வாழ்க்கை என்பது நீளமான நாள்கள் கொண்டது என்பதைத் தாண்டி, ஆழமான அர்த்தத்தைக் கொண்டது எனும் புரிதல் வரும்போது வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம். இந்த வசனத்தை நான் சிறுவயதில் பேருந்தில் போகிறபோது, ஏதோ ஒரு பள்ளியின் சுவரில் படித்தது. அப்போது அதைப் படிப்பதற்கு நன்றாக இருந்தது; ஆனால், அது எனக்கு எவ்வித அர்த்தத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி தாண்டி வேலை என்று வரும்போதுதான், அதன் முழுத்தாக்கத்தை உணர முடிந்தது.
ஒரு சிறு வார்த்தை இவ்வளவு வருடங்கள் கழித்துதான் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது எதனால்? அது தந்த புரிதலைப் புரிந்துகொள்ள எனக்கு இவ்வளவு நாள்கள் எடுத்தது, அதுதான் காரணம். ஒன்றை முழுதாய்ப் புரியும்போது நாம் அதுவாக மாறிவிடுகிறோம். இல்லையெனில் அதுவே நம்மை மாற்றிவிடும் நிலையும் ஏற்படும். மொத்தத்தில், ஏதோ ஒன்றில் நாம் இலயித்திருக்க வேண்டும் எனும் வாழ்வியல் தாக்கத்தை நாம் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில் நம் வாழ்வில் கண்டிருப்போம். அதை விட்டு விடாது ‘சிக்’கெனப் பிடித்தால் நம் வாழ்க்கை அழகாகும்.
செய்யும் வேலையைப் புரிந்து, உணர்ந்து செய்யும் போது, அதில் அலுப்பு ஏற்படாது. நிறுவனங்களில் அதன் பணியாளர்களை, அவர்கள் செய்யும் வேலையை உணர்ந்து செய்ய வைக்க மனிதவளத்துறை சார்பாகப் பல முயற்சிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் இரு தரப்புக்கும் நன்மை உண்டு என்பதைத் தாண்டி, ‘நம்மள அவங்க வழிக்குக் கொண்டுவரத்தான் இந்த மாதிரி அதிரி புதிரி முயற்சிகள இந்த HR ஆளுக செய்யுறாங்க, நாம கொஞ்சம் உஷாரா இருந்துக்கணும்.’ இதுபோன்ற பல கமெண்டுகளை நாம் பணிபுரியும் நிறுவனங்களில் கேட்க முடியும். அதெல்லாம் தாண்டி ‘இது நமக்கானது, நம் உயர்வுக்கானது’ என யார் நினைக்க ஆரம்பிக்கிறார்களோ, அவர்கள் தங்கள் உயர்வுக்கான வெளிச்சத்தைக் கண்டுகொள்வார்கள்.
நான் இதற்கு முந்தையக் கட்டுரையில் குறிப்பிட்டது போல, வாழ்க்கையின் நோக்கமே இன்பமாய் மற்றும் மகிழ்வாய் இருப்பதுதான். அதைச் சரிவர நாம் உணரும்போது தடைகளைத் தகர்த்து நாம் மேலெழும் விந்தை நிகழும். என் வாழ்க்கையைச் சீரமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா? எனும் ஏக்கத்தோடு பலர் இருப்பதை நாம் கண்டிருப்போம். ‘இல்லையில்லை, எனக்கு இதற்கு மேல் வாழ்வதற்கு ஒன்றுமில்லை, எனக்கானதை எல்லாம் அனுபவித்து விட்டேன், இறப்பை எதிர்நோக்கி உள்ளேன்’ என்று சிலரும், ‘எதாவது செய்து என்னைக் கருணைக்கொலை (Euthanasia) செய்து விடுங்கள்’ என்று சிலரும் கெஞ்சுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம் (நம் நாட்டில் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க நீதிமன்றத்தை நாடியோர் எண்ணிக்கை சென்ற வருடம் இதுவரை இல்லாத அளவு அதிகரித்ததாகப் புள்ளி விவரம் சொல்கிறது).
இதையெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையைப் பற்றி சில அச்சுறுத்தல்கள் வரலாம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்ததுதான் வாழ்க்கை எனும் புரிதலுக்கு வரும்போது, அச்சம் மிச்சமில்லாமல் ஓடிவிடும். எவ்வித அச்சம் மேலிட்டாலும், அதைக் கடந்து வந்துவிடுவேன் என்று துணிச்சல் குணம் நிறைந்த என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ‘பணிபுரியும் இடத்தில் மேலிடத்தில் இருந்து வரும் அச்சத்தை எப்படி எதிர் கொள்வாய்?’ எனக் கேட்டபோது, ‘அதைத் தருபவருக்கே ஒரு பெரிய Shock கொடுத்திட்டா போவுது? அப்புறம் நம்ம பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டாங்க’ என்று சொன்னது எனக்கே Shock-காக இருந்தது.
‘அஞ்சிக்கொண்டும் வாழாதே, கெஞ்சிக் கொண்டும் வாழாதே, உனக்கான வாழ்க்கையை நீ வாழ்!’ இந்த வசனம் சாலையில் பயணிக்கும்போது யாரோ ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்தது. வாசிப்பதற்குப் பிரமிப்பாய் இருந்தது! நம் உள்ளுணர்வை உசுப்பி விடுவதுபோல் அந்த வார்த்தை இருந்தது.
‘பணிபுரியும் இடங்களில் வெறுமனே, வீராப்பா மற்றும் வெறப்பா இருந்து எதையும் சாதிக்க முடியாது தம்பி; சற்று நெளிவு சுழிவோடு இருந்தாத்தான் காலம் தள்ள முடியும்.’ இந்த வார்த்தையை நான் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் அங்கு இருந்த தலைமை HR என்னிடம் கூறியது. அவர் சொன்னதின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கு வாய்மைக்கு வழியில்லை என்பதைச் சேர்ந்த இரு மாதங்களில் உணர்ந்து கொண்டேன்.
மனச்சாட்சிக்கு ஏற்ப மனிதன் வாழ்வதையே வாய்மை என்று கூறலாம். வாய்மையின் வழி வாழ்பவர்கள் மனநிறைவுடன் வாழ்வதை நாம் கண்ணாரக் கண்டிருப்போம். வாழ்வில் எந்நிலை வரினும், மனம் தளராது மனசாட்சிக்கு ஒத்துவராததைப் புறந்தள்ளிச் சரியெனப்பட்டதைத் துணிவோடு நகர்த்திச் செல்லும் பலரை நான் பணிபுரிந்த இடத்தில் பார்த்துள்ளேன். அவர்கள் என்றும் மங்காப் புகழ் உடையவர்களாக இருப்பர். அவர்களது தாக்கம் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வல்லமை கொண்டது. அவர்களை உற்றுநோக்கும்போது வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் எனும் உத்வேகம் நமக்கும் ஏற்படும்.
ஏன் இதையெல்லாம் கூறுகிறேன் என்றால், வீட்டைத் தாண்டி நாம் அதிகம் உற்றுநோக்கப்படுவதும் கவனிக்கப்படுவதும் நாம் பணிபுரியும் இடத்தில்தான். அங்கு நாம் எப்படி இருக்கிறோம், எப்படி ஒரு விஷயத்தைக் கையாள்கிறோம் என்பதை வைத்து நம் வாழ்வு மதிப்பிடப்படும். அது மதிப்பு மிகுந்ததாக இருந்தால், பிறரால் இவரைப்போல் நாமும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் உத்வேகம் உயிர்பெறும்.
பெருந்தன்மையான மனம், அன்பான பேச்சு, சேவை குணம் இந்த மூன்று காரணிகளும் நம்மிடம் இருந்தால், வாழ்க்கையில் நாம் போற்றத்தக்க மனிதனாக வாழ்வதை யாராலும் மாற்ற முடியாது என்று புத்தர் கூறுகிறார். ‘இந்த நிமிடமே இறக்க நான் தயார்’ என்று யார் ஒருவர் மனவலிமையோடு சொல்கிறானோ, அவன் வாழ்வை முழுவதும் வாழ்ந்து விட்டான் என்று ஜென் தத்துவம் கூறுகிறது. வாழ்க்கையை நகர்த்துவதே இங்குக் கடினமாக இருக்கிறது; இதில் எங்குபோய் உயர்த்துவது எனும் எண்ணத்தை உறங்கவைத்து விட்டு, வீறுகொண்டு விழித்தெழுவோம்! ஏனென்றால், வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும்.
தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்!
தொடர்ந்து பயணிப்போம்...