‘இறைவெளிப்பாடு’ என்ற இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் கோட்பாட்டு ஏடு ‘தேய் வெர்பும்’ (‘கடவுளின் வார்த்தை’) என்ற இலத்தீன் வார்த்தைகளோடு தொடங்குவதால், அதுவே அந்த ஏட்டுக்குத் தலைப்பாயிற்று. தமிழில் அது ‘இறைவெளிப்பாடு’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வேடு இறைவார்த்தை பற்றியது என்பது தெளிவு.
இங்கு நாம் இரண்டு கருத்துகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:
1. கடவுளின் வார்த்தையானது ‘இறைவெளிப்பாடு’ என்ற பரந்த தளத்தில் வைத்து விளக்கப்படுவது சிறப்பு. 2. நிலைவாழ்வின் நற்செய்தியை உலகம் முழுவதற்கும் பறைசாற்றுவதே திருச்சங்கத்தின் அருள்பணி (Pastoral Ministry) சார்ந்த நோக்கம் என்பதை 1யோவா 1:2-3 வசனங்களை மேற்கோள்காட்டி இவ்வேடு எடுத்துரைக்கிறது (‘இறைவெளிப்பாடு’ எண், 1). இறைவார்த்தைக்கு முதலில் தான் மனமுவந்து செவிசாய்த்து, அதை அறிவிப்பதே திரு அவையின் அணுகுமுறை என்பதை முன்னுரையிலேயே தெளிவாக்குகிறது எனில், இறைவார்த்தை பற்றி எழும் கேள்விகளுக்கு ஆராய்ச்சிப்பூர்வமான பதில் தருவது இவ்வேட்டின் நோக்கம் அல்ல; அருள்பணி கண்ணோட்டத்தில் இறைவார்த்தை பற்றிய கோட்பாட்டை விளக்குவதே அதன் நோக்கம்.
கண்ணோட்டம் புதிது!
திரிதெந்தின் மற்றும் முதலாம் வத்திக்கான் திருச்சங்கங்களின் வழி நின்றாலும், இறைவெளிப்பாடு பற்றிய விளக்கத்தில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் பெரிதும் மாறுபடுகிறது. இறைவெளிப்பாட்டின் கருப்பொருள் நம்பிக்கையாளர் நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சில கோட்பாடுகள் அல்ல; அடிப்படையில் அது கடவுளுக்கும் மனிதருக்குமிடையே நிகழும் உறவுப் பரிமாற்றம். அது கடவுளையும், கிறிஸ்துவில் அரங்கேறிய மீட்புத் திட்டத்தையும் பற்றியது (எபே 1:9).
அளவுகடந்த ஞானமும் நன்மைத்தனமும் கொண்ட கடவுள் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறார். வார்த்தை மனுவுருவான தம் மகன் கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மனிதர் அனைவரும் தம்மை வந்தடைய வேண்டும், தம் இறை இயல்பில் பங்குபெற வேண்டும் என்பதே வானகத் தந்தையின் பேராவல் (எபே 2:18; 2பேது 1:4). தம் பேரன்பின் மிகுதியால் மனிதரை தம் நண்பர்களென்று உறவு கொண்டாடுகின்றார் (விப 33:11; யோவா 15:14-15). மனிதரோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள விழைகிறார் இறைவன்; நம்மோடு குடிகொள்கிறார் (பாரூக் 3:38; யோவா 1:14). மூவொரு கடவுளின் நட்புறவில் நாம் திளைக்க வேண்டும் என்பதே இறைத்திருவுளம் (‘இறைவெளிப்பாடு’ எண் 2). அதனால்தான் திருவிவிலியம் ‘கடவுள் மனிதருக்கு எழுதிய காதல் கடிதம்’ என்பார் புனித ஜான் கிறிசோஸ்தம்.
பொது இறைவெளிப்பாடு இனி இல்லை!
கடவுளால் படைக்கப்பட்ட படைப்பனைத்தும் கடவுளின் ஞானத்திற்கும் பேரன்புக்கும் சான்றாக உள்ளன. படைப்பு முழுவதுமே இறைவனின் வெளிப்பாட்டுத்தளமாக அமைந்துள்ளன. எனவே, இயற்கையைப் பார்த்து, பகுத்தறிவைப் பயன்படுத்திப் படைத்தவரை நம்மால் அறிந்துகொள்ள முடியும் (உரோ 1:20; ‘இறைவெளிப்பாடு’ எண் 3,6).
கடவுளை வெளிப்படுத்தும் புத்தகமாக இயற்கையை வர்ணிக்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் (வெர்பும் தோமினி, எண் 7). வார்த்தையானவரின் வித்துகள் பிற நாட்டு மரபுகளிலும், சமய மரபுகளிலும் மறைந்திருக்கின்றன (‘திருச்சபையின் நற்செய்திப் பணி’ எண் 11) என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதும் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது. மேலும், மனித அறிவுக்கு எட்டாத இறைச்செல்வங்களையும் கடவுள் மனிதரோடு பகிர்ந்துகொள்கிறார் (‘இறைவெளிப்பாடு’ எண் 6).
படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதருக்குத் தம்மை வெளிப்படுத்திய இறைவன் பாவத்தினால் மனிதன் வீழ்ந்தபோதும் அவனை மீட்டெடுக்கத் திருவுளம் கொண்டார். ஆபிரகாம், மோசே, இறைவாக்கினர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து வெளிப்பாட்டின் நிறைவான தம் மகனின் வருகைக்கு அவர்களைத் தயாரித்தார் (‘இறைவெளிப்பாடு’ எண். 3). தமது உடனிருப்பு, போதனை, வல்ல செயல்கள், பாடுகள், இறப்பு-உயிர்ப்பாலும், இறுதியாக, தூய ஆவியாரை அனுப்பியதாலும் இயேசு இறைவெளிப்பாட்டைத் தம்மிலே நிறைவு செய்தார். கிறிஸ்துதாம் இறைவெளிப்பாட்டின் நிறைவு. புதிய, இறுதியான உடன்படிக்கை அவரில் நிறைவேறிவிட்டது (எபி 1:1-3; ‘இறைவெளிப்பாடு’ எண் 4). வேறு எந்தப் பொதுவான வெளிப்பாட்டுக்கும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இறைவெளிப்பாட்டிற்கு நமது பதில்?
மனிதரோடு உரையாடி, உறவாடித் தம்மை வெளிப்படுத்தும் இறைவனுக்கு, நாம் தரக்கூடிய மிகச்சிறந்த பதில் அவரில் நம்பிக்கைக் கொண்டு அவருக்குக் கீழ்ப்படிவதே (உரோ 16:26; காண்: உரோ 1:5; 2கொரி 10:5-6). முழு அறிவோடும் விருப்பத்தோடும் கடவுளுக்குப் பணிந்து, நம்பிக்கையில் நம்மை முழுவதும் அவருக்குக் கொடுக்க இறைவெளிப்பாடு அழைக்கிறது.
கடவுள்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையே அவருடைய கொடைதான். தூய ஆவியார் நம் இதயத்தையும் மனத்தையும் திறந்து, நம்முள் செயலாற்றி, வெளிப்படுத்தப்படும் மறையுண்மைகளை ஏற்று நம்பச்செய்கிறார். இறைவெளிப்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தேவையான நம்பிக்கையை அதே ஆவியார் முழுமை பெறச்செய்கிறார்.