Namvazhvu
அக்டோபர் 02 -​​​​​​​ உலக அகிம்சை தினம் அகிம்சை மனித இனம் பின்பற்ற வேண்டிய அறவழி
Thursday, 26 Sep 2024 11:51 am
Namvazhvu

Namvazhvu

அமைதிக்கான வழி அகிம்சை. அறப்போராட்டம் என்றால் அது அகிம்சை போராட்டம்தான். உலகமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதாக அமைதி வழியில் பயணிக்க வேண்டும் என்பதுதான் அகில உலகத் தலைவர்களின் கனவு. ஆனால், மீண்டும் உலகத்தில் இன்று போர்களும் வன்முறையும் பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளன. இவை அனைத்தும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் கொடிய அரக்கனாக, மனித இனத்தை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன. மீண்டும் ஓர் அகிம்சைக்கான தேவை எழுந்துள்ளது என்றால் மறுக்க முடியாது. பயங்கரவாதத்தைக் குறைகூறுவதை விட்டுவிட்டு, உலக நாடுகள் அகிம்சையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் மீண்டும் உருவாகியுள்ளது.

“உலக வரலாற்றில் உண்மையும், அன்புமே எப்போதும் வென்றுள்ளன. சில காலங்களில் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும் கூட ஆண்டுள்ளனர். ஆனால், அவர்களும் வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்” என்றார் மகாத்மா காந்தி.

‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமின்றி’ அகிம்சை என்ற பேராயுதத்தால் வன்முறையின் வாயில்களை மூடி, அமைதியின் கதவுகளைத் திறந்து, இந்திய மக்களை அகிம்சை என்ற அறவழிப் போராட்டத்திற்கு அழைத்தவர் நம் தேசப்பிதா காந்தியடிகள். உப்பு சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல அறப்போராட்டங்களை நடத்தி, இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை 2007 - ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை அகில உலக அகிம்சை தினமாக அறிவித்தது. கடந்த நூற்றாண்டில் காந்தியடிகளின் அமைதி சிந்தனை எப்படி உலகம் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. அகிம்சை மனித இனம் கொண்டாட வேண்டிய ஒரு சிறந்த வழிமுறை மட்டுமல்ல, செயல்பாடும்தான்.

‘கண்ணுக்குக் கண்’ என்பது உலகம் முழுவதையும் குருடாக்கிவிடும் என்ற காந்தியின் சிந்தனைப்படி மனித குலம் பயணிக்காமல் இன்னும் இருந்தால் உலகத்தில் குருடர்களும், பொக்கை வாயர்களும்தான் இருந்திருப்பார்கள். “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்” (மத் 5:38-39). இதுதான் இறைமகன் இயேசுவின் போதனை.

‘இயேசு மனித குலத்தின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவர்’ என்று எழுதினார் காந்தியடிகள். புதிய ஏற்பாட்டின் மலைப்பொழிவு அவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இதைப்பற்றி அவர் கூறுவது, ‘அது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது’ மற்றும் ‘எனக்கு ஆறுதலையும் அளவற்ற மகிழ்ச்சியையும் அளித்தது’ என்று கூறியுள்ளார். மேலும், கிறிஸ்தவர்கள் நாம் மலைப்பொழிவில் கைவிட்ட அகிம்சையை அவர் கடைப்பிடித்தார். “என் மதம் சத்தியத்தையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டது. வாய்மையே என் கடவுள்; அகிம்சையே அவரை உணரும் வழிமுறையாகும்” என்றார் காந்தி.

அகிம்சை வழியைக் கொண்டு கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், “கிறிஸ்து நமக்கு இலக்குகளையும், மகாத்மா காந்தி தந்திரங்களையும் கொடுத்தார்” என்று ஒருமுறை கூறினார். அவர் மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க, அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு உதவ அகிம்சையை விருப்ப ஆயுதமாக ஏற்றுக் கொண்டார்.

தென்னாப்பிரிக்க மக்களின் தலைசிறந்த தலைவராகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா, 20 -ஆம் நூற்றாண்டின் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மற்றொரு மாபெரும் மனிதர். அவர் மகாத்மா காந்தியை அவரது சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக அடிக்கடி குறிப்பிடுகிறார். அவர் ஒரு முறை மேற்கோள் காட்டுவது, “தென்னாப்பிரிக்காவின் மாற்றத்தில் காந்தியின் கருத்துகள் முக்கியப் பங்கு வகித்தன. மேலும், காந்தியின் போதனையின் உதவியுடன் நிறவெறி முறியடிக்கப்பட்டது” என்கிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஒருமுறை கூறும்போது “என்னுடைய உண்மையான ஹீரோ மகாத்மா காந்தியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்றும், அவர் “அமைதியின் தூதர்” எனவும் கூறி அவரது உருவப்படத்தைத் தனது அலுவலகத்தில் வைத்தார்.

இன்றும் நமது நாட்டிற்கும் உலகிற்கும் தேவையான ஒரு பாதை அகிம்சை பாதை. அதை அழிய விடாமல் காக்க வேண்டியது நமது கடமை. போர் மேகம் சூழ்ந்த உலகில், பயங்கரவாதமும் வன்முறையும்தான் விடுதலைக்கான எளிய வழி என நினைக்கும் போராளிகள் மத்தியில், அகிம்சையை விட சிறந்த ஆயுதம் வேறு  எதுவும் இல்லை என நிரூபிக்க வேண்டும்.

நமக்கு முன் அகிம்சை வழியில் வென்ற மகாத்மாக்களும் வாழ்ந்த உலகம் இவ்வுலகம். அகிம்சையே அறவழி என எங்கும் வெல்லட்டும். வருகின்ற காலத்திலும் மோதல்களுக்கு அகிம்சையே தலைசிறந்த வழி என்ற நம்பிக்கை பிறக்கட்டும்.