‘நிலவெனும் வதனம் நெற்றி
நெடுமழை அனைய கூந்தல்
மலரெனும் கண்கள் கைகள்
மரியம்மை அழகின் தெய்வம்!’
என்றார் ‘இயேசு காவியம்’ எனும் இறவாக் காவியம் படைத்த கவியரசர் கண்ணதாசன். ‘மரியம்மை’ எனும் பெயர் ‘மிரியம்’ என எபிரேய மொழியைத் தழுவி ‘அன்பிற்குரியவர்’ என்றே பொருள் கொள்கிறது. அன்புக்கு உரியவராக, இறையன்பு குடிகொண்டவராக, கடவுளின் பேரன்பு நிறைந்தவராக, இறைவன் வரைந்த ஓவியமாக, அழகின் தெய்வமாக விளங்கும் நம் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழாவை இந்நாளில் கொண்டாடுகிறோம். இச்சிறப்பு மிக்க நாளை அகில உலகம் பெண் குழந்தைகள் தினமாக நினைவு கூர்கின்றது.
அன்னையின் பிறப்பு நாள் அகிலத்தின் பேரேட்டில் விடியலின் திருநாள்; அது பெருநாள். கருவிலே புனிதம் கொண்ட, பிறப்பிலே மகிமை கண்ட ‘அருள் நிறைந்த இல்லிடமாய்’ இறைவன் தமக்கென தேர்ந்தெடுத்த அற்புதக் குழந்தை நம் அன்னை மரியா. மண்ணில் மலர்ந்த மனித குலம் பேரொளி காண கருணையாளன் தந்த கலங்கரை விளக்கு அன்னை மரியா. அன்பும் அமைதியும், மகிழ்வும் மாசில்லா வாழ்வும் வாழ மானிட குலத்திற்கு ஒளி சுமந்து வந்த திருவிளக்கு அன்னை மரியா! அன்னையின் பிறப்புப் பெருவிழா அன்னையாம் திரு அவைக்கு மணிமகுடம்; அவர்தம் பிள்ளைகளாம் நமக்குப் பெரும் மகிழ்வு!
இக்கொண்டாட்டம் நமது சமூகத்தில் பெண்ணினம் போற்றப்படவும், பெண் குழந்தைகள் காக்கப்படவும் அழைப்பு விடுக்கிறது. ஏன் இந்த அழைப்பு? என்ற கேள்வி உள்ளத்தை உளுக்குகிறது. காலச்சக்கரம் சுழலும் போக்கில் அது நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் கணத்த காயங்களையே பதிவுகளாக விட்டுச் செல்கின்றன. குறிப்பாக, பெண்மை, பெண்ணினம், பெண் குழந்தைகள் எனும் தளங்களில் காணக்கிடக்கும் கசப்பு நிறைந்த, வலி மிகுந்த நினைவுகளும் நிகழ்வுகளும் இன்னும் இச்சமூகத்தில் ஆணாதிக்க மனநிலையையே பிரதிபலிக்கின்றது; அதுவே நம்மை வெட்கித் தலைகுனியச் செய்கிறது.
‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்றான் பாரதி. ‘உலகம் முழுவதையும் அன்பினால் அரவணைக்க வேண்டும்; அத்தகைய அன்பை வழங்குவது பெண்மையே!’ என்றார் டால்ஸ்டாய். ஆனால், இன்றும் பெண்ணினம் சந்திக்கும் சமூகச் சவால்கள் ஏராளம்; அவர்கள்மீது குறிப்பாக, பெண் குழந்தைகள் கருவில் உருவான கணம் தொட்டு, பச்சிளம் சிறுமிகளாக வளரும் நிலை தொடர்ந்து சந்திக்கும் பாலியல் துன்பங்களும், வாழ்வியல் சவால்களும் ஏராளம் ஏராளம். ரோஜா மலர்களாக மலர்ந்து, மகிழ்ந்து, மணம் பரப்ப வேண்டியவர்கள், மொட்டுகளாகவே கருகி மடிந்து கண்மூடுவது வேதனையளிக்கிறது.
‘பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்’ என்று வரையறை தந்து வேலி அமைத்த ஆணாதிக்கச் சமூகமே இன்று நிகழும் அவலங்கள் கண்டு பல்லிளிக்கின்றன. ‘வேலியே பயிரை மேயும்’ அவலங்களும் அவமானங்களுமே தொடர்கின்றன. நமது நாட்டில் 10 முதல் 18 வயது வரையுள்ள பெண் குழந்தைகளில் 26 விழுக்காடு உடல் ரீதியான தொந்தரவுகளையும், 1.4 விழுக்காட்டினர் பாலியல் பிரச்சினைகளையும் சந்திப்பதாகவும், 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி பெண் குழந்தைகள் மீது நிகழ்ந்த குற்றப் பதிவுகள் 53,874 என்றும் தேசியக் குடும்ப நலவாழ்வு ஆணையம் குறிப்பிடுகிறது.
மேலும், இத்தகைய பிரிவுகளில் உலகளாவிய புள்ளி விவரங்கள் இன்னும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன. குழந்தைகள் நல அமைப்பான UNICEF தரும் புள்ளிவிவரமோ, முப்பது நாடுகளில் ஏறக்குறைய 200 மில்லியன் பெண் குழந்தைகள் பாலியல் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்கிறது. WHO எனும் உலக நலவாரிய அமைப்பானது, பத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைக் குறிப்பிடுகிறது. மேலும், ஐந்தில் ஒரு குழந்தை 18 வயதிற்கு முன்பே குழந்தைத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.
இத்தகைய சூழலில், காலம் கடந்து கண்விழித்த மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளைக் குறிப்பாக, பெண் குழந்தைகளைக் காக்க நல வாரியமும், பல்வேறு நலத்திட்டங்களும் மேற்கொண்டிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. கருவறை முதல் கல்வி பயிலும் வகுப்பறை தொடர்ந்து, வாழ்க்கைப் பயணத்திலும் அரசு துணை நிற்பது பாராட்டத்தக்கதே! தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளில் உயர் கல்விக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம், திருமண உதவித் தொகை எனத் தொடரும் மாநில அரசின் நலத் திட்டங்கள் பாராட்டுக்குரியனவே. அவ்வாறே, ஒன்றிய அரசின் Beti Bachao Beti Padhao (BBBP), Sukanya Samriddhi Yojana (SSY) மற்றும் National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE) ஆகியன பாராட்டத்தக்கவையே!
இத்தகைய திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளைக் காக்கவும் வளர்க்கவும் ஆசைகொள்ளும் அரசு, அதேவேளையில் இக்குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்சி, இனம், பதவி, பணம் என எந்தவித தலையீடுமின்றி, பாரபட்சமுமின்றி, குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனைக்குரிய நடவடிக்கைகளை அரசியல் சாசன சட்டம் சார்ந்து எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. திரையில் ஆயிரம் கவர்ச்சித் திட்டங்களைக் காட்டிவிட்டு, திரைமறைவில் அவர்களின் வாழ்வைச் சூறையாடும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது குரல்.
இந்தியாவின் வல்லரசு கனவு, வாஞ்சையோடு பெண் குழந்தைகளைக் காப்பதிலும், பெண்மையைப் போற்றுவதிலும், பெண்ணினம் சமத்துவம் அடைவதிலுமே அடங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் கல்வி, அறிவியல், பொருளாதார, வர்த்தக மேம்பாடு என்பது நாகரிக சமூகத்தின் கட்டமைப்பில்தான் உருவாகிறது. நாகரிக சமூகம் என்பது ஆணாதிக்க அடக்குமுறையற்ற, பாலியல் சுரண்டலும், வன்கொடுமையும் இல்லாத, யாவரையும் சமமாக மதித்துப் பேணிப் பாதுகாக்கின்ற வாழ்விடத்தை, வாழ்வியல் முறையைக் கொண்டதே! அத்தகைய நாகரிகச் சமூகம் காண பெண்மையைப் போற்றுவோம்! பெண் குழந்தைகளைக் காப்போம்! அன்னையின் பிறந்த நாளில் நம் ஆழ்மனதில் உறுதி ஏற்போம்!
கண்மணிகள் காக்கப்படட்டும்;
காலமும் போற்றப்படட்டும்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்