எங்கோ...… வெளியே சென்று வீடு திரும்பிய ஜேம்ஸ் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தார்!
அவர் வருவதைப் பொருட்படுத்தாதவர்களாய், அவ்வீட்டின் வரவேற்பறையில், கிடந்த மேசையின் ஒருபுறம் ‘ரெஜீ’ என்ற புனைபெயர் கொண்ட எழுத்தாளர் ரெஜீனாவும், இன்னொருபுறம்… ஆசிரியையாகப் பணிபுரியும் அவள் தாய் மேரியும் மும்முரமாக… ஏதோ… எழுதிக்கொண்டிருந்தார்கள்.
“அம்மாவும், மகளும் அப்படி என்னதான் போட்டி போட்டுக் கொண்டு எழுதுகிறீர்களோ?” கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் இருந்த இருக்கையொன்றில் அமர்ந்தார் ஜேம்ஸ்.
“மகளே ரெஜீனா...… நீ ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளாய். அதோடு பல்வேறு வார, மாத, இதழ்களிலும் எழுதியும் வருகிறாய். ஆனால், உங்கம்மா இப்படி எந்த நேரமும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறாளே... அதுதான் ஏன் என எனக்குப் புரியவே இல்லை” சலித்துக் கொண்டார் அவர்.
“அப்பா,… நான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் எழுத்தாளராகப் பணிபுரிகிறேன். எழுதுறது என்னுடைய தொழில். ஆகையால், நான் எனது ஆதாயத்துக்காக எழுதுகிறேன். ஆனால், அம்மா தனது தனிப்பட்ட ஆர்வத்தால், பல்வேறு கத்தோலிக்க இதழ்களுக்கும் எழுதிட்டு வர்றாங்க. அது மட்டுமல்ல, நம் பங்கு ஆலயத்திலிருந்து வெளிவரும் ஒரு சிற்றிதழுக்கும் துணை ஆசிரியராக இருக்காங்க. எனவே, ஒவ்வொரு மாதமும் பிரசுரிக்கப்படுகிற அவ்விதழுக்கான தயாரிப்பு வேலைகளும் அவங்களுக்கு இருக்கு இல்லையா?”
“அம்மா…ரெஜீ, நீ எழுதுறதுக்கும், உங்கம்மா எழுதுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. உனக்குப் பணம்,…பரிசுன்னு வெகுமதி கிடைக்குது. ஆனால், உங்கம்மாவுக்கு இதுபோல் எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மோசமான விமர்சனங்கள் வராம இருந்தாலே போதும்.”
“அம்மா... அப்பா… என்னம்மா சொல்றாரு? எனக்கு ஒண்ணும் புரியலையே...”
“அதாவது ரெஜீ, போன வாரம் நம் ஆலயச் சிற்றிதழுக்குப் பங்குத்தந்தை ‘குடும்பமும், மறைக்கல்வியும்’ என்கிற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தாரில்லையா?”
“ஆமாம்... ஆமாம்... அதுக்காக நீங்க ஒரு வார காலமா பல புத்தகங்களைப் படித்தும், கூகுள்ல தேடி கருத்துகளைச் சேகரித்தும், பல தடவை பிரதி எடுத்தும், முழுமைப்படுத்தி எழுதி எடுத்துக்கிட்டுப் போனீங்களே? பங்குத்தந்தைகிட்ட கொடுத்தீங்களா?”
“ரெஜீ,… நான் கட்டுரையைக் கொடுக்கப் பங்கு அலுவலகத்துக்குப் போனபோது பங்குத்தந்தை அங்கு இல்லை. உதவிப் பங்குத்தந்தைதான் இருந்தாரு. நான் அதை அவருகிட்ட கொடுத்திட்டு வந்திட்டேன். அப்புறம் மறுநாள் பங்குத்தந்தை அலைபேசியில் என்னை அழைத்தார். கட்டுரை தன் கையில் கிடைத்துவிட்டதாகவும், அதில் ஒரு சிறு பிழையிருந்தது எனவும், அதைத் திருத்திக்கொள்ளும்படியும் கூறினார்.”
“அம்மா, அவங்கள மாதிரி நீங்க தியாலஜி படிச்சிருக்கீங்களா என்ன? மறைக் கருத்துகளை எழுதும்போது அதில் தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டியதுதானே? அதில் தப்பென்ன இருக்கிறது?”
இதற்குள் இடைமறித்த ஜேம்ஸ், “இதில் தப்பொன்றுமில்லைதான். ஆனால், அந்தக் கட்டுரையின் ஓரிடத்தில் தந்தை,…மகன்,…தூய ஆவின்னு எழுதுவதற்குப் பதில் உங்கம்மா அந்தக் காலத்து ஆளில்லையா? அதனால் பழக்க தோஷத்தில் பிதா,…சுதன், பரிசுத்த ஆவி’ன்னு எழுதியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்த உதவிப் பங்குத்தந்தை இன்னும் தொடக்கச் செபத்திலேயே update ஆகாதவங்களையெல்லாம் யார் துணையாசிரியராக்கியது?” அப்படின்னு கேட்டாராம்….
இவ்வாறாக ஜேம்ஸின் கோபம் வார்த்தைகளில் வெளிப்பட, மேலும் அவர், “தந்தை, மகன், தூய ஆவி’யென்று அழைத்தாலும், ‘பிதா, சுதன், பரிசுத்த ஆவியென்று கூப்பிட்டாலும் அல்லது இதுபோல எதுவுமே சொல்லிக் கூப்பிடாவிட்டாலும் நாமெல்லாரும் கடவுளுடைய பிள்ளைகள்தான்; எதிலும் சொல்றவிதம்னு ஒண்ணு இருக்குல.…அது மட்டுமல்ல,… உங்க அம்மா தன் பணிநேரம் போக தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படம், சமூக ஊடகங்கள்னு நேரத்தைச் செலவு பண்ணாம, உருப்படியா ஏதோ ஒருவிதத்தில் சேவை செய்யணும்னு நினைக்கிறா. அதப்போய் குறை சொல்லிக்கிட்டு... மேரி, இனிமே நீ எழுதுறதைத் தொகுத்து வை. நான் உனக்குப் புத்தகமா போட்டுத் தர்றேன். அது காலத்துக்கும் நிற்கும். எனவே, இந்த மாதிரி இதழ்களுக்கு எழுதுறதை… நிறுத்திடு. அப்புறம் துணை ஆசிரியர் பதவியிலிருந்தும் விலகிவிடு. அதுதான் நல்லது.… ஆதாயம் இல்லாத உழைப்புக்கு அங்கீகாரம் இல்லைன்னா எப்படி?”
இதற்கு “மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?’ என்ற விவிலியப் பாடல் வரிகள் போல எங்கிருந்து எனக்கு அங்கீகாரம் வரும்?’ என்று மேரி வானத்தை நோக்கி விரலைச் சுட்டிக்காட்டி, ‘அங்கிருந்தே எனக்கு அங்கீகாரம் வரும்’… என நிதானமாக, சலனமின்றிப் பதில் கூற,
அதற்கு ரெஜீ “அம்மா,… அப்பாவோட கோபத்தில் நியாயம் இருக்கு. இருந்தாலும் உங்களைப் புண்படுத்துற மாதிரி… ஃபாதர் இதை உங்ககிட்ட நேரிலையே சொன்னாரா என்ன?” என்று கேட்டாள்.
“இல்லை,… பங்குத்தந்தை உதவிப் பங்குத்தந்தையிடம் கூறியதாக உபதேசியார் அப்பாகிட்ட சொல்லியிருக்கிறார்.”
“அப்பா, இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ - இந்தக் குறள் உங்களுக்கு மறந்துட்டதா? இந்த மாதிரி புறணிப் பேச்சுகளை நாம் நம்பவே கூடாது. ஏன்னா, அந்த உபதேசியார் நம் ஆலயச் சிற்றிதழின் மற்றொரு துணை ஆசிரியரும் கூட. எனவே, உங்கமேல இருக்கிற ஆற்றாமையில் ஃபாதர் சொன்னதைச் சற்றே மாற்றிச் சொல்லியிருக்கலாம். எங்க அம்மா இந்த மாதிரி விசயங்களால என்னைக்குமே பாதிக்கப்படமாட்டாங்க. தன் சேவையை எப்போதுமே நிறுத்தவும் மாட்டாங்க” என்று தெளிவாகச் சொன்னாள் ரெஜீ.
“பாத்தீங்களா... உங்களைவிட எம் பொண்ணு என்னைப் பற்றி எவ்வளவு புரிஞ்சு வெச்சிருக்கான்னு?” பெருமையுடன் உதட்டைப் பிதுக்கிய மேரி, மேலும் தொடர்ந்தாள்...
“எந்நாளும் நம்மைக் காத்துப் பராமரித்து வரும் கடவுளுக்குப் பொன்னையும், பொருளையும் மட்டுமே காணிக்கையாகத் தரணும்ங்கறதில்லை. பங்கு வளாகத்தைச் சுத்தம் பண்ணுவது, கோவில் அலங்கார வேலைகளில் உதவி செய்வது, பங்குப்பிள்ளைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பது போல, எனது இத்தகைய உழைப்பும் இறைவனுக்கான காணிக்கைதான். அந்த வகையில் எனது எழுத்து விற்பனைக்கல்ல.”…
இவ்வாறு மேரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘சார் போஸ்ட்’ என்று வாசலில் அழைக்கும் குரல் கேட்டு வெளியே சென்று கையெழுத்திட்டு வாங்கினாள். வாங்கி வந்த அடுத்த நொடி… உற்சாகம் பொங்கக் கூச்சலிட்டாள்.
“இந்த வருடத்திற்கான சிறந்த நாவலாசிரியருக்கான அரசு விருதும், அதற்கான பரிசுத் தொகை ரூபாய் ஓர் இலட்சமும் எனக்குக் கிடைத்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கு” என்றாள் மேரி.…
“அம்மா,… நீங்க கடவுளுக்குக் கொடுத்ததை அவர் இரண்டு மடங்கு ஆசிர்வாதமா நமக்குத் திரும்பக் கொடுத்திட்டார். அறுவடையின் ஆண்டவரம்மா…நம் இறைவன்.”
அப்பா,… அம்மாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள் ரெஜீ.
மூவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது.