“ஒருமுறை பாடுவது, இருமுறை செபிப்பதற்குச் சமம்” என்னும் புனித அகுஸ்தினாரின் பொன்மொழியை நாம் நன்கறிவோம். இருப்பினும், நமது கத்தோலிக்க வழிபாடுகளிலும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப இறைவேண்டல்களிலும் பாடலுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே வருத்தமான எதார்த்தம்.
உண்மையில் பாடல் பற்றிய நமது புரிதலே தவறானதோ என்றே சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது. பெந்தகோஸ்தே சபைகளிலும், தென்னிந்தியத் திரு அவை போன்ற வரலாற்றுச் சபைகளிலும் பாடல் மிகுந்த அழுத்தம் பெறுகிறது. அவர்களுக்குப் பாடல் என்பதே வழிபாடுதான், ஆராதனைதான். எனவே, அவர்கள் சலிக்காமல் பாடுகிறார்கள், ஆர்வம், ஆர்ப்பரிப்போடு பாடுகிறார்கள்.
அவர்களுடன் நமது கத்தோலிக்க வழிபாட்டுப் பாடல்களை ஒப்பிட்டுப் பாருங்கள். திருப்பலியில் நாம் பயன்படுத்தும் வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், திருவிருந்துப் பாடல் போன்றவை நற்கருணைக் கொண்டாட்டத்தின் உடன் நிகழ்வாகச் சேர்க்கப்படுகிறதே தவிர, தம்மிலே அவைகளுக்குத் தனித்துவ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இந்த மனநிலை நம்மை விட்டு மாறி, நமது வழிபாடுகளிலும், தனி, குடும்ப இறைவேண்டல்களிலும் பாடல் சிறப்பிடம் பெறவேண்டும்.
பாடலின் சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று பாடும்போது நமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மன வலிமை அனைத்தும் ஒன்று சேர்கின்றன. பாடல் இறைவேண்டலை நம் ஆளுமையின் அனைத்துத் தளங்களிலிருந்தும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், ஒருமுறை பாடுவது, இருமுறை இறைவேண்டல் செய்வதற்கு இணையானது.
பாடலின் சிறப்புகளைத் திருவிவிலியத்தின் பல பக்கங்களிலும் பார்க்கிறோம்.
1. செங்கடலைக் கடந்தவுடன் மோசேயும், இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடியதே (விப 15:1) திருவிவிலியத்தின் முதல் பாடல். “ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன். ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்” என்பதே அந்த முதல் பாடல்.
2. தெபோராவின் வெற்றிப் பாடல் காலத்தால் மிகவும் தொன்மையானது. “எழுந்திடு, தெபோரா எழுந்திடு! பாடல் ஒன்று பாடு” (நீத 5:1) என்பது அப்பாடலின் தொடக்கம்.
3. பாடகர் குழுவை உருவாக்கிய பெருமை தாவீது அரசரையே சாரும். “ஆண்டவருக்கு நன்றிப் பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின் முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்” (1குறி 16:7).
4. திருப்பாடல்கள் நூலில் பாடல் பாடும் அழைப்பு பலமுறை வருகின்றது. “புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்” (திபா 33:3) என்பது அவற்றுள் ஒன்று.
5. “என் கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்” (யூதி 16:1-13) என்று யூதித்து பாடிய பாடல் புகழ்பெற்றது. மேலும், இறைவாக்கினர் அபக்கூக்கு (3:1), தோபித்து, தோபியா (தோபி 12:22), சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ (தானி (இ) 1:1), யூதாவும், அவரது படைவீரர்களும் (1மக் 4:24) பாடல் பாடி ஆண்டவரைப் போற்றியதைப் பழைய ஏற்பாடு பதிவு செய்துள்ளது.
6. புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசுவும் பாடினார் என்பதை “அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்” (மத் 26:30) என்னும் வரிகள் சுட்டுகின்றன.
7. அன்னை மரியாவும் பாடினார் என்பதை லூக்கா நற்செய்தியின் ‘மரியாவின் பாடல்’ (லூக் 1:46) என்னும் தலைப்பு எண்பிக்கிறது. இயேசு பிறந்தபோது இடையர்களும் (லூக் 2:20) பாடினர்.
8. பவுலடியாரும் சீலாவும் சிறையில் நள்ளிரவில் புகழ்ப்பா பாடினர், அதைக் கைதிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த இறைபுகழ்ச்சியால் நில நடுக்கம் ஏற்பட்டு, அனைவரது விலங்குகளும் கழன்று விழுந்தன (திப 16:25-27).
எனவேதான், தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களுக்கும் பாடல் பாடுவது இறைவழிபாட்டின் முகாமையான கூறுகளுள் ஒன்றாக இருந்தது. இதனை “உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்” (எபே 5:19) என்னும் பவுலடியாரின் அறிவுரையிலிருந்து அறிகிறோம். “திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்” (கொலோ 3:16) என்று கொலோசையருக்கும் அவர் எழுதியுள்ளார்.
அவ்வாறே, திருத்தூதர் யாக்கோபும் “உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்” (யாக் 5:13) என்று அறிவுறுத்துகிறார்.
பாடுவதன் இரண்டு சிறப்புகளைத் திருவிவிலியம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது
1. பாடல் கடவுளின் விருப்பம். “கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்” (எபே 1:12) என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் தூய பவுலடியார்.
2. பாடல் ஒரு விண்ணகச் செயல்பாடு. விண்ணகத்தின் செயல்பாடுகளைக் காட்சியாகச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் விண்ணகத்தில் உள்ள அனைவரும் எப்போதும் பாடல்கள் பாடி ஆண்டவரைப் போற்றிக் கொண்டிருப்பதைப் பல இடங்களில் காட்டுகிறது. விண்ணகத்தின் நான்கு உயிர்கள் (திவெ 4:8), இருபத்து நான்கு மூப்பர்கள் (திவெ 5:9, 19:4), கோடிக்கணக்கான வானதூதர்கள் (திவெ 5:12), எல்லா நாட்டையும் சேர்ந்த பெருந்திரளான மக்கள் (7:10), தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் (திவெ 14:3), ஏழு வானதூதர்கள் (திவெ 15:1) ஆகியோர் பாடல்கள் பாடி இறைவனைப் போற்றுவதை நாம் வாசிக்கிறோம்.
பாடுவதால் நுரையீரல் வலிமையடைகிறது, இரத்த ஓட்டம் மேம்படுகிறது, முகத்தசைகள் வலுப்பெறுகின்றன, மன அழுத்தம் குறைகிறது... எனப் பட்டியலிட்டு, பாடுவது நம் உடல் நலனுக்கும் நல்லது என்கின்றனர் உடல் நல வல்லுநர்கள்.
எனவே, எப்போதும் நாம் பாடல் பாடி ஆண்டவரைப் போற்றுவோமாக!