தமிழரின் சங்க காலம் தொட்டே வேளாண் உளவுத் தொழில் மானுடச் சமூக வாழ்வில் சிறப்பிடம் கொண்டதாக இருக்கிறது. இது உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தொழிலாகக் கருதப்பட்டதால் அனைத்துத் தொழில்களுக்கும் ஆதாரமானதாகக் கணிக்கப்பட்டது; உழவர் சமூகம் முதலிடத்தில் வைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டது. எனவேதான்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் 1033)
என்றார் ஐயன் வள்ளுவர். ‘வேள்’ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல்லாடல் பொதுவாகக் கொடை, ஈகை எனப் பொருள் கொள்கிறது. அதாவது, விளைபொருள்கள் அனைத்தும் நிலத்தின் கொடையாதலால் அவ்வாறு கருதப்பட்டது. மேலும், வேளாண் என்னும் சொல், வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருள் கொள்கிறதாம். இவ்வாறாக, வேளாண்மை என்ற சொல் ‘விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்’ என்றே பொருள் கொள்கிறது.
அவ்வாறே, Agricultura என்னும் இலத்தீன் சொல்லாடலில் இருந்து பிறந்த Agriculture என்னும் ஆங்கிலச் சொல், Ager (நிலம்), Cultura (பண்படுத்துதல்) என்னும் அதன் மூலச் சொற்களைத் தழுவி நிலத்தைப் பண்படுத்தும் செயல் எனக் குறிப்பிடுகிறது. நாடோடிகளாக இருந்த மனித இனம் நீர் நிலைகளைத் தேடிச்சென்று, நிலையான வாழ்விடங்களை அமைத்து, மண்ணையும், தங்கள் மனங்களையும் பண்படுத்தலாயினர்; நாகரிக எழுச்சி கண்டனர். ஆகவே, உணவு, பண்பாடு, இயற்கை, வழிபாடு என மனித இனத்தின் உயர் நிலைச் செயல்பாடுகளை முன்வைத்து மானுட வாழ்வியலின் பரிணாமத்தில் சமூக-பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுத்தது இந்த வேளாண்மைத் தொழிலே! ‘வேளாண்மையே மற்ற எல்லாக் கலைகளுக்கும் முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது’ என்கின்றனர் வரலாற்றுப் பேராசிரியர்கள். ஆகவேதான், பண்டைய தமிழ் மரபில் ‘உழவர்’ என்ற சிறப்புப் பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டிருக்கிறது.
வேளாண்மைத் தொழில் இல்லாமல் நாட்டில் எதுவும் இல்லை. உலகில் பொருளீட்ட எத்தனை தொழில்கள் இருந்தாலும், நமக்கு உணவூட்ட முன்னிருப்பது விவசாயம் மட்டுமே, விவசாயிகள் மட்டுமே! கடும் வெயிலிலும் மழையிலும் காணி கண்டு, இவ்வுலகிற்கு உணவளிக்கும் உன்னதமான மனிதர்கள் அவர்கள். உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின்னிருப்பது என்பதை உரக்கச் சொல்கிறார் வள்ளுவர்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)
என்கிறார். மானுட வாழ்வியலுக்குக் கலாச்சாரப் பண்பாட்டைக் கற்றுத்தந்த இத்தகைய சிறப்புப் பெற்ற உழவுத் தொழில், இருபதாம் நூற்றாண்டின் கவர்ச்சிமிகு நாகரிக வளர்ச்சியால், வசதி வாய்ப்புகள் கொண்ட பேராசையால், மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியால் அதன் முக்கியத்துவம் சிதைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.
உழவன் கண்டுகொள்ளப்படாததும், உழவுத் தொழில் சிறுமைப்படுத்தப்படுவதும், அவனது உரிமைகள் மறுக்கப்படுவதும், வாழ்வாதாரம் பெரும் முதலாளிகளால் சூறையாடப்படுவதும் இந்திய அரசியல் சூழலில் அன்றாட நிகழ்வுகளாக அரங்கேறுவதே கவலை அளிக்கிறது.
1991 மற்றும் 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு இடையே 20 ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் குறைந்திருக்கிறது என்பதும், திட்டக் கமிஷனின் புள்ளி விவரப்படி 2005 முதல் 2010 -ஆம் ஆண்டு கால இடைவெளியில் விவசாயத் துறைகளில் 140 இலட்சம் வேலை இழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும், தேசியக் குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட புள்ளி விவரப்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் மூன்று இலட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும், இது பெண்கள், தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் தற்கொலையைத் தவிர்த்த புள்ளி விவரம் என்பதும் உள்ளத்தை உலுக்குகிறது. இப்புள்ளி விவரத்தின் நீட்சியாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இவர்களின் உரிமைக்கான போராட்டம் ஓராண்டு, நான்கு மாதம், இரண்டு நாள்கள் (ஆகஸ்டு 9, 2020 - டிசம்பர் 11, 2021) நீடித்த போதும் கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ச.க. அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், அண்மைக் காலத்தில் ஒன்றிய அமைச்சரவை அளித்த வேளாண் திட்ட ஒப்புதல் வாயிலாகவும் கபட நாடகமாடுகிறது. கண்களைக் குருடாக்கி விட்டு சூரிய நமஸ்காரத்திற்கு அழைக்கிறது.
விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை வலுப்படுத்திவிட்டு, 14 கோடியில் ஏழு புதிய வேளாண் திட்டங்கள் எனக் கவர்ச்சி வலை விரிக்கிறது. இதுவும் மத்திய-மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு உத்திகள் போலத்தான் தெரிகிறது.
1) விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த எண்ம (டிஜிட்டல்) வேளாண்மை இயக்கத் திட்டமும், 2) காலநிலையைத் தாங்கும் பயிர்களைப் பயிரிடும் நடைமுறையைப் பரவலாக்கி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டமும், 3) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய கல்வித்துறைகளை வலுப்படுத்தும் திட்டமும், 4) கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடைக் கல்வி, பால் உற்பத்தித் தொழில்நுட்ப மேம்பாடுகளை உள்ளடக்கிய திட்டமும், 5) மருத்துவ மற்றும் நறுமண வகைத் தாவரங்களை உள்ளடக்கிய தோட்டக்கலை வளர்ச்சிக்கான திட்டமும், 6) நாடு முழுவதும் 700 -க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேளாண்மை அறிவியல் மையங்களான கிருஷி விக்யான் கேந்திரங்களை (கே.வி.கே.) வலுப்படுத்தும் திட்டமும், 7) இயற்கை வள மேலாண்மைக்கான திட்டங்களும் என ஏழு திட்டங்களை முன்வைத்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலையும் பெற்றிருக்கிறது பா.ச.க. அரசு.
இத்திட்டங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என ஒன்றிய பா.ச.க. அரசு அறிவித்தாலும், வருவாய் ஈட்டவிருக்கின்ற பெரும் முதலாளிகள் யார் என்பதை ஊரும் நாடும், ஏன் உலகமுமே அறியும். வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றது முதல் கூடுதல் கவனம் வேளாண் துறை மீது செலுத்தப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டாலும், திரை மறைவில் பெரும் முதலாளிகள், இடைத் தரகர்கள், வங்கிக்கடன் வழியாகத் திட்டமிட்டு சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதுமே இலக்காகத் தென்படுகிறது. ‘டிஜிட்டல் (எண்ம) வேளாண்மை மிஷன் திட்டம்’ எனத் திட்டங்கள் கவர்ச்சியாக இருந்தாலும், ‘சிங்கிள் டீ’ செலவுக்குக்கூட வசதி இல்லாத நிலையிலேயே உழவனின் அன்றாட நாளும் பொழுதும் விடிகிறது என்பதே எதார்த்தம்.
விவசாயம் இலாபம் ஈட்டும் தொழிலாக இன்னும் முன்னேறவில்லை என்பதே உண்மை. ‘உழுபவன் உழுதுகொண்டே இருக்கிறான்; இடை வருபவனோ உறிஞ்சி கொழுத்துக் கொண்டே இருக்கிறான்’ என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
போதிய அளவு வேளாண் கடன் உதவி வழங்குவது, மானிய முறையில் விதைபொருள்கள், உரம், வேளாண் கருவிகள் வழங்குவது, விளைப்பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது, அரசே விளைப்பொருள்களைக் கொள்முதல் செய்வது, உழவர்களுக்கு மருத்துவ வாழ்வாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குவது, இளைய தலைமுறையினரிடத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து விவசாயத் தொழில் உள்கூறுகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது, விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி ஊக்கத்தொகை, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவது என அரசு பரந்த நோக்குடன் உழவுச் சமூகத்தைப் பார்க்க வேண்டும். கவர்ச்சித் திட்டங்களால் களவாடப்படும் அவர்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும். மேலும், வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்பப் புரிதல் கொண்டுள்ள அதிகாரிகள் கணினி, எண்ம தொழில்நுட்பப் பயிற்சி பற்றி விவசாயிகளுக்கு நல்ல புரிதலும் பயிற்சியும் முதலில் வழங்க முயல வேண்டும்.
ஒன்றிய பா.ச.க. அரசின் கடந்த பத்து ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இளமையைக் கழிக்கும் இளையோர் மாற்றுச் சிந்தனையுடன் விவசாயம் சார்ந்த தொழில்துறைகளில் நவீன தொழில்நுட்பம் கொண்டு பயணிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
உழவர் காப்பீட்டுத் திட்டம், உழவர் ஊக்கத் தொகை, ‘விவசாயிகளுடன் ஒருநாள்’ என உழவர் வாழ்வு மேம்பட இங்கே தமிழ்நாடு அரசு சில சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்தாலும், இன்னும் சிறப்புச் சலுகைகள் வழங்கி உழவுத் தொழிலுக்கும், உழவர் வாழ்வுக்கும் அரசு உயிர் கொடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்