Namvazhvu
பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு (13-10-2024) சாஞா 7:7-11; எபி 4:12-13; மாற்கு 10:17-30
Thursday, 10 Oct 2024 06:31 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

இறையாட்சிக்கும் செல்வத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இயேசு இன்றைய திருவழிபாட்டு வாசகத்தின் வழியாக எடுத்துரைக்கிறார். செல்வம் என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. தினந்தோறும் கடினப்பட்டு உழைப்பதன் நோக்கம், செல்வத்தைச் சேமித்து வைக்கத்தான். செல்வத்தின் நோக்கம் என்பது வெறும் ஆடம்பர வாழ்வுக்குத்தான் என்று எண்ணும் போது, நாம் இறையாட்சியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறோம். ‘என் களஞ்சியத்தை இடித்துப் பெரிதாகக் கட்டுவேன்; இனி உண்டு மகிழ்வேன்என்று தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்தினார் செல்வந்தர் ஒருவர். ஆனால், கடவுள், ‘இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். எனவே, செல்வத்தை வைத்து செல்வத்தைப் பெருக்குவதைவிட, செல்வத்தை வைத்து ஏழைகளுக்கு உதவி செய்யும் போது இறையாட்சியைப் பெற்றுக்கொள்வாய் என்று இறைவன் நமக்கு அழைப்பு கொடுக்கிறார். நம்மிடமுள்ள செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடுக்க நல்ல மனத்தைத் தர வேண்டுமென்று மன்றாடுவோம் இத்தெய்வீக விருந்தில்!

முதல் வாசக முன்னுரை:

ஞானம் என்பது அதிகாரத்தைவிட, செல்வத்தை விட, உடல் அழகை விட மேலானது. ஞானத்தைப் பெற்றவர் அனைத்து வரங்களையும் பெறுகிறார். இதை உணர்ந்த அரசர் சாலமோன் ஞானத்தை மதித்தார். இளமை முதல் அதன்மீது நாட்டம் கொண்டிருந்தார். நாமும் ஞானத்திற்காக இறைவனிடம் மன்றாடுபவர்களாக இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இறைவார்த்தை இருபக்கமும் வெட்டக்கூடிய வாளைக் குறிக்கின்றது. இந்த வாளின் அடையாளம்தான் இன்று நீதி தேவதையின் கையில் உள்ளது. இந்த வாள் எந்த நிலையிலும் தன் வல்லமையை இழக்காது. அதுபோலத்தான் இறைவார்த்தை தன் நிலையிலிருந்து வல்லமை இழக்காத தன்மையோடு இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வளமையான வாழ்வை தரும் இறைவா! பருவ மழை பெய்யும் இந்தக் காலக்கட்டத்தில்  எங்களுக்கும், எங்கள் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் தேவையான நல்ல மழையைத் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தையும் காக்கும் இறைவா! உமது பெயரால் எம்மை வழிநடத்தும் திருத்தந்தை, பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் ஆசிர்வதித்து, மக்களை நேர்மையான வழியிலும், உண்மையான பாதையிலும் வழிநடத்த அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம்மையே எங்களுக்கு உணவாகக் கொடுத்த எம் இறைவா! நாங்களும் எங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து, உண்மையான இறைவனின் மக்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘யாரிடம் செல்வோம் இறைவா? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளனஎன்று கூறிய புனித பேதுருவைப் போல, உம் வார்த்தைகளை நம்பி வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.