தஞ்சை கண்ட திருமறை விளக்கே!- நீவிர்
காலம் தந்த கலங்கரை விளக்கே!
எளிமை, இனிமை, தூய்மை உமக்கே!
இறைவன் தந்த வாழ்வின் கணக்கே!
கோடை விடை பெற, குளிர் வாடை வருமுன் வசந்தத்தை வரவேற்க தென்றல் மலைச்சாரல் கொண்டு வரும் பருவ மழைக்காலத்தில், 2024 - ஆம் ஆண்டின், ஜூலை திங்கள் 13 - ஆம் நாள் தமிழ்நாடு திரு அவையின் வரலாற்றுப் பக்கங்களில் வாஞ்சையோடு இடம்பிடித்துக் கொண்டது. அந்நாளில், தரணி போற்றும் தஞ்சை மண் அக்களிப்புடன் ஆர்ப்பரித்தது; தனக்குத் தலைமகன் கிடைத்தார் என்ற பெருமையில் பூரிப்படைந்தது!
தஞ்சையின் தலைமகனாம் புதிய ஆயர் மேதகு முனைவர் சகாயராஜ் தம்பு ராஜ் அவர்களைப் பெயர் சொல்லி அறிவிக்கும் திருச்சடங்கு அந்நாளில் திருத்தந்தையின் ஆணைப்படி உரோமை, தஞ்சை, திருச்சி என முப்பெரும் பேராலயங்களில் நடந்தேறியது.
சிறந்ததோர் ஆளுமையாய், நீண்டதொரு தலைமைத்துவப் பயணத்தில், 26 ஆண்டுகள் தஞ்சைத் தலத்திரு அவையைச் சீரும் சிறப்போடும் பணி செய்து, அணி செய்து, 2023 - ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் நான்காம் நாள் ஓய்வு பெற்ற ஆயர் மேதகு முனைவர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்களைத் தொடர்ந்து, மறைமாவட்டப் பரிபாலகராக 16 மாதங்கள் சிறப்பாக வழிநடத்திய பேரருள்தந்தை முனைவர் L. சகாயராஜ் அவர்களோடு தஞ்சை மண்ணும் மக்களும் மறைப்பணியாளர்களும் தங்கள் ஆயனை அறிய, அடைய ஆவலோடு காத்திருந்த காலம் அது.
ஆயன் அறிவிக்கப்பட்டதும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த தஞ்சை மறைமாவட்டம், ஆயனின் அருள்பொழிவு நிகழ்விற்கு விழாக்கோலம் பூண்டது. எளிமை, இனிமை, தூய்மை என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட இப்புதிய ஆயர், தனது அருள்பொழிவு நிகழ்வை மிகவும் எளிய முறையில் கொண்டாட அழைப்பு விடுத்தது அனைவருடைய புருவங்களையும் உயரச் செய்தது.
தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்வியல் மரபிலும் தஞ்சை மண்ணுக்கு என்றே தனிச்சிறப்பு உண்டு. சோழ மன்னர்களால் வீரம் விளைந்து, தமிழ் மணம் கமழ்ந்து, தமிழர் அரசாட்சியின் சிறப்பு வானளாவ உயர்ந்து, வெற்றிக்கொடி எங்கும் பறந்த பெருமைக்குரிய பூமி இது.
மத வேற்றுமைகள் களைந்து இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஒற்றுமை ஓங்கி நிற்கும் சகோதரத்துவப் பூமி இது. தமிழர் கட்டடக் கலையின் பெரும் அடையாளமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் பெருங்கோயில் இந்துகளின் சமய அடையாளமாகவும், நாகூர் தர்கா இஸ்லாமியர்களின் இறைக்கூடமாகவும், வேளைநகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலம் கிறிஸ்தவர்களின் அடையாளம் என்பதையும் கடந்து, எல்லா மதத்தினரும் இன, மொழி, சமய வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிக்கும் அடையாளமாகவும் விளங்கும் புண்ணிய பூமி இது.
தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டிலும், குகைக் கோயில்களிலும், சிற்பக் கலைகளிலும், கட்டடக் கலைகளிலும், தமிழர் மரபு விழாக்களிலும் தனிச்சிறப்புக் கொண்ட இம்மண்ணில் புதிய ஆயரின் விழாவும் வரலாற்றுத் தடம் பதிக்க வேண்டும் என்றே நிர்வாகம் ஆவல் கொண்டது. ஆனால், எளிமையின் இலக்கணமாய், எளியோரின் அடையாளமாய், வறியோரின் ஆதரவாய், குரலற்றவரின் குரலாய், ஒரு சாமானியனின் சகோதரனாய் வாழ்வியல் இலக்கணம் கொண்ட இவர், சற்றே மாறுபட்டவர் என்றே அடையாளம் காணச் செய்கிறது.
ஆரவாரம் இல்லா அருவியாய், சலசலப்பற்ற நதியாய், தெளிந்த நீரேடையாய் கால் நூற்றாண்டைக் கடந்த இறைப்பணியில் இவர் எல்லாருக்கும் பெய்த மழை. பயன் பெற்றோரும் ஏராளம்; பண்பட்டோரும் ஏராளம். அமைதியான தோற்றத்தில், ஆழமான நட்பில், இனிமையான புன்முறுவலில், எல்லாரையும் ஈர்க்கும் பண்பாளர் இவர். பங்கு மேய்ப்புப் பணி, சமூக விடுதலைப் பணி, கல்விப் பணி, பணிக்குழுக்களின் நிர்வாகப் பணி, குருமடப் பேராசிரியர் பணி எனப் பன்முகத் தளங்களில் அறியப்பட்ட ஆளுமை இவர். கற்றலும் கற்பித்தலும் இவரின் கருணைமிகு இரு கண்கள்.
‘அவரது இரக்கமிகு பேரன்பிற்குச் சான்று பகர’ என்ற புதிய ஆயரின் ஆயர் பணி விருதுவாக்கு, அவர் கடந்து வந்த பாதையையும், வாழ்வியல் பயணத்தையும், முன்னெடுக்கும் இலக்கினையும் கூர்மைப்படுத்துகிறது. கிறிஸ்துவின் இரக்கம் மிகுந்த அன்பை, தனது வாழ்வாலும் வார்த்தையாலும் சான்று பகர்ந்து வந்த இவர், ஆயர் பணியிலும் அதனை முன்னிலைப்படுத்துகிறார். நல்லாயன் இயேசுவின் இரக்கமும் கருணையும் அன்பும் இவரில் மேலோங்கி இருக்கவே ஆசைப்படுகிறார். தஞ்சை மறைமாவட்டத்தின் பாதுகாவலர் திரு இருதய ஆண்டவர் இரக்கத்தின், பேரன்பின் அடை யாளம். இம்மறைமாவட்டத்தின் துணைப் பாதுகாவலி வேளைநகர் ஆரோக்கிய அன்னை. இவர் கடவுளின் பேரன்பை மடிசுமந்து உல கிற்கு அடையாளப்படுத்தியவர். திரு இருதய ஆண்டவரும், வேளைநகர் ஆரோக்கிய அன்னையும் புதிய ஆயரின் விருதுவாக்கு மெய்ப்பட அருளாசிரும் வழிகாட்டுதலும் தருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
புதிய ஆயரின் தலைமையில் தஞ்சை மறைமாவட்டம் அரசியல், சமூக, பொருளாதார, வாழ்வியல் ஏற்றம் கண்டு, எல்லாரும் எல்லாமும் பெற்று, நலமான வளமான இறைச் சமூகத்தைக் கட்டியெழுப்ப இறைவன் இவருக்குத் துணையிருக்க வேண்டுவோம்! நல்லாயன் இயேசுவின் வழித்தடத்தில் பயணித்து, அவரின் இரக்கமிகு பேரன்பை எந்நாளும் சான்று பகர இறைவன் இவருக்கு உடல், உள்ள, ஆன்ம நலனையும், நீண்ட வாழ்நாளையும் தந்திட மன்றாடுவோம்! புதிய ஆயரின் பணி சிறக்க தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் ‘நம் வாழ்வு’ மனதார வாழ்த்தி மகிழ்கிறது!
அன்புத் தோழமையில்
முதன்மை ஆசிரியர்