Namvazhvu
அத்தை சிஸ்டர் சொன்ன கதைகள்
Friday, 04 Oct 2024 09:55 am
Namvazhvu

Namvazhvu

அத்தை சிஸ்டர்’ - என் அப்பாவின் தங்கை. நான் அவருக்குச் செல்லம். சிறுவயதில் மடத்திலிருந்து ஊருக்கு வந்தாலும் சரி, நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்றாலும் சரி, என்னைச் சிறப்பாகக் கவனிப்பார். என்னைப் படிக்கச் சொல்லி வழிகாட்டியவர் அவர்தான். அத்தை சிஸ்டர் இல்லைன்னா நான் ஓர் ஆசிரியர் ஆகியிருக்கமாட்டேன்.

அத்தை பல பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியரா இருந்திருக்காங்க. சபையில பல முக்கிய பதவிகள் வகித்திருக்காங்க. சில வருடங்கள் வட இந்தியாவில் மிசனரியாவும் இருந்திருக்காங்க. நான் அவங்க சொன்ன மூன்று கதைகளை உங்களுக்குச் சொல்லப்போறேன்.

கிரேஸின் செபம்:

ஒருநாள் அத்தை சிஸ்டர் மறைக்கல்வி நடத்தினார். அப்போ அவங்க சின்ன சிஸ்ட்டர்தான். பள்ளிக் கூட போர்டிங்க் பிள்ளைகளுக்கு மறைக்கல்வி. அப்ப பிள்ளைகள்கிட்டஇன்றைக்கு மாதா உங்க முன்னாடி வந்தா என்ன கேப்பீங்க?’ என்று கேட்டார். அவங்க ஒருத்தர் ஒருத்தர பாத்துக்கிட்டுபென்சில்’, ’நோட்டு’, ‘பலகாரம்’, ‘டிரெஸ்’, ‘யூனி பார்ம்’, ‘ஜியாமெற்றி பாக்ஸ்அப்படி பலதும் கேட்டாங்க.

அத்தை சிஸ்டர் சிரித்தபடியே எல்லாத்தையும் மனசுக்குள்ள பதிச்சிக்கிட்டார். ஆனா ஒரே ஒரு பெண் மட்டும் எதையுமே சொல்லாம இருந்தா. சிஸ்டர் அவளப் பாத்துகிரேஸ், உன் முன்னால மாதா வந்தா நீ என்ன கேட்ப?’ என்று கேட்டார். அவள் உடனடியாகஎப்படி இருக்கீங்கண்ணு கேப்பேன்?’ என்றாள் கிரேஸ். ‘அவ்வளவுதானா?’ என்றார் அத்தை சிஸ்டர். ‘ஆமா. அவ்வளவுதான்என்றாள் கிரேஸ்.

அன்று இரவு அத்தை சிஸ்டர், எல்லாப் பிள்ளைகளும் தூங்கின நேரம் அவங்க அவங்க கேட்டத எல்லாம் அவங்க அவங்க தலையணைக்குக் கீழ வச்சிட்டாங்க. கிரேஸ்தான் எதுவும் கேட்கலியே... அதனால அவளுக்கு ஒண்ணும் வைக்கல.

அடுத்த நாள் எல்லாரும் ஒருத்தர் ஒருத்தருக்குக் கிடைச்ச பரிச எடுத்துக்கிட்டு சிஸ்டர்கிட்ட போய் காமிச்சு, சந்தோஷமா கொண்டாடினாங்க. சிஸ்டர் யாரைத் தேடியிருப்பாங்கண்ணு உங்களுக்குத் தெரியும் இல்லையா? கிரேஸ் வந்தாள்.

கிரேஸ் உனக்கு மாதா ஒண்ணுமே குடுக்கலியா?” என்று கேட்டார் அத்தை சிஸ்டர்.

கிரேஸ் கொஞ்சம் யோசித்துவிட்டுநான் அவங்க வீட்டுக்குப் போகும்போது எனக்கு எல்லாம் தருவாங்கஎன்றாள்.

அத்தை சிஸ்டர் எனக்குச் சொன்னாங்க: “அன்று தொடங்கி நான் என் செபத்தை மாற்றிக்கிட்டேன். அது வேணும், இது வேணும்னு கேட்காமமாதாவே, இயேசுவே நல்லா இருக்கீங்களா? உங்கள நோகடிக்கும்படி எதையாவது செஞ்சிருந்தா மன்னிச்சிருங்கஎன்று செபிப்பது என் வழக்கமாயிடுச்சு.”

அண்மையில் அத்தை சிஸ்டரைப் பார்க்கப் போகும்போது கேட்டேன். “அத்தை, நீங்க சொன்ன அந்தக் கிரேஸ் பொண்ணு இப்ப என்ன செய்யுறாங்களோ?” அவங்க சிரிச்சுகிட்டேஅந்தா, தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திக்கிட்டிருக்காங்களே அந்தச் சிஸ்டர்தான் அந்தக் கிரேஸ்என்றார்கள்.

டாஸ்மாக் பயணி:

ஒரு மாணவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தான். அவனைத் தலைமை ஆசிரியை அறைக்கு அனுப்பினார் வகுப்பாசிரியர். அத்தை சிஸ்டர்தான் தலைமை ஆசிரியை. அவன் பத்தாம் வகுப்பு பையன். அவன் பெயரை, வகுப்பை எல்லாம் விசாரித்துவிட்டுஏன் லேட்டா வந்த?” என்றார் சிஸ்டர். அவன் எதுவும் சொல்லாமல் நின்றான். “சொல்லு, என்ன காரணத்துக்காக லேட்டா வந்த?” என்று மிரட்டும் தொனியில் கேட்டார். “சொன்னா நீங்க அடிப்பீங்கஎன்றான் அவன். “அடிக்கமாட்டேன் சொல்லு.”

அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்: “எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு தாத்தா இருக்காரு. அவர தினமும் நம்ம ஸ்கூல் பக்கம் சைக்கிள்ல கொண்டு விடுவேன்.… உன்ன ஒருத்தர் ஒரு கல் தூரம் வரக் கட்டாயப்படுத்தினா, ரெண்டு கல் தூரம் அவரோடு போங்கண்ணு நேத்து சர்ச்சுல பாதர் சொன்னாரு.”

அதனால....?” சிஸ்டர் ஆர்வத்தை மறைத்துக் கொண்டு கோபமாய்க் கேட்டார்.

அதனால இன்னைக்கு அவரக் கொஞ்ச தூரம் அதிகமா கொண்டு விட்டேன்என்றான். சிஸ்டர் அவனைத் தண்டிக்கவில்லை. அடுத்தவங்களுக்கு உதவுறதும் முக்கியம்; அதேபோல பள்ளிக்கு நேரம் தவறாம வருகிறதும் முக்கியம் என்று அறிவுரை சொன்னார். அவன் வெளியே போகும்போது சிஸ்டர் கேட்டார்: “எங்க கொண்டு போய் விட்ட?”

அவன் சொன்னான்: “டாஸ்மாக்குக்கு.” 

சிஸ்டர் உறைந்துபோய்விட்டார். ‘என்ன சொல்கிறான் இவன்?’ அவனைக் கூப்பிட்டுத் தண்டிக்க நினைத்தார். அதற்குள் அவன்தாத்தா அங்க கிச்சன்ல வேலை செய்யுறார்என்றான்.

மன்னிப்பின் சுவை:

மற்றொரு சின்னக் கதை. அத்தை சிஸ்டர் வேறொரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக இருந்த நேரம் ஓர் இன்ஸ்பெக்சன். ஒரு டீச்சர்கிட்ட சில கோப்புகளை முடிக்கச் சொல்லி குடுத்திருந்தாங்க. அத்தைக்கு ரொம்பப் பிடித்த டீச்சர். உதவி தேவைன்னா முதல்ல அவங்களத்தான் கூப்பிடுவாங்க. ஆனா இன்ஸ்பெக்சன் அன்னைக்குச் சரியான நேரத்துக்கு அவங்க வரல. அத்தை சிஸ்டருக்கு ரொம்ப அவமானமா போச்சு. இன்ஸ்பெக்டர் பரவாயில்லைன்னு சொன்னாலும், அவங்களுக்கு மனசு கேக்கல. இன்ஸ்பெக்டர் கிளம்பிப் போகிறதுக்கு முன்னால, டீ குடிக்கிற நேரத்துக்கு டீச்சர் வந்துட்டாங்க. சிஸ்டர் அவங்ககிட்ட பேசவே இல்லை. இன்ஸ்பெக்டர் பேப்பர எல்லாம் பாத்து ரிப்போர்ட் எழுதிட்டு போயிட்டார். சிஸ்டர் அந்த டீச்சர்கூட நாலு நாள் பேசவே இல்லை. டீச்சரும் பயந்துகிட்டு அவங்ககிட்ட எதுவும் சொல்லல.

நாலாவது நாள் மடத்துல நல்ல கேசரி செஞ்சிருந்தாங்க. அப்பதான் பைனாப்பிள் துண்டுகளைப் போட்டுக் கேசரி செய்யுறது பிரபலமாய் இருந்துச்சு. சிஸ்டர் ஒரு பாத்திரத்துல கேசரிய எடுத்துட்டு வந்து, அந்த டீச்சர கூப்பிட்டு அவங்களுக்குக் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டாங்க.

அன்றைக்கு என்ன ஆச்சி டீச்சர்?’ என்று கேட்டார் அத்தை.

ஜாய்சிக்குக் காய்ச்சல். கொஞ்சம் பயந்துட்டேன். டாக்டர்கிட்ட போனா ரொம்பக் கூட்டம்.”

ஜாய்சி அவருடைய கடைசிக் குழந்தை. நீங்க நினைக்கிறதுபோல அப்பெல்லாம் செல்பேசி எல்லாம் கிடையாது. இருவரும் கேசரியைச் சிறு துளியும் மீதியில்லாமல் சாப்பிட்டார்கள். டீச்சர் சிரித்தபடியேஇன்னைக்கு இந்தக் கேசரி ரொம்பச் சுவையா இருக்கே, இதுல என்ன சேத்திருக்காங்களோ?” என்றார். அத்தையும் சிரித்தபடியேஅது மன்னிப்பின் சுவை. நான் உன்னையும், நீ என்னையும் மன்னிச்சுட்டோம்லஎன்றாராம்.