Namvazhvu
என்று விடியும் எங்கள் உரிமை வாழ்வு?
Wednesday, 21 Aug 2024 07:32 am

Namvazhvu

வாழ்க்கையில் போராட்டங்கள் எழலாம்; ஆனால், போராட்டமே வாழ்க்கையாகக் கூடாது. ‘வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்திய மண்ணில் சாதியமும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவது அவலத்திலும் அவலம். அதில் உரிமைக்காகப் போராட்டங்கள் தொடர்வது பேரவலம். எனவேதான், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “பண்பாட்டு ஒற்றுமையில் இந்தியாவுக்கு ஈடு இணை இல்லை! இந்தியா புவியியல் ஒற்றுமையோடு அதனினும் ஆழமான பண்பாட்டு ஒற்றுமையையும் கொண்டுள்ளது. ஆனால், இங்குச் சாதி என்பதே புரிந்துகொள்ள இயலாப் பிரச்சினையாக இருக்கிறதுஎன்றார்.

உலகில் எங்குமே காணாது, இந்திய மண்ணில் மட்டுமே மக்களின் சமூகக் கட்டமைப்பும் வாழ்வியலும் வர்ணாசிரமம் வார்த்தெடுத்த சாதிய முறையால் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மத ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், சமூகக் கட்டுப்பாடாகவும் இன்றுவரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இச்சமூகக் கட்டமைப்பை முற்றிலுமாக அறுத்தெறிய முனைந்து நின்றார் அம்பேத்கர். ஆனால், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர்தேசப்பிதாகாந்தியடிகள். தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி, தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த பிரிட்டிஷ் அரசு சதி செய்வதாகக் கூறி  உண்ணா நோன்பிருந்தார் காந்தியடிகள் என்பதும் வரலாறு. “வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் எம்மக்களுக்கு இம்மதம் பாதுகாப்பு வழங்கவில்லை; மாறாக, சமூகத்தில் பழகுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களாக இவர்கள் தள்ளி வைக்கப்படுகிறார்கள்; புறக்கணிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ஈவிரக்கம் இன்றி அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்ஆகவே, மற்றவர்களுக்கு அடிமைகளாக வாழ எம்மவரை ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்”  என்றே உறுதி பூண்டார் அம்பேத்கர்.

இக்கரையில் இருந்து அக்கரை நோக்கிய நம்மவர்கள் வானிலும் வாழ்விலும் விடியல் தென்படுவதாகக் கண்டு, இந்தியர்களாக-இந்துகளாக இருந்தவர்கள் அரசியல் அமைப்புச் சட்டம் தந்த உரிமையை ஏற்று கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் மார்க்கமாகத் தழுவிக் கொண்டாலும் அடிப்படையில் நாம் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறோம். ஆயினும், அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் சாதி, மதம், இனம் என்ற பட்டியலுக்குள் அடக்கப்பட்டுப்  பிளவுபடுத்தப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம். தீண்டாமையை, சாதி ஒழிப்பைக் களம் கண்டு ஒழிக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், அதிகாரச் சுகங்களை அனுபவிக்க சாதி வெறியைத் தூண்டுபவர்களாகவே செயல்படுவதுதான் சமூகத்தின் மிகப்பெரிய சாபம்!

சமூகக் கட்டமைப்பின் மேல்தட்டு வரிசையில் சுகம் காணும் ஒருசாராரும், அடிமையின் பிடியில், ஆதிக்கச் சுரண்டலில், பொருளாதார வறுமையில், வாழ்விழந்த சூழலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மறுமுனையிலும் இருக்கும் இந்த முரண் களையப்பட வேண் டும். சாதியத் திமிரும், அதன் கோரப்பிடியும் ஒடுங்கினால்தான் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சீர்திருத்தங்களை ஒரு சமூகம் காண முடியும்.

அநீதியான சமூக ஏற்றத்தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் பின்னடைவுகளைச் சந்திக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் சமூக அவலங்களில் இருந்து மீட்டு, உரிமை வாழ்வுக்கு அழைத்துச் செல்வதே மானுடப் பண்பாகும். ஆனால், பொதுநலனை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமநீதியை, ஒற்றுமையை, மனித தர்மத்தை, பொதுநலச் சிந்தனையைசாதியம்கொன்று அழித்து விட்டது. சமுதாயத்தின் கடைக்கோடியில் தள்ளப்பட்டவர்களைக் கண்கொண்டு பார்க்க இந்த நாட்டில் நாதியில்லை. சாதிய அடிப்படையில் படிப்புரிமை, சொத்துரிமை மறுக்கப்பட்டு விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி.

பிற்படுத்தப்பட்ட இந்துகள் பட்டியல் இனத்தவராகச் சேர்க்கப்பட்டு அரசின் உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்கின்றபோது கிறிஸ்தவ, இஸ்லாமியப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் உரிமைகளை இழந்து நிற்பது திட்டமிட்டு, சட்ட வடிவம் கொண்டு அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியே!

இந்நிலையில் உரிமைக்கான குரல் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த மண்ணில் எதிரொலித்தாலும் கேட்கச்செவியற்றவர்களாகவே அரசியல் தலைவர்கள் இருப்பது வெட்கக்கேடு. ஆயினும், ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் நாம் கடைப்பிடிக்கும்கறுப்பு தினம்கிறிஸ்தவத் தலித் மக்களின் உரிமைக்கான விடியல் தினமாகவே கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-15, ‘சாதி, சமயம், இனம், மொழி, பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் அரசு தன் மக்களை ஒருபோதும் பிளவுபடுத்திப் பார்க்கக்கூடாதுஎன்றே குறிப்பிடுகிறது. மேலும், மதச்சுதந்திரத்திற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 25 முதல் 28 வரையிலான பிரிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுஆனால், 1950 -ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் வெளியிட்ட ஆணைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தலித் கிறிஸ்தவர்கள் நீக்கப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு எதிரானதே!

நிர்வாகச் சட்டக் காரணங்களுக்காகஎன முத்திரை குத்தப்பட்ட இந்த ஆணை, மற்றொரு நிர்வாகச் சட்டத்தால் ஏன் மாற்றி அமைக்கப்படக் கூடாது? என்பதே நமது கேள்வி.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதியை, உரிமையை, சலுகையை யாவரும் சமமாகப் பெற வேண்டும் என்பதே சமூகநீதி. “இந்து சமயத்திலிருந்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவச் சமயங்களுக்கு மதம் மாறிய தலித் மற்றும் பழங்குடி மக்களும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியில் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்என நீதியரசர் இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறிப்பிடுகிறது. ஆகவே, தலித் கிறிஸ்தவர்களும் பட்டியலினத்தவர் வரிசையில் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு, கல்வி, இடஒதுக்கீடு, தேர்தல் பங்களிப்பு எனச் சட்டப்பூர்வமாக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்நாளில் நாம் முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்ட இந்தக் கறுப்பு தினம் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் பல அதிர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதே உண்மை. ஆயினும், இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்களை இன்னும் வீரியத்தோடு நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். “தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஏதோ இது தலித் கிறிஸ்தவர்களுக்கான பிரச்சினை அல்ல; இது அனைவருக்குமான பிரச்சினை. இது நீதிக்கான பிரச்சினை; இது நாட்டுக்கான பிரச்சினை; இது திரு அவைக்கான பிரச்சினை. எனவே, இந்த உரிமைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று விடியல் வரும்வரை போராட வேண்டும்என்று அழைப்பு விடுக்கிறார் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள்.

அவ்வாறே செங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், “இன்றைக்கு எங்குப் பார்த்தாலும் சமத்துவம், சமூகநீதி என்பது முழங்கப்படுகிறது. அரசியல் மேடைகளானாலும் சரி, ஆலயப் பீடங்களானாலும் சரி, சமத்துவம் சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வேதனை மிகுந்த எதார்த்த உண்மை என்னவென்றால், சமூகத்தில் சமத்துவம் இல்லை; சமயம் சார்ந்த இடத்திலும் சமத்துவம் இல்லை. இத்தகைய சூழல் சமூகத்திலும் திரு அவையிலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்; மனித மாண்புடன் அவர்கள் வாழ வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்என அழைப்பு விடுக்கிறார்.

நீதி என்பது யாவருக்கும் சரியானது, சமமானது, பொதுவானது என்பதே நியதி. அத்தகைய சமூக நீதியே அனைவருடைய ஒற்றைச் சிந்தனையாய் அமைந்திட முயற்சியும் எழுச்சியும் புரட்சியும் கொண்டிடுவோம்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி’ (குறள் 118)

எனும் ஐயன் வள்ளுவனின் வாக்குக்கேற்ப ஆட்சியாளர்களும் எப்பக்கமும் சாயாமல் நீதி வழுவாது நின்று தராசு போல சமநிலையில் யாவரையும் பாவிக்கும் சமத்துவச் சமூகம் படைக்கச் செய்வோம்! சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை, உரிமைகளை, சலுகைகளை வழங்கி சமத்துவச் சமுதாயம் படைத்திடுவோம்.

விழிப்போடு இருப்போம்... சதி செய்கிறது சாதி... சமத்துவம் என்பதே நீதி!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்