ஏப்ரல் 8, 2024 அன்று திரு அவையின் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான பேராயம் ‘எல்லையற்ற மாண்பு’ எனும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 2019 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணத்தின் முதல் வரைவானது 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மிக நுணுக்கமாக மறுசீராய்வு செய்யப்பட்டு, 2024 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் இறுதி வரைவானது கொடுக்கப்பட்டு, மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மனித மாண்போடு தொடர்புடைய வறுமை, புலம்பெயர்ந்தோரின் நிலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஆள் கடத்தல், போர் உள்ளிட்ட பல தலைப்புகளை முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக் கொண்டதன்படி இந்த ஆவணம் இறுதி வடிவம் பெற்றது.
“எல்லா மனிதர்களும் எல்லையில்லா மாண்பினைக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களின் இருப்பின் மூலமாகவும், எந்தச் சூழலும், நிலையும், எதிர்கொள்கிற எல்லாச் சூழ்நிலைகளிலும் இழந்து விட முடியாத ஒன்றாகவும் திகழ்கின்றது” (1) எனத் தொடங்கும் இந்த ஆவணம், மனித மாண்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது இருப்பியல் (ontological), ஒழுக்க சார்பியல் (moral), சமூகவியல் (social) மற்றும் இருத்தலியல் (existential) ஆகிய நான்கு வெவ்வேறு விதமான மாண்புகளைக் குறித்து விளக்குகிறது.
இருப்பியல்சார் மாண்பு (Ontological Dignity)
ஒருவர் இவ்வுலகில் இருக்கிறார் என்றால், அவர் கடவுளால் விரும்பப்பட்டு, படைக்கப்பட்டு, நேசிக்கப்படுகிறார் என்பதைக் குறிக்கிறது. ‘இருப்பியல்சார் மாண்பு’ (Ontological dignity) என்பது, ஒரு நபர் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், அவரின் மாண்பு மாறாத மதிப்புடையதாக, அழியாத ஒன்றாகத் திகழ்கின்றது (7) என விளக்குகிறது. இவ்வகை மாண்பு ‘எல்லையில்லாத ஒன்று’ (infinite) என்று குறிப்பிடப்படுவதால் மனிதர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது; மாறாக, இறைவன் ஒருவரே முற்றிலும் எல்லையில்லாதவர்.
‘எல்லையில்லாமை’ என்ற இந்த வார்த்தைப் பயன்பாடு, இரு வகைகளில் பொருள்படுகிறது. முதலாவதாக, மனித மாண்பு என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் இறைவன் கொண்டிருக்கிற எல்லையில்லாத அன்பை அடிப்படையாகக் கொண்டது. ‘இதுவே அவர்களுக்கு எல்லையில்லாத மாண்பைக் கொடுக்கிறது’ (2) என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கூறுகின்றார். இரண்டாவதாக, இந்த மாண்பு அவர்களின் இருப்பின் மூலமாக, இழந்து விட முடியாத ஒன்றாகத் திகழ்வதால் எல்லை அற்றது என அடையாளப்படுத்தப்படுகிறது.
அறநெறிசார் மாண்பு (Moral Dignity)
‘அறநெறிசார் மாண்பு’ என்பது நாம் உருவாக்கும் சமூக உறவு முறைகள் அடிப்படையிலும், நாம் அனுபவிக்கும் உரிமைகள் அடிப்படையிலும் நன்மை - தீமைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒழுக்கம் சார்ந்து வரையறுக்கப்படுகிறது. மேலும், இது தனிமனிதனின் அடிப்படை உரிமை மற்றும் அறம் சார்ந்து வெளிப்படும் தனித்துவ மாண்போடு தொடர்புடையது.
மனித மாண்பைக் குறித்தத் திரு அவையின் இந்தக் கொள்கைத் தொகுப்பு ‘அனைத்து மனிதர்களும் சமமான மாண்பைக் கொண்டிருக்கின்றனர்’ (17) என்பதை உறுதி செய்கின்றது. மேலும், ஒவ்வொரு மனிதரிலும் தன் சாயலின் அழியாத் தன்மைகளைப் பதித்த படைத்தவரின் அன்பை (18) எவ்வாறு அது அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்பதையும், இயேசுவின் மானுடப் பிறப்பு மனித மாண்பை எவ்வாறு மேன்மைப்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது என்பதையும் விளக்குகின்றது. மூவொரு இறைவனுடன் நம்மை நிலையான ஒன்றிப்புக்கு இட்டுச் செல்லும் மறுவாழ்வைக் குறித்தும் வலியுறுத்தும் (20-21) இந்த ஆவணம், ஒவ்வொரு மனிதரும் நிலைவாழ்வை அடையும் பொருட்டு, கடவுள் கொடுத்த மாண்புக்கு ஏற்ப வாழ வலியுறுத்துகின்றது.
மேலும், ‘மனித மாண்பு’ என்ற போர்வையில் மனித மாண்பிற்கு எதிராக நிகழும் விதிமீறல்களையும் இந்த ஆவணம் பட்டியலிடுகிறது (33-62). அதாவது, கடுமையான வறுமை (36-37), போர் (38-39), புலம் பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைகள் (40), ஆள் கடத்தல் (41-42), பாலியல் குற்றங்கள் (43), பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (44-46), கருக்கலைப்பு (47), வாடகைத்தாய் (48-50), கருணைக்கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல் (51-52), மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணித்தல் (53-54), பாலினக் கோட்பாடு (55-59), பாலின மாற்றம் (60), எண்ணியல் சார் முறைகேடுகள் (Digital Violence) (61-62) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
கருக்கலைப்பு, கருணைக்கொலை மற்றும் வாடகைத்தாய் முறை
கருவில் உருவான நேரம் தொடங்கி, வாழ்வின் இறுதிவரை நிகழும் மனித மாண்பிற்கு எதிரான அத்தனை அச்சுறுத்தல்களைக் குறித்தும் இந்த ஆவணம் எச்சரிக்கின்றது. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘நற்செய்தியின் மகிழ்வு’ (Evangelii Gaudium) என்ற திருத்தூது அறிவுரை மடலின் கூற்றுப்படி, ‘கருவில் இருக்கும் குழந்தைகள்தான், இவ்வுலகில் இருப்பவர்களுள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத அப்பாவிகள். ஆனால், இன்றைய சூழலில், இவர்களின் மாண்பை மறுக்கின்ற, உயிர்களைப் பறிக்கின்ற, சட்டங்களை அறிமுகப்படுத்துகிற முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன’ எனச் சுட்டிக்காட்டும் இந்த ஆவணம், உலகின் சில பகுதிகளில் கருணைக்கொலை, மருத்துவர்களின் உதவியுடனான தற்கொலை ஆகியவை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் வேகமாக அதிகரித்திருப்பதைக் குறித்தும் எச்சரிக்கின்றது.
பாலினக் கோட்பாடு மற்றும் பாலின மாற்றம்
பாலினக் கோட்பாட்டைப் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஊக்குவிப்பதோடு, அவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்று விவாதித்து வரும் சூழலில், ‘இந்தப் பாலின வேறுபாட்டை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறபோதுதான் ஒவ்வொருவரும் தங்களையும், தங்கள் மாண்பு மற்றும் தனித்த அடையாளத்தையும் கண்டுகொள்ள முடியும்’ என்று இந்த ஆவணம் வலியுறுத்துகிறது.
திரு அவையின் கருத்துப்படி, மனித உடல் என்பது இறைச்சாயலின் மாண்பில் பங்குகொள்வது. ஆகவே, மக்கள் இந்த உடல் படைக்கப்பட்டபடியே ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும் அழைக்கப்படுகின்றார்கள் என்றும், பாலின மாற்றத்திற்கு வழிகோலுகிற எந்த முயற்சியும், ஒரு மனிதன் தான் கருவுற்ற போது பெற்ற அந்தத் தனித்துவமான மாண்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் எனவும் இந்த ஆவணம் கண்டிக்கின்றது.
போரும், வறுமையும்
உக்ரைன், காசா, சூடான் மற்றும் உலகின் சில பகுதிகளில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில், கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய ‘போர் என்பது எப்போதுமே மனிதத்தின் தோல்வி’ என்ற கூற்றை இந்த ஆவணம் உறுதி செய்கிறது. எந்தப் போரும் படைத்தவரின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட ஒரு மனிதனின் இழப்பையும், புலம்பெயர்ந்தோரின் துயரத்தையும், பூமி சந்திக்கும் அழிவுகளையும் ஈடு செய்ய முடியாது என்று தெளிவுபடுத்துகிறது. ‘வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கக்கூடிய குடும்பத்திலோ, நாட்டிலோ பிறக்கிறவர்களின் சிலருடைய மாண்பு என்பது செல்வம் படைத்த ஒரு குடும்பத்தில் அல்லது நாட்டில் பிறக்கிற ஒருவரின் மாண்போடு முரண்படுகிறது என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்’ என்று கூறும் இந்த ஆவணம், வறுமையின் சிக்கல்கள் குறித்தும், இப்பிரச்சினை செல்வங்கள் சரிசமமாகப் பகிரப்படாததோடு தொடர்புடையது என்றும் தெளிவுபடுத்துகிறது.
ஆள்கடத்தல், பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
‘ஆள்கடத்தல் என்பது மனித மாண்பிற்கு எதிரான மிக மோசமான அத்துமீறல்’ என்றும், இதில் மனித உறுப்புகள் மற்றும் திசுக்களை விற்றல், சிறுவர், சிறுமியரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கொத்தடிமைகள், விபசாரம், போதைப் பயன்பாடு, ஆயுதக் கடத்தல், தீவிரவாதம், மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் யாவும் அடங்கும் எனவும் இந்த ஆவணம் எச்சரிக்கின்றது. மேலும், ‘பாலியல் குற்றங்கள் ஓர் ஆறாத வடுவைப் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களில் ஏற்படுத்தி விடுகின்றன’ என்றும், ‘இத்தகைய பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் மனித மாண்பு காயப்பட்டதை உண்மையாக அனுபவிக்கின்றார்கள்’ என்றும் குறிப்பிடும் இந்த ஆவணம், இத்தகைய அத்துமீறல்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும், நம் திரு அவையையும் பாதித்திருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றது. மேலும், சமமற்ற ஊதியமுறை, பணிபுரியும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடு, அத்துமீறல்கள், பாலியல் கொடுமைகள் மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு போன்ற மனித மாண்பிற்கு எதிரான அச்சுறுத்தல்களை இவர்கள் சந்திப்பதாகவும் இந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பு
தூக்கி எறிகிற கலாச்சாரத்தைக் கண்டிப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட குழுக்களின் மாண்பை மதிக்க இந்த ஆவணம் வலியுறுத்துகின்றது. மேலும், ‘புலம்பெயர்ந்தோர்தான் பல்வேறு விதமான வறுமைகளால் முதலில் பாதிக்கப்படுகிறவர்கள்’ என்று குறிப்பிடும் இந்த ஆவணம், ‘புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் எல்லாச் சூழலிலும் எல்லா மனிதர்களாலும் மதிக்கப்படக்கூடிய மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிற மனிதர்கள்’ என்ற திருத்தந்தை 16 -ஆம் பெனடிக்ட் அவர்களின் ‘உண்மையில் பிறரன்பு’ என்ற திருத்தூது மடலையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற திருத்தூது மடலையும் இந்த ஆவணம் மேற்கோள் காட்டுகின்றது.
இறுதியாக, ‘எல்லாச் சூழல்களையும் கடந்து மனித மாண்பிற்கான மதிப்பு என்பது பொது நன்மைக்கான பொறுப்பின் மையமாகவும், அனைத்துச் சட்ட அமைப்புகளின் மையமாகவும் இருக்க வேண்டும்’ (64) என்று வலியுறுத்துகின்றது.
‘மனித மாண்பினை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இணக்கமான நாகரிக வாழ்வுக்கு வழிகோலும் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படுகின்றது. ஆகவே, தனிமனிதர்களும், சமூகங்களும்தான் மனித மாண்பை வளர்ப்பதற்கான பொறுப்பாளர்கள்’ (65) என்று நினைவூட்டுகின்றது.