கண்ணால் பார்க்க முடியாத உணர்வுகளில் கோபமும் ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மற்றுள்ள உணர்வுகளைவிட தீய விளைவுகளைத் தனக்கும், பிறருக்கும் விளைவிக்கும் விதத்தில் இதற்கு இணையானது வேறு எதுவுமே இல்லை. அடக்கப்பட்ட கோபம் மட்டுமல்ல, அடங்கிப் போகும் கோபம் முதல் அடங்காத கோபம் வரை என இதற்குப் பல வகைகள் உள்ளன. எந்த விதக் கோபமாக இருந்தாலும், நன்மையான முடிவுகளை அவை கொண்டிருப்பதில்லை. இதனால்தான் ‘எதற்கும் கோபமான நிலையில் முடிவெடுக்காதே’ என்பர்.
‘நான் கோபக்காரனாக்கும்’, ‘கோபம் வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது’, ‘கோபப்பட்டால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன்’ என்று வீர வசனங்கள் பேசுபவரெல்லாம் பலசாலிகளா? இல்லவே இல்லை! உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்போர் பலசாலிகள் என எண்ணுவோம்; பளுதூக்கும் நபர்களைப் பார்க்கும்போது பலசாலிகள் எனக் கருதுவோம். ஆனால், இவர்களெல்லாம் பலம் உள்ளவர்கள் அல்லர் என்கிறார் நபிகள் நாயகம் அவர்கள். “கோபம் வரும்போது எவன் ஒருவன் அந்தக் கோபத்தை நெறிப்படுத்திக் கொள்கிறானோ, அவன்தான் மிகப்பெரிய பலசாலி” என்கிறார் நபிகள்.
தன் சீடர்களுக்குக் குரு ஒருவர் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒரு நோயாளி வந்தார். அவர் தன் கஷ்டங்களை அந்தக் குருவிடம் சொன்னார். “நீ விரைவாகக் குணமாகி விடுவாய்” என்று ஆறுதல் கூறி, அவரை அனுப்பி வைத்தார் குரு. இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களில் ஒருவன் குருவிடம் “வெறும் வார்த்தைகள் அவரைக் குணமாக்கி விடுமா?” என்று கேட்க, குருவோ “முட்டாளே, உட்கார்” என்றார். மற்றச் சீடர்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஏனெனில், அதுவரை அவர் அவர்களிடம் கோபப்பட்டதே இல்லை. இத்தனை சீடர்களுக்கு முன்னால் குரு தன்னை முட்டாள் என்றதை அச்சீடன் அவமானமாக உணர்ந்தான். கோபமடைந்த சீடன் குரு என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் அவரைத் தாறுமாறாகத் திட்டினான். பொறுமை காத்த குரு, அவன் அமைதியானதும் “ஒரே ஒரு வார்த்தை உன்னை எப்படி மாற்றிவிட்டது பார்த்தாயா?” என்றார் அந்தப் பலசாலி குரு.
இப்படிப்பட்ட புத்திசாலிகளாக நாம் இல்லாததால் கோபம் வரும்போது வெடிக்கும் வார்த்தைகள், உடைக்கும் பொருள்கள் மூலமாக ‘நாம் யார்?’ என்பதைக் காட்டி விடுகின்றோம். அந்தக் குருவின் சீடனைப் போல, அடுப்பில் இருந்து இறக்கியவுடன் திறக்கப்படும் பிரஷர் குக்கர் போல சிலர் செயல்படுவர். இதனால் வரக்கூடிய விளைவுகளான சண்டை சச்சரவுகள், மண முறிவுகள், கொலை, பகை, விரோதம், பழி வாங்கல் போன்ற அனைத்துக்கும் நொடிப் பொழுதில் உருவாகும் கோபம் காரணமாகி விடுகிறது.
செயல்பாட்டின் அடிப்படையில் மனித மூளையை ஆராய்ச்சியாளர்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரித்துப் பார்க்கின்றார்கள். ஒன்று, உணர்ச்சி மூளை. உணர்வுகளை வைத்து முடிவெடுக்கும் தன்மை உடையது இது. சராசரி மனிதர்களில் இந்த உணர்ச்சி மூளையே செயல்படும். மற்றொன்று, ஆராய்ந்து பார்க்கும் மூளை. சாதாரண மனிதர்களில் இது செயல்படாது. விவேகிகள், ஞானிகள் போன்றோரிடம் மட்டுமே ஆராய்ந்து பார்க்கும் மூளை செயல்படும். மனத்தை அடக்கும் பலசாலிகளுக்கு மட்டுமே இது கைவந்த கலையாக இருக்கும். இவை இரண்டிலும் ஏதேனும் ஒன்று மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யும். உணர்ச்சிவசப்படும்போது, உணர்ச்சி மூளை மட்டுமே வேலை செய்யும். இதனால்தான் கோபப்படும்போது பேசும் வார்த்தைகளும், எடுக்கும் முடிவுகளும் தவறாகவே அமைந்து விடுகின்றன.
கோபப்படும் நேரங்களில் தன்னிலை மறந்து, தன் தகுதி மறந்து செயல்படும் மக்களை நாம் பார்க்க முடியும். பணிபுரியும் இடங்களிலும், குடும்பங்களிலும் கோபத்தின் தன்மைகளையும், வகைகளையும், பாதிப்புகளையும் அறிய முடியும். கோபப்படுத்தும் நபர் உயர் அதிகாரி என்றால், அடக்கி வைக்கும் கோபத்தை வீட்டில் மனைவியிடமும், குழந்தைகளிடமும் கொட்டுவோர் உள்ளனர். வெளிப்படுத்த முடியாத கோபத்தை மனத்தில் வைத்திருக்கவும் முடியாமல், நேரடியாகக் கோபப்படவும் முடியாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மறைமுகமாகப் பழிவாங்குவோரும் உள்ளனர். எளிதில் உணர்ச்சிவசப்படுவோர் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்துவர். இப்படிப்பட்டவர்களுக்கு நண்பர்களை விட, பகைவர்களே அதிகமாக இருப்பர்.
கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தால் வெடித்துச் சிதறும் வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தும்; சில சமயங்களில் பிறரைக் கொல்லவும் செய்யும். “உன்னை நீ காத்துக்கொள்ள விரும்பினால் எந்த நிலையிலும் கோபம் உன்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதே” என்ற வாரியார் சுவாமிகளின் இயல்பான வார்த்தைகளுக்குக் கோபப்படுவோர் கட்டுப்பட்டால் எவ்வளவோ நலமாக இருக்கும்!
கோபப்படுத்தப்படும்போது நாம் எப்படிச் செயல்படுகிறோம்? என்பதை வைத்தே நாம் மனிதர்களாக வாழ்கிறோமா? அல்லது மிருக நிலைக்கு இறங்கி விட்டோமா? அல்லது மகான்களின் நிலைக்கு உயர்ந்துள்ளோமா? என்பதை அறியச் செய்யும். ‘18 வயதாகும்போது ஓட்டு போட உரிமை இருப்பதைப் போல, கோபப்பட எனக்கு உரிமையில்லையா?’ என ஒருவர் கேட்க முடியாது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் ஒரு பழக்கம் இருந்தது. கடிதங்கள் எழுதும் காலம் அது. யார் மீதாவது கோபத்தோடு இருக்கும்போது கடிதம் எழுதினால், கோப நிலையில் மனத்தில் என்ன நினைக்கின்றாரோ அதை அப்படியே எழுதுவாராம். அவர் மீதான கோபம் தணியும்போது, அக்கடிதத்தை மீண்டும் படித்துப் பார்ப்பாராம். அவருக்கே வருத்தமாக இருக்குமாம். சம்பந்தப்பட்ட அவர் அக்கடிதத்தை வாசிக்கும் போது, ‘கடவுள் அவர் பக்கத்தில் நின்று அதை வாசிப்பாரே! கடவுள் என்னைப் பற்றி என்ன எண்ணுவார்?’ என நினைப்பாராம். சாந்தமான நிலையில் மீண்டும் அடுத்த கடிதத்தை எழுதுவாராம். அவர் சிறந்த ஜனாதிபதியாக விளங்க இதுவும் ஒரு காரணம்.
இதனால்தான் கோபம் வரும்போது வெளிப்படுத்தும் முன், சிறிது நேரம் கால இடைவெளி எடுக்கச் சொல்வார்கள். இதற்கு ‘உளவியல் இடைவெளி’ என்று பெயர். இதைச் செய்ய நம்மாலும் முடிந்தால்...! இதற்குப் பல வழிகள் உள்ளன.
கோபம் வரும்போது மானசீகமாக மூன்றாவது நபராக இருந்து நம்மையே உற்றுப் பார்ப்பது, கோபத்தைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முறை. அஷ்ட கோணத்தில் விகாரமாக மாறும் நமது முகமும், வெளிப்படுத்தும் நமது வார்த்தைகளும் நமக்கே அசிங்கமாகத் தோன்றுமாம். இருக்கும் முகத்தை மேலும் அழகாக மாற்ற என்னென்ன பாடுகள் படுகிறோம்? எத்தனை அழகு நிலையங்களுக்குச் சென்று காசைக் கரியாக்குகின்றோம்? பிறர் முன்னிலையில் கோபப்பட்டு ஏன் முகத்தை விகாரமாக்குகிறோம்? கோபம் வருகிறதா? வார்த்தைகளை வெளிப்படுத்தாமலிருக்க வாயை மூடிக்கொள்ளுங்கள் என்பர்.
உதிராத பூக்கள் எப்படி மரத்துக்கு அழகோ, அதுபோல உதிராத வார்த்தைகளும் மனதுக்கு அழகு சேர்க்கும். கோபத்தால் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் இருக்க கணித எண்களை ஒன்றிலிருந்து எண்ணச் சொல்வார்கள்; கோபப்படும் நேரம் வாயைத் திறந்தால் எரிமலைக் குழம்பும், நெருப்பும் அல்லவா வாயிலிருந்து சிதறும்!
குறைந்தபட்சமாக மனிதனாக வாழ விரும்புவோம். பிறரது மனத்திலும் வாழ விரும்புவோம். உணர்ச்சி மூளையைப் பயன்படுத்தாமல், ஆராய்ந்து பார்க்கும் மூளையைப் பயன்படுத்துவோம். வரும் கோபத்தை நெறிப்படுத்துவோம். ஆமாம்தான்! ஆனால் பாழாய்ப் போகும் கோபம் வரும்போது இவற்றில் எதுவும் நினைவில் வருவது இல்லையே!
‘கோபப்பட எனக்கு உரிமை இல்லையா?’ என்று கேட்டு விடாதீர்கள். நம்மிடமிருந்து வெளிப்படுவது உணர்ச்சியால் வரும் கோபமா? அல்லது அறக்கோபமா? என்பது புரியாதவரை வாயை மூடிக்கொண்டு இருப்பது நமக்கு நல்லது. ஏனெனில், 99ரூ மக்களும் வெளிப்படுத்துவது உணர்ச்சியால் உருவாகும் கோபமே!
‘இறை இயேசுவும் கோபப்பட்டாரே!’ என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம், கோபப்பட்டார்தான்! ஆனால், அது அறக்கோபம்! அப்படிப்பட்ட அறக்கோபம்தான் நம்மிடமிருந்து வெளிப்படும் என்றால், நாமும் தாராளமாகக் கோபப்படலாம்.
அறக்கோபம் சமுதாய மாற்றத்துக்கு விதையாக மாறும். பிறர்மீது கோபப்பட யார் எனக்கு உரிமை கொடுத்தது?
சாலையில் கை வீசி நடக்க
உரிமை இருக்கிறது எனக்கு!
ஆனால், அடுத்தவர் உடலைத்
தொடும் அளவிற்கு அல்ல!
உணர்வை என்னிடமிருந்து
வெளியேற்ற உரிமை இருக்கிறது எனக்கு!
ஆனால், பிறர் மனத்தைக்
காயப்படுத்தும் அளவுக்கு அல்ல!
கோபப்பட்டு என்னை இயல்பாக்க
உரிமை இருக்கிறது எனக்கு!
ஆனால், மற்றொருவர் மனத்தைப்
பாதிக்கும் அளவுக்கு அல்ல!
(தொடரும்)