கடவுளுக்கு நாம் முக்கியமானவர்கள்!
மனிதராய் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஒன்று நோய். ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர் என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் நோய்கள் பாதிக்கும். நோயுற்ற மனிதன் தன் சொந்தத் தாய்-தந்தையைவிட, மனைவி-குழந்தைகளைவிட மருத்துவரைத்தான் அதிகம் நம்புகிறான். குறிப்பாக, செல்வம் படைத்தவர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று, அல்லது உலகின் எந்த மூலையிலும் இருந்து மருத்துவர்களை வரவழைத்து நோயை நீக்க முயற்சிகள் மேற்கொள்வதை அறிகிறோம். ஆனால், நோயைத் தீர்ப்பதற்கோ அல்லது அதிலிருந்து விடுபடுவதற்கோ அடிப்படை வசதிகள் ஏதுமில்லா ஏழைகள் நம்பியிருப்பதோ இறைவனை மட்டுமே.
இன்று செப்டம்பர் 8 - நம் அன்னையின் பிறந்த நாள்! மனுக்குலத்தின் மீட்பரை, ஆண்டவரின் திருமகனைப் பெற்றெடுத்த தாய் மரியா உதித்த நாள்! நோயுற்ற மனிதர்கள் வேதனையும் கண்ணீருமாக, கனத்ததோர் இதயத்துடன் துயர் நீக்கும் வேளைநகர் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையைத் தேடி, பெருமூச்சிட்டபடியே, அன்னையின் திருத்தலங்களுக்குச் செல்லும் ஆயிரமாயிரம் பக்தர்களை நாம் அறிவோம்.
ஆரோக்கிய அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று இடம்பெறும் வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தங்களான நோயும், வறுமையும் நம்மை வாட்டும்போது, நம் மனத்தில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப் பற்றிச் சிந்திக்கும்போது, நாம் என்ன நினைக்கிறோம்? என்ன செய்கிறோம்?
பளபளக்கும் கிரானைட் கற்களும், மினுமினுக்கும் கண்கவர் விளக்குகளும், பத்து பதினைந்து தளங்களும் கொண்ட மருத்துவமனைக்குள் இன்று ஏழைகள் நுழையவே இயலாது. அதுபோலவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறியோரும் நோயுற்றோரும் இறைவனை நெருங்க முடியாது. காரணம், அன்றைய யூதச் சமயத் தலைவர்கள், ‘நோய் தீமையானது! குற்றங்களுக்குத் தண்டனையாக வருவது; நோய்க்கான காரணம் மனிதரின் தீய செயலே; எனவே, நோயும் வறுமையும் பாவத்திற்கான தண்டனைகள். நோயுற்றோரும் வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது’ போன்ற அச்சங்களை மனிதர்கள்மீது திணித்து வந்தனர். நோயுற்றோர் கோயிலுக்குள் கூட நுழைய அனுமதிக்கப்படவில்லை. நோயாளி அல்லது ஏழை என்றவுடன், ‘இவர் செய்த பாவமா? அல்லது இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என வழக்குகள் எழுந்தன (யோவா 9:2).
சமயத் தலைவர்கள் நோயுற்றோரையும் வறியோரையும் இறைவனிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்து வைத்து, அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்த வேளையில், உறுதியற்ற அவர்களின் உள்ளங்களுக்கு மீட்பிற்கான உறுதியை அளிக்கிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கை இழப்பு, கடவுளால் கைவிடப்பட்ட ஓர் உணர்வு, அரசர்களின் பலவீனமான ஆட்சி, அசிரியாவின் அச்சுறுத்தல், ஏதோமியர்களின் துன்புறுத்தல் (ஏதோமியர்கள் ஏசாவின் வழிவந்தவர்கள்), வட அரசான இஸ்ரயேலின் அழிவு, தொடர் தோல்வி, தொடர் ஏமாற்றங்கள்... இவற்றால் துவண்டுபோயிருந்த மக்களுக்கு எசாயாவின் வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றன. இறுகிப்போன பாறைக்குள்ளிருந்தும் சின்னதாய்க் கசியும் நீர்த்துளி போல, மக்களின் ஆழமான வேதனைகளிலும் இறைவனிடம் கொண்ட நம்பிக்கைக் குறையவில்லை. இரண்டாந்தர குடிமக்களாக, மதிக்கப்படாத மனிதர்களாகப் பார்க்கப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயுற்றோர், சிறார், பிற இனத்தார், அயல்நாட்டினர் யாவரும் கடவுளின் பிள்ளைகள்; மதிக்கப்பட வேண்டியவர்கள்; பாதுகாப்பிற்கு உரியவர்கள். இவர்கள் துன்புறும்போது ஓடோடி வந்து உதவுபவர் இறைவன் என்பது இன்றைய திருப்பாடலின் மையக்கருத்து (திபா 146).
வறியோர், நோயுற்றோர் இவர்களின் நிழல்கூட தங்கள்மேல் படக்கூடாது எனக் கருத்தாய் செயல்பட்ட யூதச் சமயத் தலைவர்களுக்கு மத்தியில், இவர்களையே இயேசு தேடிச் செல்கிறார். இவர்களையே ‘பேறுபெற்றோர்’ என்கிறார். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தம்முடைய இறையாட்சிக்குள் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறார். இன்றைய நற்செய்தியில் காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு நலப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 7:31-37).
இயேசு பிற இனத்துப் பகுதிகளான தீர், சீதோன் போன்ற நகர்களில் தமது பணியை முடித்துவிட்டு, தெக்கப்பொலி வழியாகக் கலிலேயக் கடலை அடைகிறார். இரு பகுதிகளுமே பிற இனத்தார் வாழும் பகுதிகள். தெக்கப்பொலி என்றால் ‘பத்து நகரங்கள்’ என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமஸ்குவரை பரவிக்கிடந்தன. இது அதிகமாகப் பிற இனத்தார் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. தெக்கப்பொலி என்று மாற்கு குறிப்பிட்டு எழுதுவது இயேசு பிற இனத்தாரோடு தம்மை ஒன்றித்துக் கொண்டதையே காட்டுகிறது. இப்பகுதியில் காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.
பார்வையுடைய, நடக்க முடிந்த இவர் தானாகவே இயேசுவிடம் வந்து நலம் வேண்டியிருக்கலாமே! ஏன் இவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வரவேண்டும்? குறையுள்ள மனிதர் ஒரு பாவி என்றும், அவர் கடவுளின் தண்டனையை அனுபவிக்கிறார் என்பதும் யூதர்களின் நம்பிக்கை. யூதச் சமயப் போதகர்களால் இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட இந்தக் காதுகேளாதவர் சமூக அழுத்தம், புறக்கணிப்பு, தன்னைக் காயப்படுத்தும் முறையில் நடந்துகொள்ளும் சமூகம், சமயத் தலைவர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பு இவற்றால் அச்சமூகத்திலிருந்தே விலகி வாழ விரும்பியவர். மேலும், இயேசுவைப் பற்றிக் கேட்க முடியாத நிலையிலும், தன் தேவையை வெளிப்படுத்த முடியாத நிலையிலும் இருந்த ஒரு நோயாளி. இப்படி வாழ்ந்த ஒருவரைத்தான் அவர்மேல் அக்கறை கொண்ட சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம். நோயுற்றவரை நலமாக்குவது ஒரு வல்ல செயல் என்றால், அவர்களை மனிதர்களாக மதித்து நடத்துவதும் ஒரு வல்ல செயல்தான்.
காது கேளாத மனிதரை இயேசுவிடம் அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்த செயல் வியப்பைத் தருகின்றது. ஒரு சொல் கொண்டு அவரை நலமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு காதுகேளாதவரைத் தனியே அழைத்துச் செல்கிறார். தனியே அழைத்துச் செல்வது என்பது பெறப் போகும் தனிப்பட்ட இறையனுபவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கும் இயேசு, தம் தந்தையின் துணையை அழைத்தவராய், ‘எப்பத்தா’ என்று அரமேயத்தில் சொல்கிறார். அதற்குத் ‘திறக்கப்படு’ என்பது பொருள். இயேசுவின் இந்தச் செயல் நோயுற்ற அந்த மனிதர்மீது இயேசு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தின. இயேசுவின் ஆழ்ந்த அன்பு அவரை முழுமையாக நலமாக்கியது.
இயேசு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பாவிகள் ஆகியோரை எப்போதும் இழிவாகக் கருதியதே இல்லை. இயேசு நலமற்ற இந்த மனிதருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும் வியப்பைத் தருகின்றன. குறையுள்ள மனிதரைத் தனியே அழைத்துச் சென்று அவரை நிறைவாக்கி அனுப்புகின்றார். இயேசு இந்த மனிதரை ஒரு பிரச்சினையாகவோ அல்லது ஓர் இடர்பாடாகவோ கருதவில்லை. அவரை ஒரு மனிதராகக் கருதினார். தாய்க்குரிய பரிவோடு இயேசு இம்மனிதரின் செவிகளையும் நாவையும் தொட்டு நலமாக்கினார். ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய வியப்பான செயல்களை நாம் அறிவோம்.
இன்று செய்யக்கூடிய நற்செயல்களைப் பலரும் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு மத்தியில், நோயுற்ற இந்த மனிதரை ஒரு காட்சிப்பொருளாக மற்றவர்களிடம் காட்டாமல் இயேசு நலமாக்கியதன் வழியாக நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறார். இன்று உதவிகள் செய்வதைப் படங்களாக, காணொளிகளாகப் பதிவு செய்து, ஊடகங்களிலும் இணையத்திலும் பதிவேற்றிப் பலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், உதவிகள் பெறுவோரின் முகங்களை ஊடகங்களில் வெளியிடுவது இன்னும் உதவிகள் பெறுவோரின் மனத்தைக் களங்கப்படுத்தும் என்பதைப் பலரும் உணர்வதில்லை.
இன்று நோயுற்றோரையும் வறியோரையும் எப்படிப் பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு வறியோரை, நோயுற்றோரைக் கண்டதும் மரியாதை என்ற உணர்வு எழுகிறது? மனிதர்கள் பலரும் இன்று ஆள்பார்த்தே செயல்படுகின்றனர். வசதியும் செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் திரு அவையிலும் முதலிடம் (யாக் 2:9) என்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்தச் சமுதாய நோயை நம்மிடமிருந்தும், திரு அவையிடமிருந்தும் இறைவன் அகற்ற வேண்டும் என்று மனமுருகி வேண்டுவோம். கடவுளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் ‘யாவேயின் ஏழைகள்’. அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). அவர்களை ஒருபோதும் இழிவாகக் கருதாமல் அரவணைத்து உதவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் அன்புப் பாடங்களை முன்வைக்கும் புனித யாக்கோபுவின் நல்வார்த்தைகளை நமதாக்குவோம் (யாக் 2:1-5).
நோயுற்றோரும், வறியோரும் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களைத் தன் வாழ்வின் மையமாகவும், பணிகளின் மையமாகவும் கொண்டு வாழ்ந்த புனித அன்னை தெரேசாவைப் போல, வறியோருக்காகவும், நோயுற்றோருக்காகவும் தொடர்ந்து அன்புப் பணியை ஆற்றுவோம். மகிழ்ச்சியான தாராள உள்ளமே நல்ல கிறிஸ்தவருக்கான அடையாளம். ஆகவே, முகமலர்ச்சியோடும் அகமலர்ச்சியோடும் நோய்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கு நாம் நம்பிக்கை ஒளியாய் இருப்போம்.