சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
ஆட்சியில் இருந்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இந்தியப் பிரதமர் மோடி அவிழ்த்துவிட்ட பொய்மூட்டைகள் இந்தியக் குடிமக்களுக்கு கோயபல்ஸை நினைவூட்டின. ஹிட்லரின் அமைச்சரவையில் பிரச்சார மந்திரியாக இருந்த கோயபல்ஸ் உலகப்போரின்போது புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ஹிட்லரின் பெயரை உலகம் முழுவதும் பரவச் செய்தார் என்பது வரலாறு. பொய்ப் பிரச்சாரத்திற்குப் பெயர்போன கோயபல்ஸைப்போல பாரதப் பிரதமரும் கொஞ்சம் கூட மனக்கூச்சமின்றி, நா கூசாமல் பொய்களைப் பேசிவருகிறார். பாரதப் பிரதமரே தரம் தாழ்ந்து, கொஞ்சம்கூட மன வருத்தமின்றி பொய்பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. பதவியின் பெருமையைக் கீழ்மைப்படுத்துவதோடு மட்டுமின்றி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் களங்கம் கற்பிக்கிறார். சௌக்கிதார் தொடர்ந்து பொய்களையே சொல்லிக் கொண்டிருப்பதால் அவர் நல்ல பொய்யன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர். சத்தியமேவ ஜெயதே.. வாய்மையே வெல்லும் என்பதை அறிந்த இந்த வாய்ச்சொல்வீரர் தொடர்ந்து புளுகு மூட்டைகளையே அவிழ்த்துவிடுகிறார். ஒருமுறை, இருமுறை என்று சொன்னால் மன்னித்துவிடலாம். தவறுதலைப் பொறுத்தருள இயலும். தொடர்ந்து வரிசைக்கிரமமாகக் சொல்லிக்கொண்டே வந்தால்.. இவரை ஒரு பொய்யனாகத்தான் வரலாறு நினைவில் கொள்ளும். இந்தியா இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது என்பதற்குப் பதிலாக 1200 ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்தது என்றார் (ஜூலை 4, 2014). ஜம்மு - காஷ்மீருக்கு நேரு ரயில்வே வசதியைச் செய்துதந்தார் என்பதற்குப் பதிலாக வாஜ்பேயி செய்துதந்தார் என்றார் (ஜூலை 4, 2014). சூட்டாக் பகுதி அதிக முஸ்லீம்களைக் கொண்டுள்ளது என்பதற்குப் பதிலாக கட்ச் பகுதி அதிக அளவில் முஸ்லீம்களைக் கொண்டுள்ளது என்றார் (ஆகஸ்ட் 12, 2014). விநாயகருக்கு யானைத்தலை பொருத்தப்பட்டதால் பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக் காலத்திலேயே இருந்தது என்றார் (அக்.29, 2014) பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழியும் என்றார் (டிச.31, 2016). பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்குக் கூழைக் கும்பிடுபோட்ட விநாயக் தாமோதர் சவார்க்கர் இந்தியாவின் தேசபக்தர் என்றார் (பிப் 26, 2017). 2013 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்ட பயனாளருக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையைத் தாம் கொண்டுவந்ததாகக் கூறினாhர் (அக்.29, 2017). 1972 ஆம் ஆண்டே இந்திராகாந்தி கொல்கத்தா மெட்ரோவில் பயணித்தார் என்று சொல்வதற்குப் பதிலாக வாஜ்பேயிதான் முதலில் மெட்ரோவில் பயணித்த பிரதமர் என்றார் (டிச.25, 2017). இந்தியாவின் மக்கள் தொகையே 130 கோடியாக இருக்கும்பட்சத்தில் 600 கோடி பேர் வாக்களித்துத் தன்னைத் தேர்ந்தெடுத்ததாக உலக அரங்கில் உரக்கச் சொன்னார் (ஜன.30, 2018). பீகாரில் ஒரே வாரத்தில் நிமிடத்திற்கு 84 டாய்லெட் வீதம் எட்டரை லட்சம் டாய்லெட்டுகள் கட்டப்பட்டன என்றார் (ஏப்.10, 2018). உஜ்வாலா திட்டத்தின் கீழ் 90 சதவீத கிராமப்பெண்கள் கேஸ் சிலிண்டர் இணைப்புப் பெற்றுவிட்டார்கள் என்றார். உடான் திட்டத்தின்கீழ் ஏழரை லட்சம்பேர் சலுகை விலையில் விமானப்பயணம் மேற்கொண்டார்கள் என்றார் (ஜன.31, 2019). இவற்றிற்கெல்லாம் மேலாக, 1989 இல் தான் முதன் முதலாக உலகிற்கு டிஜிட்டல் கேமரா அறிமுகம் செய்யப்பட்டநிலையில் அதனைத் தாம் 1987-88 ஆம் ஆண்டே பயன்படுத்தியதாகவும், 1991 ஆம் ஆண்டுதான் உலகமுழுவதும் ஈமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 1987-88 ஆம் ஆண்டே தாம் ஈமெயில் பயன்படுத்தியதாகவும் புருடா விட்டுள்ளார் (மே 12, 2019). போர்விமானங்கள் ரேடாரின் பார்வையிலிருந்து தப்பிளுக்க மேகங்கள் உதவும் என்று அறிவியலுக்கு எதிராகப் பேசியுள்ளார்.... இப்படி வாயைத் திறந்தாலே திரும்பத் திரும்ப பொய்களைப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கறுப்புப் பணத்தை மீட்பேன் என்றார்.. இதுவரை எதுவும் சாத்தியமாகவில்லை. கூர்க்காலாந்து உருவாக்கப்படும் என்றார். இன்னும் உருவாக்கப்படவில்லை. அரசியலைக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பேன் என்றார்.. குற்றவாளிகளின் புகலிடமாகவே பாஜக உள்ளது. அரசியல் சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவேன் என்றார்.. இன்றுவரை அதனைத் தேர்தல் அஸ்திரமாகவே பயன்படுத்துகிறார். எழுபது கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார். ஐந்து கோடி பேருக்குக் கூட கிடைக்கவில்லை. நதிகளை இணைப்பேன் என்றார். கங்கையும் காவிரியும் இணைக்கப்படும் என்றார்.. எவ்வித முன்னேற்றமும் இல்லை. புல்வாமா தாக்குதலை தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இராணுவத்தை அவமதித்துள்ளார். ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்றார். உள்ள பணத்தையும் வங்கியே எடுத்துக்கொள்கிறது. இப்படி இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பொய்களைச் சொன்ன பிரதமர் மோடியாகத்தான் இருக்கக்கூடும். பொய்களைச் சொல்வதற்கு முன்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிழை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். முகஸ்துதி, தற்புகழ்ச்சி, சாக்குப்போக்கு, வீண்பேச்சு, அவதூறு, பொய்ச்சாட்சி என ஆறுவகையான பொய்களையும் நம்மிடம் பேசி பொய்களின் பிதாமகனாக மோடி இருக்கிறார். சான்றோனின் பண்புக்கு பொய்யா விளக்கே விளக்கு என்பார் திருவள்ளுவர். பதவியில் இருப்பவர்களே! இந்தச் சொல்லின் சூத்திரத்தை அறிந்து கொள்ளுங்கள். பொறுப்பற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும். குரூரமான ஒரு சொல் வாழ்வைச் சிதைக்கக்கூடும். ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தும். ஒரு முரட்டுச் சொல் மரணத்தை உண்டாக்கலாம். ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம். ஒரு மகிழ்வான சொல் நாளையே வெளிச்சமாகலாம். ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம். ஓர் அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசிர்வதிக்கலாம். ஆகையால் சொற்களைக் கையாளுவதில் ஒவ்வொருவருமே அதீதத் திறமை பெற்றிருக்க வேண்டும். நரேந்திர மோடிக்கு பொய் அழகாயிருக்கலாம். ஆனால் பாரதப் பிரதமருக்கு பொய் அழகல்ல. உண்மையைப் பேசுங்கள். வரலாற்றையும் அறிவியலையும் ஒருபோதும் திரிக்காதீர்கள். சத்திய மேவ ஜெயதே.