Namvazhvu
11, ஆகஸ்டு 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு-1 அர 19:4-8; எபே 4:30- 5:2; யோவா 6:41-51
Thursday, 08 Aug 2024 04:30 am
Namvazhvu

Namvazhvu

வாழ்வு அளிக்கும் உணவு இறைவார்த்தை!

மனிதரின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும், முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அடிப்படையான உணவு உரிமை ஒரு மனிதருக்கு மறுக்கப்படும்போது அங்கே பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குகிறது. இது கொலை, கொள்ளை போன்ற தீமைகளுக்கும் வழியமைக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக உணவு நாளை முன்னிட்டு தனது மூவேளைச் செப உரையின் இறுதியில், “வறுமை, பசி ஏராளமான நம் சகோதர, சகோதரிகளை மாண்பிழக்கச் செய்கின்றது; அவர்களைப் புண்படுத்துகின்றது மற்றும் உயிரைப் பறிக்கின்றது. எனவே, பசிக்கொடுமையை அகற்றுவதற்கு உலகில் அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும்என்று உலகினருக்கு அழைப்பு விடுத்தார் (அக்டோபர் 16, 2016).

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவுதான். இந்த உணவு ஒரு மனிதருக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் பல இடங்களில் இயேசு போதித்துள்ளார். “நான் பசியாக இருந்தேன்; நீங்கள் உணவு கொடுத்தீர்களா? நான் தாகமாய் இருந்தேன்; நீங்கள் என் தாகத்தைத் தணித்தீர்களா?” (மத் 25:35). இதுதான் மானிட மகன் மாட்சியுடன் வரும்போது ஆசி பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாக அமைகிறது. எனவே, பசியோடு வருபவரின் பசியை ஆற்றுவது மிகப்பெரிய பேறு! கடந்த இரு வாரங்களாக உடல் பசியோடு தம்மைத் தேடி வந்த மக்களுக்குக் கனிவோடு உணவு பகிர்ந்து கொடுத்த இயேசு, இன்றைய பகுதியில்உள்ளப் பசியைஆற்ற முன்வருகிறார்.

உடல் பசி மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. உடல் பசியை உணவு கொண்டு ஆற்றிவிடலாம். ஆனால், இன்று உள்ளத்தை அல்லது மனத்தை ஆக்கிரமித்துள்ள பசிகள் ஏராளம். அவை அறிவுப் பசி, அதிகாரப் பசி, ஆணவப் பசி, ஆசைப் பசி, பிறர் மனைமீது பசி, புகழ் பசி, பதவி பசி, பணப் பசி, கோபப் பசி, மண் பசி, இணையதளப் பசி... எனப் பல வடிவங்களில் நீள்கின்றன. இப்படிப்பட்ட பசியைத் தீர்க்க முடியாததால்தான் வன்முறைகளும், கொலைகளும், போர்களும் நிகழ்கின்றன. மனிதரை வாட்டுகின்ற இவ்வாறான பசிகள் கொரோனாவைவிட கொடூரமானவை. மனிதர்களிடையே காணப்படும் பல்வேறு வகையான பசிகள் இன்றைய வாசகங்களில் வெளிப்படுவதை உணரலாம்.

அரசியான ஈசபேலுக்கு அஞ்சி நெடுந்தூரம் பயணிக்கும் எலியாவை இறைவன் உணவும், தண்ணீரும் தந்து திடப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது (1அர 19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக வாசிக்கும்போது, பசித்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற ஒரு வரிச் சிந்தனையில் நாம் கடந்துபோகலாம். ஆனால், எலியா யார்? அவர் ஏன் பாலைநிலத்திற்குச் சென்றார்? ஒரு சூரைச் செடியின்கீழ் அமர்ந்துகொண்டு ஏன் சாக விரும்பினார்? போன்ற கேள்விகளுக்குப் பின்னால் மனிதர்களின் கோரப்பசியும், கொலைவெறிச் செயல்களும் மறைந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய முதல் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இறைவாக்கினர் எலியாவைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியமாகும். இஸ்ரயேல் மற்றும் யூதா பகுதிகளுக்கு ஆண்டவரால் அனுப்பப்பட்ட முக்கியமான இறைவாக்கினர்கள் வரிசையில் முதலாவதாக வருபவர் எலியா. மோசேவுக்கு அடுத்தபடியாக மிகவும் மதிக்கப்பட்ட மாபெரும் இறைவாக்கினர் இவர். ‘யாவே ஆண்டவரே உண்மையான கடவுள்என்பதைத் துணிந்து பறைசாற்றிட போராடியவர். கடவுளின் பெயரால் அருள் அடையாளங்களை நிகழ்த்தியவர். திருவிவிலியத்தில் வரும் முதல் உயிர்ப்பித்தல் நிகழ்வு எலியா வழியாக நிகழ்கிறது (1அர 17:22).

இஸ்ரயேல் நாட்டை ஆண்ட அரசர்களுள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்கள் மிகக் குறைவு. ஏறக்குறைய எல்லா அரசர்களும் தீய வழியில் நடந்தனர். இவர்களின் வரலாறு இன்று நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அருள்பொழிவு செய்யப்பட்டு, ஆண்டவரால் அழைக்கப்பட்ட அரசர்கள், ஆண்டவரை மறந்து, சுயநலன்களுக்கு அடிமையாகி வேறு தெய்வங்களை வழிபட்டு வாழ்கின்ற நிலையைப் பார்க்கும்போது, இன்றைய அரசியல்வாதிகளின் நிலை நம் கண்முன் விரிகிறது. ஆண்டவரை மறந்து வாழ்கின்ற இச்சமூகம் தொழில்நுட்பப் பசி, பணப் பசி, அதிகாரப் பசி, சுயநலப் பசி, போதைப் பசி, மது/மாது பசி போன்ற பசிகளுக்கு அடிமையாகி நிற்கின்ற நிலையைப் பார்க்க முடிகிறது.

இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்களை வழிபட அரசர்கள் காரணமாயினர். அவர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முக்கியமானவர் பாகால். பாகால் ஒரு கானானேயக் கடவுள். பாகாலை வழிபட்டவர்கள் அவரை மழையின் தெய்வமாகக் கருதினார்கள். மழையைப் பெய்வித்து, நல்ல விளைச்சலைக் கொடுப்பவர் பாகால் என மக்கள் நம்பினார்கள். அரசர் ஆகாபு தலைநகரான சமாரியாவில் பாகாலுக்குக் கோவில் கட்டி வழிபட்டார். யாவே கடவுளையே மறந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் எலியா அரசர் முன்னிலையில் வந்து நின்று, “என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாதுஎனச் சூளுரைத்தார் (1அர 17:1). பாகால் கடவுள் அல்ல; அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதை எலியா நிரூபித்துக் காட்டினார். கார்மேல் மலையில் யாவே ஆண்டவரின் பிரதிநிதியான எலியா பாகால் தெய்வத்தின் பிரதிநிதிகளான அரசர் ஆகாபு மற்றும் பொய்வாக்கினர்கள் 450 பேர் முன்னிலையில்யாவே ஆண்டவர்தான் உண்மையான கடவுள்; பாகால் என்பது ஒன்றுமில்லைஎன்பதை உறுதி செய்தார். மக்கள் அனைவரும் முகம் குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!”  என்று முழங்கினர் (1அர 17:39). பாகாலின்  பொய்வாக்கினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறைவாக்கினர் எலியா பாகாலின் பொய்வாக்கினர்களுக்குச் செய்ததைக் கேள்விப்பட்டதும் அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லத் தேடுவதும், அரசிக்குப் பயந்து தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு எலியா பாலைவனம் நோக்கித் தப்பி ஓடுவதும் இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைகிறது. ஈசபேலின் அதிகாரப் பசி, பதவிப் பசி, கொலை வெறிப் பசி, பிறர் மண் பசி போன்ற வேட்கையினால் ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் உண்மையுடன் செயல்படும்போது, அதிகாரப் பசியில் இருப்பவர்களிடமிருந்து ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பது இதில் தெளிவாகிறது.

எலியா ஈசபேலிடமிருந்து பாலைவனம் வழியாக ஓரேபு என்ற கடவுளின் மலைக்குத் தப்பி ஓடிய பயணத்தில் ஆண்டவர் துணை நிற்கின்றார்; வழியில் தேவையான உணவுகள், உதவிகள் அவருக்குக் கிடைக்கச் செய்கிறார். ஆண்டவரின் ஊழியர்கள் எப்போதும் தனித்துவிடப்படுவதில்லை. மனிதர்கள் அவர்களைக் கைவிட்டாலும், தங்கள் பணியில் வெற்றி பெறவில்லை என அவர்கள் விரக்தியடைந்தாலும், ஆண்டவர் அவர்களோடிருக்கிறார்; அவர்களுக்கு வழித்துணை புரிகிறார்; அவர்களைத் திடப்படுத்துகிறார் என்பதற்கு இன்றைய முதல் வாசககம் ஒரு சான்று.

எனவே, இன்றைய முதல் வாசகத்தில் கடவுளுடைய வார்த்தை முக்கியப் பங்காற்றுகிறது. இறைவாக்கினர் எலியா வழியாகக் கடவுளின் வாக்கைக் கேட்ட மக்கள்போலி தெய்வ வழிபாடுஎன்ற பசி நோயிலிருந்து நலம் பெற்றனர். கடவுளின் வாக்கைக் கேளாத அரசன் ஆகாபு மற்றும் அரசி ஈசபேல் ஆகிய இருவரும் ஆண்டவருடைய தீர்ப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஆண்டவருடைய வார்த்தைகள் அவர்களில் நிறைவேறுகின்றன. அவர்களுடைய இரத்தத்தை நாய்கள் நக்குகின்றன (1அர 21:19; 22:38; 2அர 9:37). ஆகவே, அதிகாரப் பசி, செல்வப் பசி, புகழ் பசி அனைத்தும் ஒருவருக்கு நிலையான வாழ்வைத் தராது என்பதற்கு இவர்களின் வாழ்க்கை நமக்கோர் எடுத்துக்காட்டு.

இன்றைய முதல் வாசகச் சிந்தனையோடு நற்செய்தி வாசகத்தை இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசுவைத் தேடி வந்தவர்களின் உள்ளங்களில் எழும் வெவ்வேறு விதமான பசிகளையும் உணர முடிகிறது. இன்றைய நற்செய்திப் பகுதியில், உடல் உணவு அழியக்கூடியது; அழியாத உணவு ஒன்று உண்டு. அவ்வுணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு; அது வாழ்வு தரும் உணவு; இவ்வுணவு இறைவனின் சொல், இறைவார்த்தை, மனிதரை வாழ வைக்கும் உணவு என்ற இறை உண்மைகளைக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் வயிற்றுப் பசியைப் போக்க மீண்டும் இயேசுவிடம் வந்த மக்களின் பேராசைப் பசி, இயேசு சொன்ன உண்மையை ஏற்கவும், எதிர்க்கவும் முடியாமல் இயேசுவின் பிறப்பையும், வளர்ப்பையும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்கும் யூதர்களின் எதிர்ப்புப் பசி, அவர்களின் நம்பிக்கையின்மை என்ற பசியை எதிர்ப்புகளாகவும்  முணுமுணுப்புகளாகவும் எதிர்கொண்ட இயேசு, யூதர்களுக்கும், மக்களுக்கும் நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் கற்றுக்கொடுக்கின்றார்.

தம்மைத் தேடி வரும் மக்கள் தந்தையின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்; அவரால் ஈர்க்கப்பட வேண்டும். அப்படியானால்தான் நம்பிக்கை கொண்டு வாழ முடியும் (யோவா 6:43-44) என்ற உண்மையை இயேசு வலியுறுத்துகிறார். கடவுள் யாரையும் வலுக்கட்டாயமாகத் தம்மிடம் இழுத்துக்கொள்வதில்லை; மாறாக, மனிதரின் உள்ளத்தில் போதிக்கிறார். இயேசுவிடம் செல்ல மனிதரைத் தூண்டுகிறார். இறைவனின் தூண்டுதலுக்குச் செவிசாய்ப்போர் அவரால் ஈர்க்கப்பெறுவர். இவ்வாறு தந்தையால் ஈர்க்கப்பெறுவர் மட்டுமே தந்தையைக் காண முடியும். அதுவும் இயேசுவில்தான் அவரைக் காண முடியும். இயேசுவே தந்தையின் முழு வெளிப்பாடு (காண். யோவா 1:18) என்ற ஆழமான சிந்தனைகளை நாம் நற்செய்தியில் காண்கிறோம். ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்வர்’ (மத் 4:4). மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல; மாறாக, ஆண்டவரது சொல் (சாஞா 16:26). வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் கடவுளிடமே உள்ளன (யோவா 6:68).  எனவே,

நம்மை வாழ வைக்கும் கடவுளின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று, எலியாவைப்போல நீதி, உண்மை, அமைதி போன்ற அறப்பசி கொள்வோம்.

உள்ளப் பசியோடு நம்மைத் தேடிவரும் வறியோருக்கு நல்ல சொற்கள், ஆறுதலான ஊக்கமூட்டும் வார்த்தைகள், பெரியோரின் ஞானம் நிறைந்த போதனைகள், இறைவெளிப்பாடுகளால் உள்ளப் பசியாற்றுவோம்.

அதேநேரம், தெருவோரத்தில் 24 மணி நேரமும் வானத்தைக் கூரையாகப் பார்த்துக் கொண்டு இரந்துண்பவர்களுக்கு இனிய உரையால் அல்ல, இனிய உணவால் உடல் பசியாற்றுவோம்.