Namvazhvu
மாற்றம் கண்ட இலங்கையும், மறுமலர்ச்சி கொண்ட வெற்றியும்!
Friday, 04 Oct 2024 04:04 am
Namvazhvu

Namvazhvu

விடுதலைக் கனவுஎன்பது அடிமைத்தனத்தில் சிக்குண்ட மனித குலத்தின் உணர்வில் வெகுண்டெழும் உரிமைக்கான தாகம். இந்திய விடுதலை வரலாறும், உலக நாடுகளின் விடுதலைப் புரட்சிகளும் உணர்த்தும் பேருண்மை இது. விடியல் வாசல் கண்ட விடுதலைக் காற்று சுமந்து வந்த நம்பிக்கைகளும் குறிக்கோள்களும் உணர்த்திய இலக்கும் அதுவே!

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயரின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிகெரில்லாப் போர்நடத்திய சூர்யாசென், 37 வயதில் தூக்கிலிடப்படுவதற்கு முன், தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில், நண்பர்களே! ஒன்றை மட்டும் உங்களுக்கு என் நினைவாக விட்டுச் செல்கிறேன்; அதுவேவிடுதலை இந்தியாஎன்னும் என் பொற்கனவு. இக்கனவை நனவாக்க நம் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்; எந்த நிலையிலும் ஓரடிகூட பின்வாங்க முயல வேண்டாம்; நம் தேசத்தின் அடிமைப்பொழுது முடிந்து விடும்; விடுதலையின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள்; எல்லாரும் எழுங்கள்; அவநம்பிக்கை அடையாதீர்கள்; வெற்றி விரைவில் வந்து சேரும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய உணர்வில்தான் தெற்காசியாவின் இந்தியப் பெருங்கடல் ஒன்றியத்தில் அமைந்துள்ள இலங்கை நாட் டில் நம் ஈழத்தமிழர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க பல்வேறு போராட்டங்கள், யுத்தங்கள் என அரசியல் களம் கண்டனர். யாவும் கையறு நிலையாகிப் போன சூழலில், மக்கள் சிங்கள இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும், கொடுமைகளுக்கும், ஆட்சியாளர்களின் கடும் சட்டதிட்டங்களுக்கும் ஆளாகி வாழ்க்கையே தொலைந்து, தங்கள் கனவு சிதைக்கப்பட்டு, துன்பத்தில் பொழுதை நகர்த்துவது இன்று அன்றாட நிகழ்வுகளாகிப்போயின. இன்னும் அவர்கள் மறுவாழ்வு காணாததும்; அங்கு புனரமைப்புப் பணிகள் நிறைவேறாததும் பெரும் கவலையளிக்கின்றன.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போர், 2009 - ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது, ஆட்சியில் இருந்த மகிந்திர இராஜபக்சே குடும்பத்தார் வெற்றிக் களிப்பிலும், சுயநலப் பேராசையாலும் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். உலகமெங்கும் பேரச்சம் தந்தகொரோனாபெருந்தொற்றுக் காலத்திலும் தொடர்ந்த இவர்களின் பொருளாதாரச் சுரண்டலால் நாடு நிதி நெருக்கடிக்கு ஆட்பட்டு, கடனில் மூழ்கியது; பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்தது. விலைவாசி உயர, மக்கள் வாழ்வாதாரம் சிதைய, மக்கள் போராட்டம் எங்கும் வெடிக்க, இலங்கை மீண்டும் போராட்டக் களமானது. அதிபராக இருந்த கோத்தபய இராஜபக்சே இராஜினாமா செய்து நாட்டை விட்டுத் தப்பியோடிய சூழலில், பதவியேற்ற இரணில் விக்கிரமசிங்கே உலக நாடுகளின் உதவிகளோடு பொருளாதாரத்தைச் சீர்செய்த சூழலில், இப்போது பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து இலங்கை சற்றே மீண்டு வந்து, ஒரு பெரும் தேர்தலைச் சந்தித்திருக்கிறது.

2022-ஆம் ஆண்டில் நடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் வன்முறைகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெறுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உலக அரங்கில் ஏற்படுத்தியது. இலங்கை அதிபராக இருந்த இரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஜே.பி. எனும் சமாகி சன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மகிந்திர இராஜபக்சேயின் மூத்த மகன் நாமல் இராஜபக்சே, ஈழத்தமிழர் பொது வேட்பாளரான அரிய நேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி முன்னணிக் கட்சியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்க என 38 வேட்பாளர்களைக் களம் கண்டது இத்தேர்தல்.

செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெற்ற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணிக் கட்சி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று சனநாயக சமதர்ம குடியரசு நாடான இலங்கையின் ஒன்பதாவது அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். சனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) என்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த இவர் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபருக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணிக் கட்சி மூன்று விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்திருந்த நிலையில், அதன் வளர்ச்சி இன்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது யாவரையும் புருவம் உயர்த்தச் செய்கிறது. ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இப்போது தேர்தல் அரசியலில் தீவிரப் பணியாற்றி வருவதுடன், கோத்தபய இராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் முன் நின்று மக்களை ஒன்றுதிரட்டினர்.

பெரும் போட்டியாகக் கணிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் அதிபராக இருந்த இரணில் விக்ரமசிங்கே, தான் செய்த பொருளாதார மீட்புச் செயலுக்காக மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவரை எதிர்த்து நின்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், இஸ்லாமிய அமைப்புகளும் பேராதரவு தந்தன. ஆயினும், இலங்கையில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் தமிழர்கள் மத்தியில், முந்தைய தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் ஒற்றுமையின்றி பல்வேறு அணிகளாகப் பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடு எடுத்தனர்.

ஈழத்தமிழர்களைப் பிரித்துவிட்டு இலங்கையை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது. தமிழ் ஈழம் சிதைக்கப்பட்டபோது அதிகமாகப் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு இன்னும் சரியான வாழ்க்கை அமையவில்லை; இலங்கை அரசியலில் சரியான அதிகாரம் கிடைக்காமல் இவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் எதிர்கொண்ட கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் தீர்வு காண ஈழத்தமிழர் பொது வேட்பாளரான அரிய நேந்திரனை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், கள நிலவரம் வேறுபட்டிருந்தது.

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்காகப் பூமிப்பந்தில் முதல் குரல் எழுப்பக்கூடிய நிலமாக இருந்த தமிழ்நாட்டின் இன்றைய சூழலும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினைகளில் குரல் கொடுத்த அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எல்லாம் இன்று விலகி நிற்பதும், மௌனம் காப்பதும் தமிழரின் பொது கருத்துகளுக்கு முரணாக நிற்பதுமே காட்சியாகிப் போனது. ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்தேர்தல் பற்றிய எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் தமிழ்நாடு இருந்தது வியப்பூட்டுகிறது.

2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு வலிமையான தலைமை இல்லாத ஈழத்தமிழர்கள் கைவிடப்பட்டவர்களாகவே நிற்கின்றனர். இச்சூழலில் ஈழம் சார்ந்த, ஈழ விடுதலை சார்ந்த முழக்கங்களோ எங்கும் எழுந்து விடக்கூடாது என ஈழ ஆதரவு சக்திகளைத் திட்டமிட்டே ஒடுக்கும் அரசியல் களம் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எரிமலையாக இப்பிரச்சினையை அன்று எதிர்கொண்டவர்கள் இன்று மௌனம் சாதிப்பது ஒன்றிய, ஏகாதிபத்திய அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே.

இத்தகைய சூழலில், ஜே.வி.பி. தலைவர், இடதுசாரி மற்றும் சிங்கள பேரினவாதி என வினோத அடையாளம் கொண்ட அநுர குமாரா திசாநாயக்க, இலங்கைத் தேர்தலில் களம் கண்டு வெற்றி கொண்டு, “பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கனவை நனவாக்குவதற்குப் பல சிரமங்கள் மத்தியில் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பயன் அளித்திருக்கிறது. இது கூட்டு முயற்சியின் பெரும் பேறாகும். இது அனைவரது வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வை மாத்திரமன்றி, உயிர்களையும் கூட தியாகம் செய்திருக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த எம் மக்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்குத் தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினைப் புதிதாக எழுத எமக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாக அமைத்துக்கொள்வதற்கு இந்த மண்ணுக்கும் புத்தம் புதிய தொடக்கம் ஒன்று அவசியமாகிறது. சிங்கள, தமிழ், இஸ்லாமியர் என அனைவரும் ஒன்றிணைந்து, மறுமலர்ச்சி யுகத்தைக் கட்டி எழுப்ப வாருங்கள்; கைகோர்ப்போம்!” எனத் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆயினும், இந்த வெற்றிக்குப் பின்னால் இலங்கை மக்களும், ஈழத்தமிழர்களும் எதிர்நோக்கி இருக்கும் மாற்றத்திற்கான கேள்விகள் ஆயிரம் தொக்கி நிற்கின்றன. இராணுவ நடவடிக்கையின் மூலம் மட்டுமே தமிழர் பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும் என்பதைக் கொள்கையாக அறிவித்தவர் இலங்கையின் புதிய அதிபர். சிங்கள-பௌத்த பேரின வாதத்தை நியாயப்படுத்திய கடுங்கோட்பாட்டுவாதியும் கூட. எனவேதான், ‘ஈழத்தமிழர்களின் இனி வரும் காலம் எப்படி இருக்கும்?’ என்ற ஒரு கேள்வி நம்மைக் குடைகிறது. பெயரில் மட்டும் இடதுசாரித் தன்மையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியால் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வும் மாற்றமும் ஏற்றமும் காணும் என்பது சிலருடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அது ஏமாற்றத்தில் முடிந்துவிடாமல் இருந்தால் நல்லது.

புதிய அதிபரின் தலைமையில் இலங்கை பொருளாதாரம் ஏற்றம் காணவும், மக்கள் மகிழ்ந்திருக்கவும், ஒற்றுமை ஓங்கி இருக்கவும், தமிழ் ஈழமக்கள் மாண்புடன் மதிக்கப்படவும், இந்தியா- இலங்கை மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இனிதாகத் தீர்க்கப்படவும் இந்தத் தேர்தல் வெற்றி வழியாக இலங்கை அரசு புது யுகம் படைக்க வாழ்த்துவோம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்