Namvazhvu
வாழ்க்கையைக் கொண்டாடு – 52 நிலை மாறும் விருப்பங்கள்
Friday, 26 Jul 2024 06:44 am
Namvazhvu

Namvazhvu

விருப்பம் இல்லாமல் நாம் எதைச் செய்தாலும், அவை முழுமை பெறாமல் ஏனோதானோ என்று முடியும். ‘விருப்பு வெறுப்புகளைக் கடந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்எனும் அறிவுரையும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும். ‘என்ன செய்வது?’ என்ற குழப்பமும் வந்திருக்கும். ‘என்னதான் செய்வது?’ எனும் தடுமாற்றம் எல்லாம் வேண்டாம். எது எப்போது வேண்டுமோ, அதை அப்போது கவ்விக் கொண்டு கடந்து செல்வதே சிறந்தது எனும் பொன்மொழியும் நமக்குத் தரப்பட்டிருக்கும். மொத்தத்தில் விருப்பங்கள் வேண்டுமா? வேண்டாமா? எனும் குழப்ப நிலைக்குள் நாம் சில நேரம் சென்றிருப்போம். எது எப்படியோ, நாம் வாழ்வதற்குத் தேவையான நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு கடந்து போவோம் எனும் எண்ணத்திற்கு வந்திருப்போம்.

இன்னைக்கி இருப்பது நாளைக்கு இருக்கப் போவுதாக்கும்? இருக்கிறத அப்படியே அனுபவிச்சிட்டுப் போக வேண்டியதுதான்எனும் மாய மனநிலைக்கு நாம் அவ்வப்போது மயங்கி விடுவதுண்டு. நமக்குக் கிடைக்காத ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பதுதானே ஆசை? ‘கிடைப்பதை நன்கு அனுபவித்து, கிடைக்காததைப் பற்றிக் கவலை கொள்ளாது இருக்கணும் புரியுதா?’ எனும் அறவுரை அவ்வப்போது நமக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்தளவிற்கு ஆசை மோசமானதா?

மூவாசைகளான மண், பெண், பொன் இவற்றைத் தவிர்த்து, மற்றனைத்தும் நல்ல ஆசைகள்தான் எனும் அன்பான அறிவுரையைக் கேட்டு நாம் அசந்து போயிருப்போம். நாளடைவில் இவை கசந்துபோன ஆசைகளாகக் கூட மாறியிருக்கும். ‘ஒன்றை நான் அனுபவித்த பிறகுதான் அதன் தன்மையை மற்றும் ஆழத்தை உணர்வேன்என்று அடம்பிடித்தால், நாம் வாழ்நாள் முழுவதும் எதையும் முழுமையாக உணராமல் காலம் கடந்து விடும்.

ஆசை என்பது நமக்குத் தேவையானதை மனத்திற்குள் கொண்டு வரும் ஓர் உணர்வு. அதுதான் நமக்கான உணவு என்று நினைக்கும் போது சிக்கல் உருவெடுக்கும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும், ஏதாவது தேவைகள் எப்போதும் நிச்சயமாக இருந்து கொண்டே இருப்பதனால், ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு வெவ்வேறு வரைமுறைகள் கொடுத்தாலும், அதன் அடிப்படைத் தன்மை என்னவோ நம் எண்ண ஓட்டங்கள்தான். அவைதான் விருப்பங்களாக வெளிவருகிறது.

எல்லாவற்றையும் அடைய நினைப்பது ஆசை; அந்த எல்லாவற்றையும் செய்யும் எண்ணம் இருப்பது விருப்பம்; அந்த விருப்பத்தைச் செயல்படுத்த சில குறிக்கோள்கள், அடிப்படைத் தகுதிகள் என்பது அவசியமானவை. சிலர் தாம் பார்த்ததை, படித்ததை, கேட்டதை மட்டுமே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆசை விருப்பமாகி, அந்த விருப்பத்தைக் குறிக்கோளாக மாற்றியவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்த சிந்தனை முறையை வைத்திருப்பார்கள். தங்களுக்கென தனி சிந்தனை, புதுப்புது எண்ணங்கள், பிரச்சினையைத் தீர்க்கின்ற விதம், தன்னைச் சுற்றி நடப்பனவற்றில் முழுக் கவனம், தன்னோடு இருப்பவர்கள், தன் எண்ணத்திற்குச் செயல்வடிவம் தருபவர்களைப் பற்றிச் சிந்திப்பது, இயற்கையை ஆழ்ந்து நோக்கி அதன் செயல்போக்கில் நடந்து கொள்வது என்று தனித்துத் தெரிவார்கள். ஆதலால், ஆசை எல்லாவற்றிற்கும் ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. சிறப்பாக, குறிக்கோளுக்கு ஆணி வேராகவும் இருக்கிறது.

ஒவ்வொன்றையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்த்து முடிவெடுப்பதன் மூலம்தான் நாம் சிறந்த ஆளுமையாக வெளிப்படும் ஆற்றல் வருகிறது. ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. ஆதலால், அதன் வகை அறிந்து, வழி தெரிந்து பயணிப்பதுதான் சிறந்த அணுகுமுறையாகும்.

ஆசையைக் கடந்து விருப்பங்களாக வந்த பின் அது அப்படியே நிலைத்து நிற்கும் என்று சொல்லி விட முடியாது. சூழலும், நம் மனநிலையும் அதைச் சில சமயங்களில் மாற்றிவிடும். அப்படி மாற்றும் போது, நாம் தோல்வி அடைகிறோம் என்று நினைக்காமல், அதன் அடுத்த நிலை கண்டு நகர்வது நல்லது. நாமாகவே சில சோம்பேறித்தனங்களால் அதை மாற்றுவது கேலிக்குரியதாக மாறும். ‘ஏன் அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை?’ என்று ஆராய்ந்து முடிவுகளைக் காண்பது கேள்விக்குரியதாக மாறினாலும், அதன் தாக்கத்தை நம்மைச் சுற்றி உள்ளவர்கள் உணர்வார்கள்.

எவருடைய விருப்பத்திற்காகவும் நாம் வாழவில்லை. நம் விருப்பத்திற்காக அது முறையான வழிமுறையில் பயணித்து, அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் எந்த மனக்குறையும் நமக்கு வரப்போவதில்லை. பிறரைத் தன்வயப்படுத்த அல்லது திருப்திபடுத்த நாம் எடுக்கும் விருப்பங்கள் தோல்வி காணும்போது, நிச்சயம் நமக்கான மதிப்பைக் குறைக்கும், நம் தன்னம்பிக்கையைத் தகர்க்கும்.

பல்வேறு விருப்பங்களோடு, கனவுகளோடு பணியில் சேரும் பலர், அதன் முழுமையான ஆழத்தை அறியாமல் இடையிலேயே தனது விருப்பங்களை மாற்றிவிடும் அல்லது கைவிடும் நிலை ஏற்படும். தன் வேலைமீது முழுக்கவனம் வைக்காமல், பிறர் வேலைமீது மட்டும் முழுக்கவனம் செலுத்தி, தன் விருப்பத்தைப் பாழாக்கும் செயல் பல்வேறு நிறுவனங்களில் நடப்பதுண்டு. ‘அந்த வேலைய மட்டும் என்கிட்டே கொடுத்தா சும்மா பின்னி எடுத்துருவேன்என்று வீரவசனம் பேசித் திரிபவர்களும் உண்டு. உண்மையான விருப்பங்களில் நிலைகொண்டு உயர்வு நோக்கி, வாய்ப்புகள் கிடைக்கும் நேரமெல்லாம் அதைத் தனக்கு வசப்படுத்தி முன்னேறும் பலரை நான் கண்டுள்ளேன். வெறுமனே குற்றமும், குறையும் கூறிக்கொண்டு, தன் சுற்று வட்டத்தையும் எதிர்மறை எண்ணங்களால் சுக்குநூறாக்கி விடுபவர்களும் உண்டு.

பணியாளர்களை உயர்த்த மற்றும், அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல எல்லா நிறுவனங்களிலும் சில திட்டங்கள் உண்டு. அதைJob Rotationஎன்று அழைப்பார்கள். எதிலெல்லாம் நமக்கு விருப்பம் உண்டோ, அதில் நாம் விண்ணப்பித்து உயர்வு காணும் வாய்ப்பை மனித வளத்துறை மூலம் செயல்படுத்துவார்கள். அதைச்சிக்கெனப் பிடித்து மேலே வந்த பலர் இன்று எத்தனையோ உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள். அதில் நாமும் இணைவோம்.

நிறைவேறாத விருப்பங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, வாய்ப்புகள் உள்ளவற்றை நோக்கி நகர்வதில் தவறொன்றும் இல்லை. விருப்பங்கள் மாற்றத்திற்கு உரியவை; யாருடைய ஏமாற்றத்திற்கும் இல்லாமல், தனக்கான ஏற்றத்திற்கு உரியதாக இருந்தால் விருப்பங்கள் நிலை மாறட்டும். அதன் மூலம் நம் நிலையும் மாறட்டும்.

ஆசைகளை அறவே அழித்துவிட்டால், மனமும் அழிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய்விடுவான்” - ஹெல்விடியா.   

தொடர்ந்து பயணிப்போம்...