிப்பேடுகள், இந்தியாவில் பேக் செய்யப்பட்ட மசாலா பெட்டிகள், சாக்லேட் பெட்டிகள், பீட்சா பெட்டிகள் மற்றும் மருந்தக நிறுவனங்களுக்கான லேபிள் காகிதம் ஆகியவற்றை விற்கிறது. மிகவும் விலையுயர்ந்த காகிதம் உணவகங்களில் இரசீதாகப் பயன்படுத்தப்படும். ஒன்று அல்லது கிரெடிட் கார்டு இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வாட்டர்மார்க் கொண்ட காகிதமும் ஒரு பிரீமியம் தயாரிப்பு ஆகும்.

முதல் இரண்டு ஆண்டுகள் நான் தனியாக வேலை செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, என் நண்பர் என்னோடு பகுதிநேர அடிப்படையில் சேர்ந்தார். மெதுவாக வணிகம் விரிவடைந்ததால் மேலும் நபர்களைச் சேர்க்கத் தொடங்கினேன். பின்னர் என் கணவரும் தொழிலில் சேர்ந்தார்.

என் வணிகத்திற்காக வங்கிக் கடனை முயற்சித்தபோது ஸ்காட்லாந்தில் எனக்குக் கடன் மதிப்பீடு இல்லை. என் கணவர் எனக்கு உத்திரவாதம் அளிப்பவராகத் தலையிட்டு, என்னை அவரது கணக்கில் சேர்க்குமாறு வங்கி அதிகாரிகளிடம் சொல்ல வேண்டியிருந்தது.

உள்ளூர் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது,  உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வது, அவர்களுடன் இணைவது, அவர்களுடன் தொடர்பு கொள்வது, அத்துடன் நிதிகளைக் கண்காணிப்பது கடினம். வெளிநாட்டில் தொழில் ஆரம்பிக்கும்போது இப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது.

எனக்கு நல்ல தகவல் தொடர்பு திறன்களில் நம்பிக்கை இருந்தது. அதனால் இப்பொழுது நான் ஒரு வெற்றிகரமான வணிகப் பெண்ணாக இருப்பதன் மூலம் எனது குடும்பத்தைப் பெருமைப்படுத்தினேன். மேலும், உலகளவில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் காகிதத் துறையில் முதல் மூன்று பெண்களில் ஒருவராக நான் கருதப்படுகிறேன்.

நான் எனது குடும்பத்துடன் கில்மாகோல்ம் என்ற அழகான ஸ்காட்டிஷ் கிராமப்புறத்தில் வசிக்கிறேன். PG பேப்பரின் கார்ப்பரேட் அலுவலகம் கிரீனாக்கில் உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. இந்தியா, சீனா, துபாய், துருக்கி, பெல்ஜியம், எகிப்து, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன.

2003 - ஆம் ஆண்டு வெறும் ஓர் இலட்சம் முதலீடு செய்து ஆரம்பித்த இந்த நிறுவனம் தற்பொழுது 650 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது. எனது கனவை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. கடின உழைப்பு என்னை உயர்த்தியிருக்கின்றது. இதனைத் தக்கவைக்க இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றேன். இந்த ஓட்டத்தில் என்னைப்போல பல பெண்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன், பெண் தொழில் முனைவோரை ஊக்குவித்து வருகிறேன். பெண்கள் கல்வி பெற உதவிகளைச் செய்து வருகிறேன். என் இலாபத்தில் ஏழைகளுக்குத் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து அவர்களுடைய வாழ்வையும் முன்னேற்றி வருகிறேன்.

2016 - ஆம் ஆண்டில் வணிகம் மற்றும் தொண்டு செய்ததற்காக இங்கிலாந்து ராணி ‘Order of the British Empire’ என்ற பட்டத்தை வழங்கினார். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.”

அன்பு வாசகர்களே! இவருடைய வாழ்வு உறுதியாக நமக்கு நெகிழ்ச்சியைத் தருகின்றது. ஊக்கத்தைத் தருகின்றது. இறுதியாக, ‘காயங்கள் குணமாகக் காலம் காத்திரு; கனவுகள் நினைவாகக் காயம் பொறுத்திரு’ என்கிறார் பாரதியார். பெண்கள் கனவு நிறைவேறக் காத்திருக்கின்றார்கள். காயங்களைத் தாங்கிக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு வெற்றி எப்பொழும் உறுதி.