இயேசுவைத் தேடுதலே நம் வாழ்வின் மையம்!
‘தேடல்’ அனைத்து உயிர்களிடத்திலும் காணக்கிடக்கும் தணியாத தாகம்! உயிரினத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை தொடர்ந்திடும் பேருண்மை இது. தேடல்கள் நிறைந்ததே மனித வாழ்வு. உணவையும், உறைவிடத்தையும் தேடி மற்ற உயிரினங்கள் அலையும்போது, மனிதனின் தேடல் மட்டுமே இவற்றிலிருந்து முற்றிலும் தனித்து நிற்கிறது. தனக்கான வாழ்வுமுறையை, அறிவை, தெளிவை, ஆற்றலை, இலக்கை, மகிழ்ச்சியை, நட்பை, உறவை, இணையை, உண்மையை, நீதியை, அன்பை, அறத்தை மற்றும் பொருளைத் தேடிக்கொண்டே இருப்பவன் மனிதன். அனைத்தையும் தேடும் மனிதன் தேடலின் உச்சமாகவும், ஊற்றாகவும் விளங்கும் இறைவனைத் தேடுகிறான். அந்த இறைவனிடத்தில் அமைதியைத் தேடுகிறான். அந்த அமைதியில்தான் வாழ்வின் மகிழ்ச்சியை முகர்ந்துகொள்கிறான்.
ஆண்டின் பொதுக்காலம் 18 -ஆம் ஞாயிறு வாசகங்கள் ‘வழியும் வாழ்வும் உண்மையும் உயிரும் உணவுமாய்’ இருக்கிற இயேசுவைத் தேடவும், அவரை நம் வாழ்வின் மையமாகக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது.
இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய மீட்பையும், விடுதலை வாழ்வையும் ஏற்க மனமில்லாமல், மீண்டும் எகிப்திய அடிமைத்தனத்தைத் தேடிய மக்களின் மனநிலையையும், முறுமுறுப்பையும், கடவுள் அவர்கள்மேல் மீண்டும் மீண்டும் இரக்கம் கொண்டு பராமரித்து வழிநடத்துவதையும் பதிவு செய்கிறது இன்றைய முதல் வாசகம். வாழ்வில் தாங்க முடியாத துன்பங்கள் அல்லது அதை வெளியிட முடியாத ஒரு சூழல் எழுகின்றபோது முறுமுறுத்தல் முனங்கலாக வெளிப்படுகின்றன. முறுமுறுத்தல் வாயிலாக ஒருவர் தன்னுடைய துன்பம், மன இறுக்கம், உடல் ஒவ்வாமை, விருப்பமின்மை, ஆதரவின்மை, தனிமை, விரக்தி போன்றவற்றை வெளிக்காட்டுகின்றார். திருவிவிலியத்தில் முறுமுறுத்தல் சில வேளைகளில் ஒருவகையான செபமாகவும் காட்டப்படுகிறது (காண். 1சாமு 1:12-13). ஆனால், அதிக இடங்களில் முறுமுறுத்தல் கடவுளுக்கு எதிரான குரலாகவே காட்டப்படுகிறது (விப 15:24;16:2,7-8;17:3; எண் 14:2,27,29,36). இந்த முறுமுறுத்தல்களுக்குப் பின்னால் பசியும், தாகமும் காரணமாக இருந்திருக்கின்றன. கடவுள் தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கமும் ஒவ்வொரு முறுமுறுத்தலின் பின்னாலும் இருக்கின்றன. அதேவேளை முறுமுறுத்தல் கடவுளை வசைபாடுகின்ற, எதிர்மறையான நம்பிக்கையின்மையின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லையே என்று இஸ்ரயேல் மக்கள் முணுமுணுக்கின்றனர். செங்கடலைக் கடந்த பயணத்தின்போது, முதலில், தண்ணீருக்காக மக்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது, உணவுக்காக முணுமுணுக்கின்றனர் (16:2-3). தாங்கள் இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் இருந்ததாகவும், அப்பம் உண்டு நிறைவடைந்ததாகவும் கடந்த கால வாழ்க்கையையும், தற்கால பாலைநிலப் பயண வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். எகிப்திலே ஆண்டவர் கையாலே இறந்திருந்தால் எத்துணை நலம் என்றும் முறையிடுகின்றனர். ‘பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் எங்களை அழைத்து வந்தீர்கள்?’ (16:3) என மோசேவுக்கும், ஆரோனுக்கும் எதிராகக் குற்றம் சாட்டுகின்றனர்.
செங்கடலிலிருந்து பத்திரமாகக் கடக்கச் செய்த கடவுளைத் தேடவில்லை; பார்வோனின் படைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் தங்களைக் காத்த இறைவனைத் தேடவில்லை; மாராவில் கசப்பான நீரைச் சுவைமிக்க நீராக மாற்றித் தாகம் தணித்த இறைவன்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. தங்கள் பாலைநிலப் பயணத்தில் தேவையானவற்றை இறைவன் அருள்வார் என்னும் நம்பிக்கையை அவர்கள் தொலைத்தனர். அடிமை நிலையிலிருந்து பெற்ற விடுதலை வாழ்வைப் பெரிதென எண்ணாமல், எகிப்தில் உண்ட உணவில் சுகம் கண்டனர். சுகம் நிறைந்த அடிமைத்தன வாழ்வையே தேடினர்.
விடுதலை அளித்த இறைவனே தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை இஸ்ரயேல் மக்களிடம் அற்றுப்போனாலும், யாவே இறைவனுக்கு மக்கள்மேல் இருந்த பற்று பட்டுப் போகவில்லை. எனவேதான் தமக்கு எதிராகத் தாம் அனுப்பிய மோசே, ஆரோனுக்கு எதிராக முறுமுறுத்தபோதிலும் அவர்களின் முணுமுணுப்புக்குக் கடவுள் பதிலளிக்கிறார். மோசேவின் வேண்டுதலை முன்னிட்டு அவர்களை மன்னிக்கின்றார். அவர்களுக்கு இறைச்சியும், உணவும் வழங்குகின்றார். கடவுள் கொடுத்த உணவு அவர்களுக்குத் தேனாய் இனித்தது. ‘இது கடவுள் தந்த உணவு’ எனப் போற்றி அவர்கள் கடவுளைப் புகழ்ந்தனர். உணவும், இறைச்சியும் இல்லாமல் வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு இறைச்சியையும், உணவையும் வழங்கியது, கடவுள் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. இத்தனை செய்தும் அவர்கள் கடவுளைத் தேடவில்லை என்பதுதான் உண்மை.
இஸ்ரயேல் மக்கள் மோசேவுக்கும், ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்த வேளையில், அவர்கள் சார்பாகப் பதிலளிக்கும் இறைவன், அவர்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப்போவதாகச் சொல்கிறார். மக்கள் தேவையானதை அன்றன்று மட்டுமே சேகரித்துக் கொள்ளவேண்டும் என்கிறார். கடவுளின் கட்டளைப்படி நடப்பார்களா? இல்லையா? என்பதைச் சோதித்தறிய இறைவன் நடத்திய தேர்வு இது! (விப 16:4). தம் மக்கள் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருக்க வேண்டும், பேராசை கொண்டு, அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருக்கக்கூடாது என்பதே இத்தேர்வு உணர்த்தும் பாடம்.
இறைவன் வைத்த தேர்வில் வென்றவரை விட, தோற்றவர்கள்தாம் அதிகம்! அடுத்த நாளுக்கெனச் சேர்த்தவர்களின் உணவு புழு வைத்து நாற்றமெடுத்தது என நாம் வாசிக்கிறோம் (விப 16:20). அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைப்பதும், குவித்துவைப்பதும் மனிதர்கள் மத்தியில் இருக்கும் ஒரு தீராத நோய்.
கடந்த ஞாயிறு இயேசு பெருந்திரளான மக்களுக்கு அப்பம் பகிர்ந்தளித்த நிகழ்வில், இருப்பதைப் பதுக்க வேண்டும், தனக்கென மட்டுமே பெருக்க வேண்டும் என்னும் எண்ணம் தவிர்த்து, இருப்பது சிறிதெனினும் இல்லாதவரோடு பகிரும் வழியை ஒரு சிறுவன் வழியாகக் காட்டித்தந்த நிகழ்வைப் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தியில் இயேசு மக்களின் சிந்தனைகள், கேள்விகள், தேடல்கள், விண்ணப்பங்கள் சாதாரணமாகவும், உலகு சார்ந்தவையாகவும் இல்லாமல், உயர்ந்தனவாகவும், உன்னதமானதாகவும் இருப்பதற்கான வழியைக் காட்டுகிறார்.
உழைக்காமலே உணவு எப்போதும் கிடைக்கும் என்னும் ஆசையில் யூதர்கள் இயேசுவைத் தேடினர். வயிறார உண்ட அப்பம் எப்போதும் தப்பாது கிடைக்க வேண்டுமென அவர்கள் ஆசித்தனர். அவர்களின் எண்ண ஓட்டங்களை இயேசுதாமே வெளிப்படுத்துகிறார். ‘நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல; மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ (யோவா 6:24-26) என்று தம்மைத் தேடிவந்த மக்களைப் பார்த்துக் கூறுகிறார்.
ஆயனில்லா ஆடுகளான மக்கள்மீது பரிவு கொண்டு உடல் பசியைப் போக்கிய இயேசு, இப்போது அறியாமை இருளில் இருக்கும் மக்களின் உள்ளப் பசியை ஆற்றுகிறார். ‘எதற்காக என்னைத் தேடுகிறீர்கள்? உங்கள் தேடல் எவ்வளவு சாதாரணமானது! உண்மையில் நீங்கள் எதற்காக உழைக்க வேண்டும்? யாரைத் தேட வேண்டும்? யாரிடமிருந்து இது கிடைக்கும்?’ என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கான விளக்கத்தை இயேசு வழங்குகிறார் (யோவா 6:26-27). ‘அழிந்து போகும் உணவை நீங்கள் தேட வேண்டாம்; நிலை வாழ்வு தரும் அழியாத உணவைத் தேடுங்கள்’ என்று மக்களின் எண்ணங்களையும், தேடல்களையும் ஓர் உயரிய இடத்திற்கு இட்டுச்செல்கின்றார்.
பாலைநிலத்தில் தங்கள் முன்னோர்களுக்கு மோசேதான் மன்னாவைக் கொடுத்தார் என்று நம்பியவர்களுக்கு உண்மையான மன்னாவைக் கொடுத்தவர் மோசேவல்ல; கடவுள்தாம் எனக் காட்டுகிறார். வாழ்வு கொடுக்க வந்தவரை முழுமையான நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே உண்மையான தேடல்; உயர்வான தேடல். அதுவே கடவுளுக்கு ஏற்ற செயல் என்கிறார். வெறும் வயிற்றுப் பசிக்காக இயேசுவைத் தேடியவர்கள், இப்பொழுது ‘வாழ்வு தரும் உணவை எங்களுக்கும் தாரும்’ (6:34) என இயேசுவிடம் வேண்டுகின்றனர். இலக்கில்லாமல் இயேசுவைத் தேடியவர்கள் இப்போது, நம்பிக்கையோடு இயேசுவிடம் சரணடைகின்றனர்.
இன்று நம்முடைய தேடல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? நாம் யாரைத் தேடுகிறோம்? எதைத் தேடுகிறோம்? ‘உம்மை அடையாத வரை என் நெஞ்சம் அமைதி அடைவதில்லை’ என்ற புனித அகுஸ்தினாரைப் போல நம்முடைய தேடல் இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறதா எனச் சிந்திப்போம்.
சிறப்பாக, இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் இந்த நாளில் இளைஞர்கள் உலகத் தேவைகளைத் தேடுகிறார்களே தவிர, இறைவனைத் தேடுவது அரிதாகிறது. இளைஞரை நெறிப்படுத்தி, இயேசுவை மையப்படுத்திய வாழ்வில் அவர்களைப் பயணிக்கச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும், நமது கடமையும் கூட.
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிக்கொணர்ந்த ‘கிறிஸ்து வாழ்கிறார்’ எனும் இளைஞர் பற்றிய திருத்தூது ஊக்கவுரையில், “ஆண்டவரைத் தேட முயலுங்கள்; அவர் உங்கள் பக்கம் இருப்பதைக் காணும் அழகான அனுபவத்தைப் பெறுவீர்கள்” எனக் குறிப்பிடுகிறார். மேலும், “ஆண்டவரைத் தேடுவதும், அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்பதும், நம்முடைய வாழ்வை அவரிடம் ஒப்படைப்பதும், புண்ணியங்களில் வளர்வதும்தான் இளம் இதயங்களை வலிமையடையச் செய்கின்றன” எனவும் வலியுறுத்துகிறார் (எண் 156, 158).
நிறைவாக, வரலாற்றில் இயேசுவைத் தேடியவர்கள் யாவரும் மாற்றம் கண்டனர்; உடல்நலம் குன்றியோர் நலம் பெற்றனர்; பாவத்தோடு வந்தவர்கள் புனிதத்தோடு சென்றனர்; கண்ணீரோடு வந்தவர்கள் மகிழ்ச்சியோடு இல்லம் திரும்பினர்; பசியோடு வந்தவர்கள் வயிறார உண்டு மகிழ்ந்தனர்; நம்பிக்கை இழந்து நின்றவர்கள் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டனர்; அச்சத்தோடு இருந்தவர்கள் சாட்சிகளாக மாறினர்; தீமை செய்தவர்கள் நன்மை செய்வதில் நிறைவு கண்டனர்; செல்வத்தைச் சேர்ப்பதில் இன்பம் கண்டவர்கள் பகிர்வதில் நிறைவு கண்டனர். மொத்தத்தில், இயேசுவைத் தேடி வந்தவர்கள் அனைவரும் புதிய வாழ்வையும், புதிய உறவையும் பெற்று மகிழ்ந்தனர்!
சரியான தேடல்கள் வாழ்வில் நன்மை தருகின்றன. தவறான தேடல்கள் மனித வாழ்வின் மகிழ்ச்சியைச் சிதைக்கின்றன. நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் கடவுளுக்குரிய உயர் மதிப்பீட்டைத் தேடுவோம். நம்முடைய தேடல்கள் கடவுளுக்குரியவையாகவும், இறையாட்சியைக் கொண்டு வருவதாகவும், மானிட வளர்ச்சிக்குரியதாகவும் இருக்கட்டும்.
இயேசுவைத் தேடுதலும், அவரை அடைவதுமே நம் வாழ்வின் மையமாக அமையட்டும்.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவோம். அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுவோம் (எசா 55:6).