1921-ஆம் ஆண்டு, 144 தடை உத்தரவை மீறிக் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடக்கிறது; தந்தை பெரியார் கைது செய்யப்படுகிறார். மறுநாள் நாகம்மையும், பெரியாரின் சகோதரியான கண்ணம்மாளும் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எழுச்சி பெரிய அளவில் திரள்கிறது. அரசு காந்தியடிகளை அழைத்து, போராட்ட முடிவிற்கு வழி கேட்கிறது. காந்தியடிகள் கூறினார்: “கள்ளுக்கடை மறியல் போராட்டம் முடிய வேண்டும் என்றால், நான் முடிவெடுக்க முடியாது. ஈரோட்டில் உள்ள பெண்மணிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.” ஏனெனில், பெரியார் குடும்பத்தார் ஈரோட்டில் தங்களது தோப்பில் உள்ள 500 தென்னை மரங்களை வெட்டிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழ்நாட்டில் பல தாலுக்கா, பஞ்சாயத்துப் போர்டுகள் தங்கள் வருவாயை மறுத்து, தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்க குத்தகைக்குவிடவில்லை. அக்காலம் குடியைச் சமூகக் குற்றமாகப் பார்த்த காலம். இன்றுபோல் இது சமூக அந்தஸ்து என்ற பசப்பு இல்லாத சூழல். சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டில் 1971 -ஆம் ஆண்டு தி.மு.க. அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்தான் அரசுக்கு வருவாய் ஈட்ட மதுவிலக்கு இரத்து என்ற முன்மொழிவை வைத்தது.
அன்று பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆகிய மூத்த முன்னணித் தலைவர்கள் மதுவிலக்கை நீக்க வேண்டாம் என அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் வேண்டினர்; இல்லை... ‘மன்றாடினர்’ என்ற வார்த்தைப் பதமே இங்குச் சரியானதாகும்.
“ஒன்றியத்தை ஆளும் இந்திரா அரசு நாங்கள் கேட்ட நிதியைத் தருவதில்லை. மாநில அரசு நிதி இல்லாமல், நிர்வாகம் நடத்தச் சிரமப்படுகிறது. மேலும், கொளுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்துக்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக, தமிழ்நாடு எத்தனை காலத்திற்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்றார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
‘மதுப்பிரியர்கள்’ பாண்டிச்சேரிக்கும், பெங்களூருவுக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் சென்று குடிக்கிறார்கள் என மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார் கருணாநிதி. ‘இந்தியா முழுவதிற்கும் மதுவிலக்கு இருந்தால்தான் இங்கும் சாத்தியம்’ எனவும் அவர் கூறினார். காலத்தின் கட்டாயம், கருணாநிதி அவர்களால் 01.09.1974 முதல் மீண்டும் தமிழ்நாட்டில் மது விலக்கு அமலானது. கள்ளச்சாராயம் அதிகமானது. கள்ளச் சாராய மரணங்கள் அதிகரித்தன. மது விலக்கு குறித்துத் தீவிர எண்ணம் கொண்ட எம்.ஜி. இராமச்சந்திரன் முதல்வராகிறார். கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை குறித்த தண்டனைகளை அதிகப்படுத்துகிறார்; இறுக்குகிறார். ஆனால், கட்டுப்படுத்த முடியாத நிலை தெரிகிறது. இது மனித உடலின் டி.என்.ஏ. சம்பந்தப்பட்ட, பாரம்பரியக் கடத்தல் எனப் புரிகிறார். 01.05.1981 முதல் மதுவிலக்கை எம்.ஜி.ஆர். நீக்குகிறார். அது இன்று அரசே விற்பனை செய்யும் டாஸ்மாக் வரை வளர்ந்து, வீரியமாக, நச்சுச்செடியாக உயர்ந்து நிற்கிறது.
4,829 கடைகள் வழியே அரசிற்கு 45,855.67 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டித் தருகிறது டாஸ்மாக். தி.மு.க. அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிப்படி 500 கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்ற சிறு குறிப்பும் உண்டு. ஆயினும், ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்புப் பகிர்வால் தமிழ்நாடு நிதிநிலையில் தேக்கம் பெறுவதற்கு ஒரே மாற்று வழி டாஸ்மாக் வருவாய் எனப்படுகிறது. ‘விதை நெல்லை விற்று விட்டு விவசாயம் செய்ய முடியுமா?’ என்ற பதில் கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் குடிநோயாளிகள் பெருகி விட்டார்கள். இளம் விதவைகள் அதிகரித்து விட்டார்கள். தமிழ்நாட்டின் மனிதவளம் அழிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. சாலை விபத்துகள் அதிக அளவில் நிகழ்கின்றன. குடும்பத் தகராறுகள் எல்லை மீறிப் போகின்றன. சமூகக் கட்டமைப்பையே இது அழிக்கிறது. கொலை, கொள்ளை அதிகரித்து விட்டன. பாலியல் குற்றங்கள் பெருகி விட்டன. தவறான மனித உறவுகள், அது குறித்த குற்றங்கள், வழக்குகள் வெளிச்சம் பெறுகின்றன.
மதுவிலக்குத் தேவையா?
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., மக்கள்நலக் கூட்டணி என அனைவரும் ஒரே குரலில் ‘பூரண மதுவிலக்கு’ என்றனர். ஆனால், அ.தி.மு.க.வோ அன்றும், இன்றும் படிப்படியாக மதுவிலக்கு என்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்ற குரல்களும் உள்ளன.
இன்று பீகார், குஜராத், மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்களிலும், இலட்சத்தீவு என்ற யூனியன் பிரதேசத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இவ்வாறிருக்க, தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு வேண்டும் என்ற குரல்கள் உருப்பெற்றன. அதன் ஒரு வடிவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் பிரிவு நடத்தும் மதுஒழிப்பு மாநாடு, அதற்கு அ.தி.மு.க.விற்கு அழைப்பு எனத் தமிழ்நாட்டு அரசியல் களம் வெப்பமானது.
கடந்த காலங்களில் 2015-இல் காந்தியவாதி சசி பெருமாள் தொலைபேசி கோபுரத்தில் ஏறி, பூரண மதுவிலக்கு வேண்டி போராடி, வீரமரணம் அடைந்தார். அது முதல் தாக்கம் எனில், இன்று வரை மதுவிலக்கிற்குப் போராடும் நந்தினி வரை பலரும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் ஏற்படுத்திய மாற்றங்கள், மதுவிலக்குச் சாத்தியங்களையே பேச வைக்கின்றன.
மதுவிலக்கு சாத்தியம் என்பதற்கான காரணங்களை வரிசையாய்ப் பார்ப்போம். பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் குடிநோயாளிகள், மன நோயாளிகளாக மாறிவிடுவர். அவர்களின் உடல் நிலை, உறக்கம், உணவு உட்கொள்ளலில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். அது உண்மையல்ல; ‘கோவிட்’ பெருந்தொற்று காலத்தில் அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இல்லையே! இது வறட்டு வாதம் என அன்றே தெளிவானது.
கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறார்கள். தமிழ்நாடு அரசு மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களுக்குப் பிறகு கள்ளச்சாராயம் விற்போருக்குப் பத்து இலட்சம் அபராதம், சொத்துகள் பறி முதல், ஆயுள் தண்டனை என்றது. தண்டனைகளை அதிகப்படுத்துவது, பயத்தை அதிகமாக்கும். இருப்பினும் மது மற்றும் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பள்ளிகளில், வீதிகளில் தீவிரப்படுத்த வேண்டும்.
தனிமனிதப் பிரச்சினைகள் இவ்வாறாகத் தெளிய, ஆளும் அரசுகளோ இப்படித் தெரிவிக்கிறது: ‘மது விற்பனை வருவாய் ஒன்றே எங்கள் முக்கிய வருவாய்; அதன் வழிதான் அரசே நடக்கிறது. அதை இழக்க இயலுமா?’ ‘முடியும்’ என மாற்று வருவாய் இனங்களைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
1. மணல், குவாரி உள்பட்ட அனைத்துக் கனிம வளங்களையும் அரசே முழுவதும் நடத்தி, அதன்வழி வருவாய் ஈட்டலாம். கனிமவளக் கொள்ளையும் தடுக்கப்படும். தனிநபர் கொள்ளையை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
2. அரசுப் பொதுப் போக்குவரத்து (வாடகைக் கார்கள், தனியார் பேருந்துகள்), திரையரங்க இருக்கைப் பதிவுகள், தனியார் நிறுவன இணைய சேவைகள் என அனைத்தையும், அரசின் இணைய சேவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இணைய சேவைகள் வழங்கல்.
3. பால் விற்பனையில் உள்ள தனியார் நிறுவனங்களை அகற்றிவிட்டு. முழு பால் கொள்முதல் விற்பனையை அரசே ஏற்று நடத்துதல்.
4. பத்திரப் பதிவுத் துறைகளில் உள்ள அனைத்து இடைத்தரகர்களையும் எடுத்துவிட்டு, முழு அரசு சேவை நிறுவனமாக, பத்திரப் பதிவுத் துறையை மேம்படுத்துதல்.
கட்டுரையைப் பொறுமையாக வாசித்த சிலர் கேட்கலாம்... ‘மது அருந்துவது தனிமனிதப் பிரச்சினைதானே? இதற்குத் தடை எதற்கு? விவாதங்கள் எதற்கு?’ என்று. மது அருந்துவது என்பது தனிமனிதனின் பிரச்சினை அல்ல; அது முதலில் குடும்பத்தின் பிரச்சினை; பின்பு சமூகத்தின் பிரச்சினை; அதற்கும் பின்னாக ஊரின் பிரச்சினை; அது தீர்வை எட்ட வேண்டிய நாட்டின் பிரச்சினை.
எனவே, பூரண மதுவிலக்கிற்கு ஓங்கி, ஒன்றிணைந்துக் குரல் கொடுப்போம். மதுவிலக்கு நாளைய நாளிலேனும் சாத்தியமாகட்டும்!